Masjids in Kashi, Mathura should be handed over to Hindus : Hindu Mahasabha passed resolution : அயோத்தியை போன்றே காசி மற்றும் மதுராவில் அமைந்திருக்கும் மசூதிகளை இஸ்லாமியர்கள் விட்டுத் தர வேண்டுமென அகில பாரத அகாடா பரிசா தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தீர்மானத்திற்கு ஆர்எஸ்எஸ் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அந்த சபை வலியுறுத்தியுள்ளது. ஏழாம் தேதி உத்தர பிரதேசம் மாநிலத்தின் அலகாபாத்தில் இந்திய சாதுக்களின் சபை கூடியது. 13 முக்கிய சாதுக்கள் சபையின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். அதில் பல்வேறு பிரச்சனைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது இந்த அவசர கூட்டத்தில் மொத்தமாக எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அயோத்தியை போன்று காசி மற்றும் மதுராவில் அமைந்திருக்கும் மசூதிகளை இஸ்லாமியர்கள் இந்துக்களுக்கு தானாக முன்வந்து விட்டு தர வேண்டும் என்ற தீர்மானமும் அதில் இடம் பெற்றுள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று இந்துக்கள் நம்புகின்றனர் அதேபோன்று இம்மாநிலத்தின் மற்ற இரு பகுதிகளான வாரணாசி மற்றும் மதுராவில் முறையே விஸ்வநாதர் கோயில் மற்றும் ஸ்ரீகிருஷ்ணர் பிறப்பிடம் இருந்ததாகவும் அவைகள் இடிக்கப்பட்டு முறையே கியான்வாபி மசூதி மற்றும் ஷாயி ஈக்தா மசூதி கட்டப்பட்டது என்றும் மக்கள் நம்புகின்றனர்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்திற்கு உரிமை கோரியதை போன்றே இவ்விரு மசூதிகள் இருக்கும் இடத்திற்கும் உரிமை கோரி வழக்குகள் போடப்பட்டன. ஆனால் அவை நீதிமன்றங்களில் ஏற்கப்படவில்லை. ஆனால் 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி அயோத்தி ராமர் கோவில் மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் கோவில் கட்ட அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது. மசூதிகளை ஒப்படைக்கும் பேச்சுவார்த்தைகளுக்கு இஸ்லாமியர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் சட்டப்போராட்டம் நடத்துவோம் என்றும் சாதுக்கள் சபை உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil