ஹைதராபாத் விடுதலை தினம்.. பலருக்கு பயம்.. காரணம் வாக்கு வங்கி.. அமித் ஷா!, Many fear celebrating Hyderabads Liberation due to vote bank politics says Amit Shah | Indian Express Tamil

ஹைதராபாத் விடுதலை தினம்.. பலருக்கு பயம்.. காரணம் வாக்கு வங்கி.. அமித் ஷா!

தெலங்கானாவில் ஹைதராபாத் விடுதலை தினத்தை அமித் ஷாவும், கே.சி.ஆரும் தனித்தனியே கொண்டாடினர். அமித் ஷா அழைப்பை முதலமைச்சர் கே. சந்திர சேகர் ராவ் நிராகரித்துவிட்டார்.

ஹைதராபாத் விடுதலை தினம்.. பலருக்கு பயம்.. காரணம் வாக்கு வங்கி.. அமித் ஷா!
ஹைதராபாத் விடுதலை தின விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா

ஹைதராபாத் சமாஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தெலங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ் ஆகியோர் ஹைதராபாத் நகரில் சனிக்கிழமை தனித்தனியான நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கினர்.

ஹை
தராபாத் விடுதலை தினத்தை முன்னிட்டு பரேட் மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் இல்லாவிட்டால், நிஜாம் ஆட்சியிலிருந்து ஹைதராபாத் சமஸ்தானத்தை விடுவிக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று கூறினார்.

இதற்கிடையில், தெலங்கானா தேசிய ஒருங்கிணைப்பு தினத்தை குறிக்கும் மற்றொரு நிகழ்வில் தெலங்கானா முதல்வர் கே. சந்திர சேகர் ராவ், “வரலாற்றை சிதைக்கும் சதி”. இது குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை விமர்சித்த ஷா, “பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஹைதராபாத் விடுதலையை அரசு கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடம் இருந்து வந்தது.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, 75 ஆண்டுகள் முடிந்துவிட்டதால், ஓட்டு வங்கி அரசியலால், இப்பகுதியை ஆண்டவர்களால் கொண்டாடத் துணிய முடியவில்லை” என்றார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த விழாவில் தேசிய கொடி ஏற்றினார்.

இந்த விழாவில் கே. சந்திர சேகர் ராவ்விற்கு அழைப்பு விடுத்தும் அவர் கலந்துகொள்வதை தவிர்த்துவிட்டார். இந்த நிலையில், சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொதுத் தோட்டத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றினார்.
அப்போது அமித் ஷா, தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் (கே. சந்திர சேகர்) ஆட்சிக்கு வந்தவுடன், ரஸாகர்களுக்கு பயந்து பின்வாங்கினர் என்றும் ஷா கூறினார்.

ரஸாகர்கள் நிஜாம்கள் காலத்தில் செயல்பட்ட முஸ்லிம் துணை ராணுவ தன்னார்வப் படை. தொடர்ந்து,

மகாத்மா காந்தியின் ஒன்றுபட்ட இந்தியா கனவுகளை நிறைவேற்ற சர்தார் படேலின் தீர்மானத்திற்கு அமித் ஷா மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, “இன்று ஒரு வரலாற்று நாள். ஆகஸ்ட் 15, 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்தது, ஆனால் ஹைதராபாத் தொடர்ந்து நிஜாமின் கீழ் இருந்தது.
மேலும், அடுத்த 13 மாதங்களுக்கு ஹைதராபாத் மாநில மக்கள் ரஸாக்கர்களால் பயமுறுத்தப்பட்டனர். இந்த நாளில் சர்தார் வல்லபாய் படேல் ஆற்றிய பங்கை நாம் நினைவுகூர வேண்டும்.

ரஸாகர்கள் ஆட்சி செய்வதால், ஹைதராபாத் மாநிலம் இந்தியாவில் சேராது என்றும், ‘அகண்ட் பாரதம்’ (பிரிக்கப்படாத இந்தியா) கனவு நிறைவேறாது என்றும் அவர் அறிந்திருந்தார். சர்தார் படேல் இல்லையென்றால், ஹைதராபாத் விடுதலை பெற பல ஆண்டுகள் ஆகியிருக்கும்.
‘காவல்துறை நடவடிக்கை’ மூலம் நிஜாம் ராணுவத்தையும் ரஸாக்கர்களையும் தோற்கடித்தவர் சர்தார் படேல்” என்றார். இந்நிகழ்வில், மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, கர்நாடகாவின் போக்குவரத்துத் துறை அமைச்சர் பி ஸ்ரீராமுலு உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.

‘ஹைதராபாத் விடுதலை தினத்தை’ கொண்டாட பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முடிவை ஷா பாராட்டினார், அவரைப் பொறுத்தவரை, அனைத்து தரப்பினரும் இதைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
“அவர்கள் கொண்டாடுகிறார்கள், ஆனால் அதை விடுதலை என்று அழைக்க இன்னும் பயப்படுகிறார்கள். இந்த நாட்டில் ரஸாக்கர்களால் முடிவெடுக்க முடியாது என்பதாலும், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், அச்சமின்றி இருங்கள் என்று அவர்களிடம் கூற விரும்புகிறேன்,” என்றார்.

முன்னாள் சமஸ்தானத்தின் சுதந்திரப் போராளிகள் மற்றும் குடிமக்களுக்கு எதிராக நிஜாமின் இராணுவம் மற்றும் ரஸாக்கர்கள் செய்த அட்டூழியங்கள் குறித்து மேலும் ஆராய்ச்சி மற்றும் ஆவணங்களை திரட்ட வேண்டும் என்றும் அமித் ஷா அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து, ஹைதராபாத் விடுதலையின் தியாகிகளுக்கு செழுமையான அஞ்சலி செலுத்தவும், அடுத்த தலைமுறையினருக்கு தேசபக்தி உணர்வை உருவாக்கவும் நாட்டின் அனைத்து மூலைகளிலும் இது கொண்டு செல்லப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அப்போதைய மன்னரின் பல சம்பவங்களையும் முடிவுகளையும் பட்டியலிட்ட ஷா, முந்தைய சமஸ்தானத்தின் மக்கள் ஆட்சியாளர்களால் இழைக்கப்பட்ட அட்டூழியங்களையும் அநீதிகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று கூறினார்.
தொடர்ந்து, “எங்கள் மக்கள் போராடி வெற்றி பெற்ற இப்பகுதி மக்களை எல்லா வகையிலும் நிஜாமும் அவரது ரஸாக்கர்களும் சித்திரவதை செய்தனர். பலர் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர்” என்று கூறிய அவர், இந்த நாளை யாரும் கொண்டாடினாலும், கொண்டாடாவிட்டாலும், மத்திய அரசு அதை ஆண்டுதோறும் பெருமையுடன் கொண்டாடும் என்றும் கூறினார்.

அரசியல் காரணங்களுக்காக தெலங்கானாவில் நல்லிணக்கம், அமைதி சீர்குலைந்துள்ளது: கே. சந்திர சேகர் ராவ்

இதற்கிடையில், பப்ளிக் கார்டனில் நடந்த மாநில அரசின் ‘தெலங்கானா தேசிய ஒருங்கிணைப்பு தின’ விழாவில் கலந்து கொண்ட முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், மாநிலத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக போராடுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.


அப்போது, “வரலாற்றை திரிபுபடுத்தும் சதி உள்ளது, அது குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக மாநிலத்தில் நல்லிணக்கமும், அமைதியும் சீர்குலைந்து வருகிறது” என்று கூறினார்.

முன்னதாக, துப்பாக்கி (Gun Park) பூங்காவில் உள்ள தெலங்கானா தியாகிகள் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தெலங்கானா தனி மாநிலம் அடையப்பட்டது, ஆனால் நாசகார சக்திகள் அமைதியின்மையை உருவாக்கி, தேசிய ஒருமைப்பாட்டைக் குறிக்கும் செப்டம்பர் 17இன் முக்கியத்துவத்தை சிதைத்து வருவதாகக் கூறினார்.

மேலும், காங்கிரஸ் மற்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) ஆகியவையும் இந்த தினத்தை நினைவுகூரும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்தின.

முதன் முறையாக, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) இந்த நிகழ்வைக் குறிக்கும் நிகழ்வை ‘இந்தியாவுடன் ஹைதராபாத் மாநிலத்தின் ஒருங்கிணைப்பு’ என்று ஏற்பாடு செய்துள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள பழைய பகுதிகளில் AIMIM ‘திரங்கா’ பைக் பேரணியை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி கலந்து கொண்டு கட்சியின் தலைமையகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Many fear celebrating hyderabads liberation due to vote bank politics says amit shah