Advertisment

தமிழ் மொழியை நினைத்து இந்திய மக்கள் பெருமைப்பட வேண்டும்! - 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் மோடி உரை

சோகத்தில் உங்கள் தோளோடு தோளாக நிற்போம் என்று நான் உறுதியளிக்கிறேன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மன் கி பாத்

மன் கி பாத்

பிரதமர் நரேந்திர மோடி இன்று 47-வது ’மன் கி பாத்’ நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அதில், தமிழ் மொழியை நினைத்து இந்திய மக்கள் பெருமைப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

அவர் பேசுகையில், "கேரளாவில் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட நமது தேசிய பேரிடர் மீட்பு படை, விமானப்படை, கடற்படை, ராணுவம், எல்லை பாதுகாப்புப் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, சிறப்பு அதிரடிப் படை ஆகியவற்றை சேர்ந்த வீரர்கள் தங்களது அபாரமான செயல்பாடுகளால் ஒவ்வொரு இந்தியரின் பார்வையையும் தங்கள் பக்கம் ஈர்த்திருந்தனர். அவர்களின் சிறப்புக்குரிய சேவைகள் பாராட்டத்தக்கதாகும்.

துரதிர்ஷ்டவசமாக, இயற்கை பேரிடர்கள் மிகப்பெரிய அழிவின் பாதிப்பை விட்டுச் செல்கிறது. இதைப்போன்ற பேரழிவுக் காலங்களில் மனிதம் மற்றும் மனிதநேயத்தை ஒருவரால் காணவும் முடிகிறது. நாட்டின் எந்தப் பகுதியானாலும், இயற்கை பேரிடர்கள் ஏற்படும்போது, விரைவில் அங்கு இயல்பு நிலை திரும்பும் வகையில் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள அனைவரும் ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய முன் வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களின் வலியில் பங்கெடுத்துகொள்ள முன்வருகிறார்கள்.

இன்றைய இறுக்கமான, கடினமான காலக் கட்டத்தில் கேரளாவுடன் இந்த ஒட்டுமொத்த நாடும் உள்ளது. அங்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருடன் நமது அனுதாபங்கள் கலந்துள்ளது. உயிரிழப்புகளை நிவாரணங்களின் மூலம் ஈடுசெய்து விட முடியாது. ஆனால், 125 கோடி இந்தியர்களும் உங்களது துயரங்களில், சோகத்தில் உங்கள் தோளோடு தோளாக நிற்போம் என்று நான் உறுதியளிக்கிறேன். இந்த இயற்கை பேரழிவில் காயமடைந்தவர்கள் விரைவில் நலமடைய மனதார பிரார்த்திக்கிறேன்.

நம்நாட்டின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பாதுகாப்பவர்களை வாழ்த்துகிறேன். இந்த மகத்தான பணியில் மூலம் பெரும் சமூகத்தின் வரலாற்றுக்கு தொண்டாற்ற முடியும்.

ஒவ்வொரு மொழியும் தனித்தன்மை வாய்ந்தது. அதன் பழமையால் தனிச்சிறப்புடன் திகிழ்கிறது. உலகின் மிக பழமையான மொழி தமிழ். இதை எண்ணி ஒட்டுமொத்த இந்தியாவே பெருமை கொள்கிறது. வேதகாலத்தில் இருந்து தற்போதைய நவீன காலம் வரை ஏற்பட்டுள்ள மாற்றங்களை நாம் நன்கு அறிவோம். உலகம் முழுவதும் அறிவை பரப்பியதில் சமஸ்கிருதத்துக்கு மிக முக்கிய பங்கு உண்டு.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முன்னாள் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை நாம் எப்போதுமே நினைவில் கொள்ள வேண்டும். அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விஸ்வேசரய்யாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி பொறியாளர்கள் தினமாக கொண்டாடப்படும்.

நாடாளுமன்ற மழைகால கூட்டத் தொடர் பயனுள்ள வகையில் நடந்து முடிந்துளளது. மக்களவையில் 21 மசோதாக்களும், மாநிலங்களவையில் 14 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் ஆணையத்திற்கு இணையாக இதர பிற்படுத்தப்பட்டோருக்கான திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது. 12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்றார்.

மேலும், முத்தலாக்கிற்கு தடை விதிக்க வழி செய்யும் சட்ட மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருப்பதையும், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாததையும் அவர் சுட்டிக்காட்டினார். எனினும், முத்தலாக் விஷயத்தில் இஸ்லாமியப் பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில், ஒட்டுமொத்த நாடும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Maan Ki Baat Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment