/indian-express-tamil/media/media_files/2025/02/07/wlVDAw0bi0bbWDcmbumi.jpg)
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில் பலர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மெக்சிகோ - அமெரிக்க எல்லையை அடைந்ததாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பான தகவல்களை காவல்துறை வட்டாரம் மற்றும் நாடு திரும்பிய இந்தியர்களிடம் இருந்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்து கொண்டது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Many of those Indians deported by US were detained from America’s border in last two months
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேற முயன்ற 104 இந்தியர்களை நாடு கடத்தி வந்த ராணுவ விமானம், அமிர்தசரஸ் விமான நிலையத்தில் கடந்த புதன்கிழமை மதியம் தரையிறங்கியது.
இந்தியா திரும்பிய 104 பேரில், 30 பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள், 33 பேர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய நிர்வாகத்தின் கீழ் கடுமையான எல்லைக் கட்டுப்பாட்டுக்கு மத்தியில், அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படும் பஞ்சாப் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த தலா 15 பேர் மெக்சிகோ - அமெரிக்க எல்லையில் தடுத்து வைக்கப்பட்டனர்.
நாடு கடத்தப்பட்டவர்களின் கூற்றுப்படி, அமெரிக்காவை அடைவதற்காக அவர்கள் பல முயற்சிகளில் ஏராளமாக பணம் செலவளித்துள்ளனர். இதற்காக சுமார் ரூ. 30 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை செலவளித்ததாக கூறப்படுகிறது. "டன்கி பாதை" எனப்படும் அங்கீகரிக்கப்படாத மற்றும் ஆபத்துகள் நிறைந்த பாதையை பயன்படுத்தி அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றுள்ளனர்.
மொஹாலியில் உள்ள ஜுரைட் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான பர்தீப் சிங், ஆறு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி மெக்சிகோ-அமெரிக்க எல்லையைக்கு சென்றுள்ளார். இதற்காக ரூ. 42 லட்சம் செலவளித்த அவர், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
இதேபோல், ஃபதேகர் சாஹிப் பகுதியில் உள்ள கஹான்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஜஸ்விந்தர் சிங் (30) என்பவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புறப்பட்டு, ரூ.50 லட்சம் செலவழித்து ஜனவரி 15-ஆம் தேதி எல்லையை அடைந்தார். பாட்டியாலாவில் உள்ள அஹ்ரு குர்த் கிராமத்தைச் சேர்ந்த அம்ரித் சிங் (18), எட்டு மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து புறப்பட்டு ஜனவரி மாதம் எல்லையை அடைந்தார். இவர்கள் இருவரும் எல்லையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு பல லட்சம் செலவளித்து ஏராளமானோர் மெக்ஸிகோ - அமெரிக்க எல்லையை அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் எல்லை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்லையில் கைது செய்யப்பட்டவர்களில் பெண்களும் அடங்குவர். ஜனவரி 1 ஆம் தேதி பஞ்சாபின் கபுர்தலா மாவட்டத்தில் உள்ள பதாஸ் கிராமத்தில் இருந்து தனது கணவரைச் சந்திப்பதற்காக தன்னுடைய மகனுடன் புறப்பட்ட லவ்ப்ரீத் கவுர், அமெரிக்கா எல்லையைக் கடப்பதற்கு முன்பு சட்டப்பூர்வமாக மெக்சிகோவை அடைய ஷெங்கன் விசாவைப் பயன்படுத்தினார். அவர் ஜனவரி 27 அன்று அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவர் ஏறத்தாழ ரூ. 1 கோடி செலவளித்த நிலையில், பிப்ரவரி 5 அன்று நாடு கடத்தப்பட்டார்.
ஜனவரி தொடக்கத்தில் பயணம் செய்த வதோதராவைச் சேர்ந்த 29 வயது பெண்ணும் நாடு கடத்தப்பட்டார். "அனைத்தும் சீராக இருந்ததாக என் மகள் கூறியிருந்தார். பல நாட்களாக என் மகளுடன் நான் தொடர்பில் இல்லை. நாடு கடத்தல் மூலமாக என் மகள் இந்தியா திரும்பிய தகவலை இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் அறிந்தேன். என் மகள் பாதுகாப்பாக வீடு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது" என அப்பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார்.
நாடு கடத்தப்பட்டவர்களில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்களில் சில குடும்பத்தினர், அமெரிக்காவில் நீண்ட நாட்களாக வசித்ததாக அம்மாநில மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
"வடக்கு குஜராத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் அமெரிக்காவில் ஆறு மாதங்களுக்கும் மேலாக வசித்து வந்தது. அதே நேரத்தில் ஒரு சிறுவனுடன் நாடு கடத்தப்பட்ட ஒரு தம்பதி, சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் குடிபெயர்ந்துள்ளனர். அவர்களின் குழந்தை அமெரிக்காவில் பிறந்தது" என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் அதிகாரி தெரிவித்தார்.
நாடு கடத்தப்பட்டவர்களில், வடக்கு குஜராத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லுபடியாகும் சுற்றுலா விசாக்களுக்கு பணம் செலுத்தியதாகவும், பின்னர் ஏஜென்ட்களின் ஆலோசனையின் பேரில் தென் அமெரிக்கா வழியாக அமெரிக்க எல்லைக்கு சென்றதாகவும் தெரிய வருகிறது. ஆனால் அவர்களால் எல்லையை கடக்க முடியவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.
வெளிநாட்டு கல்வி ஆலோசகர் வினய் குமார் ஹரி கூறுகையில், "104 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டது ஒரு ஆரம்பம்தான். 20,000 க்கும் மேற்பட்ட ஆவணமற்ற இந்தியர்கள் தற்போது அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் சூழலை எதிர்கொள்கின்றனர்" என அவர் தெரிவித்தார்.
பாரதிய கிசான் யூனியன் (கிராந்திகாரி) பொதுச் செயலாளர் சுக்விந்தர் கவுர் கூறும்போது, "அமெரிக்க டாலர்களை ரூபாயின் மதிப்பில் மாற்றும் கனவுடன் இந்த மக்கள் இது போன்று செயல்படுகின்றனர். இவர்கள் 'டன்கி' செலவுகளை ஒரு வருடத்திற்குள் மீட்டெடுக்கிறார்கள். சிலர் இதற்காக இரண்டு அல்லது மூன்று வருடங்கள் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், இந்தப் போக்கைத் தொடர அனுமதிக்காமல், இதுபோன்ற இக்கட்டான நிலையில் இருந்து நாட்டைக் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்" என தெரிவித்தார்.
இதேபோல், டிராவல் ஏஜென்ட்கள் மக்களைச் சுரண்டுவதாக லோக் பலாய் கட்சியின் தலைவரான பல்வந்த் சிங் ராமுவாலியா குற்றம்சாட்டுகிறார்.
"டன்கி பாதையை தேர்ந்தெடுக்கும் பலரால், IELTS தேர்வில் தேர்ச்சி பெற முடியாது. சரியான ஆங்கிலம் இல்லாமல் குடும்பத்தினரின் துணையின்றி அமெரிக்காவில் அவர்களால் எப்படி நிலைத்திருக்க முடியும்" என வெளிநாட்டு படிப்புகளுக்கான ஆலோசகர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் நிதின் சாவ்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.