கட்சிரோலியில் சனிக்கிழமை நடந்த என்கவுன்டரில் கொல்லப்பட்ட 26 மாவோயிஸ்டுகளில் சிபிஐ (மாவோயிஸ்ட்) மத்தியக் குழு உறுப்பினர் மிலிந்த் டெல்டும்டேயும் கொல்லப்பட்டதாக காவல்துறை உறுதி செய்துள்ளது.
டெல்டும்டேவை பிடித்தால் ரூ.50 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. இவரைத் தவிர, போலீஸ் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் இரண்டு முக்கிய மாவோயிஸ்டுகள், எடபள்ளி தாசில் மாவட்டத்தின் ரெனாடிகுட்டா கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் என்கிற சிவாஜி ராவ்ஜி கோட்டா மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள ஜாகர்குண்டா கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் என்கிற மங்கு போட்யம் ஆவர். இருவரும் சிபிஐ (மாவோயிஸ்ட்) கட்சியின் கட்சிரோலி மண்டலக் குழு உறுப்பினர்களாக இருந்தனர். கசன்சூர் தலம் பகுதியைச் சேர்ந்த சிவாஜி ராவ்ஜி கோட்டாவை பிடித்தால் 16 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், 4வது கம்பெனியின் கமாண்டரான மங்கு போட்யம்-ஐ பிடித்தால் 20 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டிருந்தது.
சனிக்கிழமையன்று பத்து மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த என்கவுண்டர் கட்சிரோலியின் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் நீண்ட ஒன்றாகும். காடுகளில் மாவோயிஸ்டுகள் முகாமிட்டுள்ளதை போலீசார் அறிந்ததும் தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கையில் மொத்தம் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கொண்ட சி-60 கமாண்டோக்களின் 16 குழுக்கள் பங்கேற்றதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
தண்டகாரண்யா சிறப்பு மண்டலக் குழு (DKSZC) உறுப்பினர் பிரபாகர் உடன் 100க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் கூட்டத்தில் இருந்ததாக கமாண்டோ பிரிவு அதிகாரி கூறுகிறார். பிரபாகரின் மெய்க்காப்பாளர் என்கவுண்டரில் இறந்த நிலையில், பிரபாகர் சுமார் 75 பேருடன் பாதுகாப்பாக தப்பிச் சென்றதாக நம்பப்படுகிறது.
"ஒப்படைக்கப்பட்ட நக்சலைட்டுகளின் உடல்களில் ஒன்று டெல்டும்டேயின் உடல் என அடையாளம் கண்டுள்ளனர்" என்று கட்சிரோலி காவல்துறை கண்காணிப்பாளர் அங்கித் கோயல் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
பலியானவர்களில் டெல்டும்டேவும் ஒருவர் என்று ஊகங்கள் இருந்தன, ஆனால் அதை சனிக்கிழமையன்று காவல்துறை உறுதிப்படுத்தவில்லை.
தற்செயலாக, இன்றுவரையிலும், கட்சிரோலியில் நடந்த என்கவுன்டரில் கொல்லப்பட்ட 58 வயதுடைய டெல்டும்டே தான் மாவோயிஸ்ட்களில் கொல்லப்பட்டவர்களில் பெரிய பொறுப்பில் உள்ளவர். சுட்டுக்கொல்லப்பட்ட மிலிந்த் டெல்டும்டே, ஆர்வலர் மற்றும் அறிஞரான ஆனந்த் டெல்டும்டேவின் சகோதரர் ஆவார். ஆனந்த், எல்கர் பரிஷத் வழக்கில் முன்பு கைது செய்யப்பட்டு தற்போது நவி மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இறந்தவர்களில் ஐந்து பெண்கள் உள்ளனர், அவர்களில் நான்கு பேர் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அடையாளம் காணப்படவில்லை. என்கவுண்டரில் இறந்தவர்களில் ஆறு ஆண்கள் பற்றிய அடையாளம் கடைசியாக அறிக்கைகள் வரும் வரை தெரியவில்லை.
கோர்ச்சி தலம் தவிர, மாவோயிஸ்ட் குழுவில் கம்பெனி 4, கசன்சூர் தலம் மற்றும் திபகத் தலம் உறுப்பினர்களும் உள்ளனர். குழு எவ்வளவு பெரியதாக இருந்திருக்கும் என்று கேட்டதற்கு, “எங்களுக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் அது நீண்ட காலம் நீடித்ததால் அது ஒரு பெரிய கூட்டமாக இருந்திருக்க வேண்டும் என்று கோயல் கூறினார்.
"சுமார் 100 பைகள் அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டன, இது என்கவுண்டர் வெடித்தபோது குறைந்தது 100 மாவோயிஸ்ட்கள் இருந்ததைக் குறிக்கிறது." என ஒரு வட்டாரம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தது.
கோயல் மேலும் கூறுகையில், “இது உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கை. கூட்டத்தைப் பற்றிய தகவல்கள் எங்களிடம் இருந்தன, எனவே நடவடிக்கை தொடங்கப்பட்டது. எங்கள் ஆட்கள் ஆரம்பத்தில் சுடப்பட்டனர். ஆனால் குறைந்த சேதத்துடன் வெற்றிகரமாக பதிலடி கொடுத்தனர்.
எவ்வாறாயினும், துப்பாக்கிச் சண்டை நடந்தது, ஆனால் தொடர் துப்பாக்கிச் சண்டை இல்லை என்று கோயல் தெளிவுபடுத்தினார்.
வடக்கு கட்சிரோலியில் கயரப்பட்டி-கோட்குல் வனப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் கொல்லப்பட்ட மற்ற 12 மாவோயிஸ்டுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காவல்துறை வெளியிட்ட பட்டியலின்படி, இறந்த மற்ற மாவோயிஸ்டுகள் பாண்டு என்கிற தஸ்லு கோட்டா (கம்பெனி 4, ரூ. 4 லட்சம் வெகுமதி), பிரமோத் என்ற தல்பத் கச்லாமி (கம்பெனி 4, ரூ. 4 லட்சம்), சத்தீஸ்கரில் உள்ள பஸ்தாரைச் சேர்ந்த கோசா என்ற முசாகி (கம்பெனி 4, ரூ. 4 லட்சம்), சத்தீஸ்கரின் தெற்கு மாட் பகுதியைச் சேர்ந்த நீரோ (வேறு விவரங்கள் எதுவும் இல்லை), விம்லா என்ற இம்லா என்ற கமலா என்ற மானசி போகா (ரூ. 4 லட்சம்), தெற்கு பஸ்தாரைச் சேர்ந்த சேத்தன் பதா (திபகத் தலம், ரூ. 2 லட்சம்), கோர்ச்சி தலம் தளபதியான, சத்தீஸ்கரில் உள்ள தர்பாவைச் சேர்ந்த கிஷன் என்கிற ஜெய்மான் (ரூ. 8 லட்சம்), பகத் சிங் என்கிற பிரதீப் என்கிற திலக் ஜேட் (ரூ. 6 லட்சம்), கசன்சூர் தலத்தின் கமாண்டரான, சத்தீஸ்கரின் பஸ்தாரைச் சேர்ந்த சன்னு என்ற கோவாச்சி (ரூ. 8 லட்சம்), பிரகாஷ் என்கிற சாது போகா (கம்பெனி 4, ரூ 4 லட்சம்), பஸ்தாரைச் சேர்ந்த மலாச்சு (கம்பெனி 4, ரூ 4 லட்சம்) மற்றும் நவ்லூராம் என்கிற திலீப் துலாவி (கம்பெனி 4, ரூ 4 லட்சம்).
பகத் சிங் ஜேட் மற்றும் விம்லா போகா ஆகியோர் டெல்டும்டேவின் மெய்க்காப்பாளர்களாக இருந்தனர், மேலும் லச்சு மூத்த கேடர் பிரபாகரின் மெய்க்காப்பாளராக இருந்தார்.
இதுவரை அடையாளம் தெரியாதவர்கள் சத்தீஸ்கர் மற்றும் அதை ஒட்டிய மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது, எனவே உள்ளூர் நக்சலைட்களை அடையாளம் காண முடியவில்லை.
என்கவுன்டரில் காயமடைந்த நான்கு போலீஸ்காரர்கள் "நல்ல" நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டனர் என கூடுதல் எஸ்பி சமீர் ஷேக் தெரிவித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.