Advertisment

மன்மோகன் சிங் நினைவிடம்; ராகுல், பிரியங்கா கண்டனம், இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக நட்டா பதில்

இந்திரா காந்தி நினைவிடம் அருகே மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் கேட்ட காங்கிரஸ்; பா.ஜ.க உடன் வார்த்தைப் போர்; இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஜே.பி நட்டா தகவல்

author-image
WebDesk
New Update
rahul priyanka

ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி

Lalmani Verma , Mahender Singh Manral

Advertisment

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் எரியூட்டப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, தலைநகர் டெல்லியில் அவரது நினைவிடம் அமைப்பதற்கான இடம் தொடர்பாக காங்கிரஸும் மத்திய அரசாங்கமும் புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து வார்த்தை மோதலில் ஈடுபட்டன.

ஆங்கிலத்தில் படிக்க: Manmohan Singh Memorial row: Rahul, Priyanka Gandhi lead Congress attack, Nadda says site shortlisted

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரியும் வயநாடு எம்.பி.,யுமான பிரியங்கா காந்தி ஆகியோர் காங்கிரஸ் தாக்குதலுக்குத் தலைமை தாங்கினர், நிகம்போத் காட் தகன மைதானத்தில் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகளை செய்து அரசாங்கம் அவரை "அவமதித்துவிட்டது" என்று கூறினர்.

Advertisment
Advertisement

மத்திய அமைச்சரும், பா.ஜ.க தலைவருமான ஜே.பி. நட்டா, மன்மோகன் சிங்கின் நினைவிடத்திற்கான இடத்தை அரசாங்கம் தேர்வு செய்து, அது குறித்து அவரது குடும்பத்தினருக்கும் தெரிவித்திருந்த போதிலும், காங்கிரஸ் தவறான தகவல்களை பரப்புவதாக குற்றம்சாட்டினார்.

முன்மொழியப்பட்ட நினைவிடத்தின் இடம் எது என வெளியிட ஜே.பி நட்டா மறுத்த நிலையில், முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் தகனம் செய்யப்பட்ட இடமான கிசான் காட் அருகே ஒரு இடம் மன்மோகன் சிங்கின் நினைவிடத்திற்காக பரிசீலிக்கப்படும் இடங்களில் உள்ளது என்பதை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்திருக்கிறது.

முன்னதாக, நினைவிடத்திற்கு இடம் ஒதுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்திய காங்கிரஸ், இந்திரா காந்தியின் நினைவிடம் அமைந்துள்ள சக்தி ஸ்தல் பகுதியில் இடம் ஒதுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது - கிசான் காட் மற்றும் சக்தி ஸ்தல் இரண்டும் மகாத்மா காந்தி நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட்டிற்கு அருகில் உள்ளது.

வெள்ளியன்று இரவு, மன்மோகன் சிங்கின் நினைவிடத்திற்கு இடம் கோரிய கட்சியின் கோரிக்கை மதிக்கப்படவில்லை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியதை அடுத்து, அரசாங்கம் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாகக் கூறியது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் மன்மோகன் சிங் குடும்பத்தினரிடம், நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்கப்படும் என தெரிவித்ததாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. "இதற்கிடையில், தகனம் மற்றும் பிற சம்பிரதாயங்கள் நடக்கலாம், ஏனெனில் ஒரு அறக்கட்டளை உருவாக்கப்பட்டு அதற்கு இடம் ஒதுக்கப்பட வேண்டும்" என்று அமைச்சகம் கூறியது.

ஆனால் காங்கிரஸ், மன்மோகன் சிங்கின் தகனம் அவரது நினைவிடம் கட்டப்படக்கூடிய இடத்தில் நடக்க வேண்டும் என்று விரும்பியது.

தற்செயலாக, மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசுதான் தனி நினைவிடங்களுக்கான கோரிக்கையைத் தடுத்தது. 2013 இல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவை, இடப்பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, ராஜ்காட்டில் ஒரு பொதுவான நினைவு மைதானத்தை - ராஷ்ட்ரிய ஸ்மிருதி ஸ்தாலை அமைக்க முடிவு செய்தது.

சனிக்கிழமையன்று, நிகம்போத் காட்டில் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு, காங்கிரஸ் மீண்டும் அரசாங்கத்தை குறிவைத்து, அரசாங்கம் முன்னாள் பிரதமரை "அவமதித்துவிட்டது" என்று கூறியது.

மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகளை நிகம்போத் காட்டில் செய்ததன் மூலம், “இந்திய அன்னையின் சிறந்த மகனையும், சீக்கிய சமூகத்தின் முதல் பிரதமரையும்” அரசாங்கம் “அவமதித்துவிட்டது” என்று ராகுல் காந்தி கூறினார்.

“இதுவரை, அனைத்து முன்னாள் பிரதமர்களின் கண்ணியத்தையும் போற்றும் வகையில், அவர்களின் இறுதிச் சடங்குகள் அங்கீகரிக்கப்பட்ட நினைவிடங்களில் செய்யப்பட்டது, இதனால் ஒவ்வொரு நபரும் எந்த சிரமமும் இல்லாமல் இறுதி தரிசனம் மற்றும் அஞ்சலி செலுத்தினர். டாக்டர் மன்மோகன் சிங் நமது உயரிய மரியாதை மற்றும் நினைவுச்சின்னத்திற்கு தகுதியானவர். நாட்டின் இந்த மகத்தான மகனுக்கும் அவரது பெருமைமிக்க சமூகத்திற்கும் அரசாங்கம் மரியாதை காட்டியிருக்க வேண்டும்” என்று ராகுல் காந்தி கூறினார்.

பிரியங்கா காந்தியும் அரசாங்கத்தை கடுமையாக சாடினார்: “டாக்டர் மன்மோகன் சிங்கின் தகனத்திற்கு போதுமான இடத்தை வழங்காததன் மூலம், ஒரு முன்னாள் பிரதமர் பதவியின் கண்ணியம், டாக்டர் மன்மோகன் சிங்கின் ஆளுமை, அவரது பாரம்பரியம், அவரது மரபு மற்றும் சுயமரியாதைமிக்க சீக்கிய சமுகத்திற்கு அரசாங்கம் நியாயம் செய்யவில்லை.”

“முன்பு, அனைத்து முன்னாள் பிரதமர்களுக்கும் மிக உயர்ந்த மரியாதையும் கவுரவமும் வழங்கப்பட்டது. டாக்டர் மன்மோகன் சிங்ஜி இந்த மரியாதை மற்றும் சமாதி ஸ்தலத்திற்கு தகுதியானவர். இன்று உலகம் முழுவதும் அவரது பங்களிப்பு நினைவு கூரப்படுகிறது. இந்த விஷயத்தில் அரசியல் மற்றும் குறுகிய மனப்பான்மைக்கு அப்பாற்பட்டு அரசாங்கம் சிந்தித்திருக்க வேண்டும்” என்று பிரியங்கா காந்தி கூறினார்.

"இன்று காலை, டாக்டர் மன்மோகன் சிங்ஜியின் குடும்பத்தினர் தகனம் செய்யும் இடத்திற்காக போராடுவதையும், கூட்டத்தில் இடம் கிடைக்காமல் சிரமப்படுவதையும், போதிய இடவசதி இல்லாததால் பொதுமக்கள் வெளியில் சாலையில் இருந்து அஞ்சலி செலுத்துவதையும் பார்த்தபோது இதை உணர்ந்தேன்,” பிரியங்கா காந்தி கூறினார்.

எக்ஸ் தளத்தில் தொடர் பதிவுகளில், காங்கிரஸ் ஊடகங்கள் மற்றும் விளம்பரத் துறைத் தலைவர் பவன் கேரா, தூர்தர்ஷனைத் தவிர வேறு எந்த செய்தி நிறுவனமும் நிகம்போத் காட் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை என்றும், தூர்தர்ஷன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மையமாகக் கொண்டிருந்தது என்றும், மன்மோகன் சிங்கின் குடும்பத்தைப் பற்றிய செய்திகளை குறிப்பிடவில்லை என்றும் கூறினார்.

ராணுவ வீரர்கள் ஒரு பக்கம் ஆக்கிரமித்து இருந்ததால், உடல் வைக்கப்பட்டு இருந்த பெட்டியைச் சுற்றி மன்மோகன் சிங்கின் குடும்பத்தினருக்கு போதிய இடவசதி இல்லை என்று பவன் கேரா கூறினார். பொதுமக்கள் வெளியே நிற்க வைக்கப்பட்டு இருந்ததாகவும், மன்மோகன் சிங்கின் பேரக்குழந்தைகள், இறுதிச் சடங்குகளைச் செய்ய, பெட்டியை அடைய இடம் தேடி அலைந்ததாகவும் பவன் கேரா கூறினார்.

அமித் ஷாவின் வாகன அணிவகுப்பு இறுதி ஊர்வலத்தை சீர்குலைத்து, குடும்பத்தினரின் கார்களை வெளியே நிற்க வைத்ததாக பவன் கேரா கூறினார். கேட் மூடப்பட்டது, குடும்ப உறுப்பினர்களை கண்டுபிடித்து உள்ளே அழைத்து வர வேண்டி இருந்தது.

"இறுதிச் சடங்கு நடந்த முழு இடமும் நெரிசலாக இருந்தது மற்றும் மோசமாக ஒழுங்கமைக்கப்பட்டது, ஊர்வலத்தில் பல பங்கேற்பாளர்களுக்கு இடம் இல்லை," என்று பவன் கேரா கூறினார். "ஒரு உயர்ந்த அரசியல்வாதிக்கு இந்த அவமானகரமான நடத்தை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு மரியாதை இல்லாததை அம்பலப்படுத்துகிறது. டாக்டர் மன்மோகன் சிங் கண்ணியத்திற்கு தகுதியானவர், இந்த வெட்கக்கேடான காட்சிகளுக்கு அல்ல,” என்று பவன் கேரா கூறினார்.

தி.மு.க தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினும் காங்கிரசுக்கு ஆதரவாக, மன்மோகன் சிங்கின் குடும்பத்திற்கு அவரது நினைவிடத்திற்கு பொருத்தமான இடத்தில் அவரது இறுதி சடங்குகளை செய்ய உரிமை மறுத்த பா.ஜ.க அரசின் முடிவு, அவரது உயர்ந்த மரபு மற்றும் சீக்கிய சமூகத்தை நேரடியாக அவமதிப்பதாகக் கூறினார். குடும்பத்தினரின் கோரிக்கையை நிராகரித்து, இரண்டு முறை பிரதமராக இருந்தவரை நிகம்போத் காட் பகுதிக்கு அனுப்பியது ஆணவம், பாரபட்சம் மற்றும் அவரது மகத்தான பங்களிப்பை பொதுமக்களின் நினைவிலிருந்து துடைக்க வேண்டுமென்ற முயற்சி என்று ஸ்டாலின் கூறினார்.

குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட ஜே.பி நட்டா, மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் அவருக்கு உண்மையான மரியாதை கொடுக்கத் தவறிய காங்கிரஸ் கட்சி, இப்போது அவரது பெயரை அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துகிறது என்றார்.

மன்மோகன் சிங்கின் அதிகாரத்தை மறைக்க சோனியா காந்தியை "சூப்பர் பி.எம்" ஆக்கியதன் மூலம் பிரதமர் அலுவலகத்தின் கண்ணியத்தை சமரசம் செய்ததும் அதே காங்கிரஸ் தான் என்று நட்டா கூறினார்.

"ஒரு அரசாணையை பகிரங்கமாக கிழித்த ராகுல் காந்தியின் செயல், அப்போது பதவியில் இருந்த பிரதமருக்கு (மன்மோகன் சிங்) செய்த முன்னோடியில்லாத அவமரியாதை நிகழ்வாக உள்ளது" என்று நட்டா கூறினார், ராகுல் காந்தி இப்போது மன்மோகன் சிங்கின் மரணத்தில் அரசியல் செய்கிறார் என்றும் நட்டா குற்றம் சாட்டினார்.

அனைத்து பிரதமர்களையும் கவுரவிக்கவும், அவர்களைப் பற்றி தேசம் அறியவும், அவர்களைப் பொக்கிஷமாகக் கருதவும் பிரதமர்கள் அருங்காட்சியகத்தை மோடி நிறுவினார் என்று நட்டா கூறினார்.

"மறுபுறம், காங்கிரஸ் தங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களுக்கு நினைவிடங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் கட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது," என்று கூறிய நட்டா, காந்தி குடும்பம் தங்கள் குடும்பத்திற்கு வெளியே எந்த தலைவருக்கும் உரிய மரியாதை அல்லது நீதியை வழங்கவில்லை என்றும் கூறினார்.

காந்தி குடும்பம், மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களையும் காங்கிரஸ் தலைவர்களையும் அவமதித்ததாக நட்டா கூறினார். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் இறந்த பிறகும் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தொடர்ந்து அவரை அவமதித்து வருகின்றனர் என்றார்.

காங்கிரஸின் வரலாற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறிய நட்டா, முன்னாள் பிரதமர் பி.வி நரசிம்மராவ் டிசம்பர் 23, 2004 அன்று இறந்த பிறகு, டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் அவரது சமாதி ஸ்தலத்தை உருவாக்க கோரிக்கை வைக்கப்பட்டது, ஆனால் சோனியா காந்தி அதை நிராகரித்தார் என்றார்.

”அவரது உடலுக்கு காங்கிரஸ் அலுவலகத்தில் இடம் கொடுக்கப்படவில்லை. நரசிம்ம ராவின் இறுதிச் சடங்குகளை டெல்லியில் செய்வதை காங்கிரஸ் விரும்பவில்லை. பின்னர், அவரது இறுதி சடங்குகள் ஹைதராபாத்தில் செய்யப்பட்டன” என்று நட்டா கூறினார்.

2015ல் மோடி நரசிம்ம ராவுக்கு நினைவிடத்தை நிறுவி, 2024ல் பாரத ரத்னா விருதை வழங்கினார். 2020ல் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இறந்தபோது, காங்கிரஸ் காரியக் கமிட்டி “ஷோக் சபா” என்று அழைக்கவில்லை என்று நட்டா கூறினார்.

”2013 ஆம் ஆண்டில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் ராஷ்ட்ரிய ஸ்மிருதி (பொது நினைவு மைதானம்) அமைக்க முடிவு செய்திருந்தது மற்றும் எந்த தலைவருக்கும் தனி சமாதி ஸ்தலங்கள் கட்டப்பட மாட்டாது என்று கூறியதை காங்கிரசுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்," என்று நட்டா கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Manmohan Singh Bjp Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment