scorecardresearch

டெல்லி மாநகராட்சி தேர்தல் தோல்வி: காங்கிரஸ் நிலை என்ன? குஜராத் முடிவுகளுக்கு காத்திருப்பு

டெல்லி மாநகராட்சி தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது. தேர்தல் தோல்விக்கு பல காரணங்களை கட்சி தலைவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

டெல்லி மாநகராட்சி தேர்தல் தோல்வி: காங்கிரஸ் நிலை என்ன? குஜராத் முடிவுகளுக்கு காத்திருப்பு

டெல்லி மாநகராட்சியில் உள்ள 250 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் அங்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது. பா.ஜ.க 104 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் தோல்விக்கு பல காரணிகளை அக்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டினர். முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள பழைய டெல்லி போன்ற பகுதிகளிலும் கட்சி தோல்வியடைந்தது. இருப்பினும் காங்கிரஸில் வெற்றி பெற்ற 9 வேட்பாளர்களில் 7 பேர் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

டெல்லி காங்கிரஸ் தலைவராக உள்ள அனில் சவுத்ரி, ராகுல் காந்தி நியமித்தவர். இவர் முறையாக செயல்படவில்லை என பலர் குற்றஞ்சாட்டுகின்றனர். விரைவில் அவர் மாற்றப்பட்டு புதிய அணி அமைக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. பாரத் ஜோடோ யாத்ரா டெல்லியை அடைவதற்கு முன்பு அது செய்யப்படுமா அல்லது அதன்பின் மாற்றப்படுமா என்பது தான் கேள்வியாக உள்ளது.

காங்கிரஸ் தொண்டர்கள் தொடர் தோல்விகளால் சோர்வடைந்துள்ளதாக கூறுகின்றனர். கட்சி இதேநிலையில் நீடித்தால், லோக்சபா தேர்தலில் டெல்லியில் மீண்டும் தோல்வியை சந்திக்க நேரிடும் என்று அச்சம் தெரிவிக்கின்றனர்.

இப்போது குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி பெறும் வாக்கு சதவீதம் உன்னிப்பாக பார்க்கப்படுகிறது. “ஆம் ஆத்மி கட்சி 15% அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற முடிந்தால், அது காங்கிரஸுக்கு மிகவும் மோசமான செய்தி. ஆம் ஆத்மி தனது தேசிய லட்சியங்களை விரிவுபடுத்தும், மேலும் பாஜகவுக்கு சவாலாகத் தன்னைத்தானே நிறுத்தும்” என்று டெல்லி காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர்
கூறினார்.

மற்றொரு தலைவர் கூறுகையில், கட்சியில் அடிமட்ட அளவில் பல சீர்திருத்த பணிகளை செய்ய வேண்டும். மூத்த தலைவர் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை. டெல்லி பொறுப்பாளராக ஷக்திசிங் கோஹில் இருந்தார். குஜராத்தில் தேர்தல் பணிகளில் கோஹில் பிஸியாக இருந்ததால் கடைசி நிமிடத்தில் நவம்பர் முதல் வாரத்தில் அஜோய் குமார் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். கடைசி நிமிடத்தில் நியமிக்கப்பட்டதால் பூத் லெவல் பிரச்னைகளை புரிந்துகொள்வது கடினம். குஜராத் தேர்தலில் கோஹில் கவனம் செலுத்த வேண்டும் என்பது நம் அனைவருக்கும் தெரியும், அதற்கு முன்பு வேறு ஒருவருக்கு இந்த பொறுப்பை கொடுத்திருக்கலாம் என்றார்.

அஜய் மக்கன், சந்தீப் தீட்சித், ராஜேஷ் லிலோதியா மற்றும் அரவிந்தர் சிங் லவ்லி போன்ற மூத்த தலைவர்கள் அதிகம் பிரச்சாரம் செய்யவில்லை என்று ஒரு தலைவர் சுட்டிக்காட்டினார். கடந்த காலத்தில் மூன்று முறை டெல்லி சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்திய ரஜோரி கார்டனிடம் கூட வேட்பாளர்களை தீர்மானிக்கும் போது ஆலோசனை கேட்கப்படவில்லை என்றார். பின்னர், தீட்சித் பக்கம் திரும்பியது. அவர் குஜராத்திற்கு விரைந்து, அங்கு ஆம் ஆத்மியின் சவாலைச் சமாளித்தது. உட்கட்சி பிரச்சனைகளும் தோல்விக்கு காரணமாக அமைந்தன. மாநகராட்சி தேர்தலின் போது, ராஜஸ்தான் பொறுப்பாளராக இருந்த மேக்கன் பொறுப்பாளராகத் தொடர இயலாது என விலகினார்.

“ஷீலா தீட்சித்தின் டெல்லி” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு காங்கிரஸ் முன்னெடுத்த பிரச்சாரம் தவறானது என்று ஒரு தலைவர் கூறினார். “ஷீலா தீட்சித்தின் டெல்லியைப் பற்றி நாம் பேசும் தருணத்தில், ஏழைகள், நடுத்தர மக்கள், பின்தங்கிய மக்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். கெஜ்ரிவாலின் வாக்கு வங்கியாக இருக்கும் ஏழைகளிடம் இது சென்று சேரவில்லை என்றார்.

டெல்லியில் ஏழைகளின் வாக்குகள் ஆம் ஆத்மிக்கு சென்றது. பணக்கார வகுப்பினர் இப்போது பாஜக ஆதரவு தளமாக உள்ளனர். காங்கிரஸுக்கு மற்றொரு சங்கடமாக அமைந்தது என்னவென்றால் டெல்லி தலைவர் ஒருவர் வாக்களிக்க சென்றபோது அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாமல் திரும்பி சென்றார். அதாவது கட்சி பூத் ஊழியர்கள் வாக்காளர் பட்டியலை கூட சரிபார்க்கவில்லை. வாக்குச் சாவடிக்கு வந்து பார்த்த போது தான் பெயர் இல்லை என்று தெரிய வந்தது. அடிப்படை பணிகளை கூட செய்யவில்லை என்றார். அதுவும் அந்த தலைவர் காங்கிரஸ் வேட்பாளர் சவுத்ரியின் மருமகன் என்பதுதான் இன்னும் வருத்தமளித்த ஒன்று என்றார்.

முஸ்லிம்கள் இன்னும் காங்கிரஸில் நம்பிக்கை வைத்துள்ள நிலையில், அது போதாது என்று அக்கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர். “டெல்லி கலவரத்தின் போது அரவிந்த் கெஜ்ரிவாலின் செயலற்ற தன்மை மற்றும் மௌனம், இந்துத்துவா பேச்சுகள் போன்றவற்றால் முஸ்லீம்கள் அவர் மீது கோபமடைந்துள்ளனர்.
ஆனால் முஸ்லீம் வாக்குகள் மட்டும் உதவாது” என்று ஒரு தலைவர் கூறினார். மாநகராட்சி தேர்தலில் கூட வேலை செய்யவில்லை என்றால், 2024 லோக்சபா தேர்தல் மற்றும் 2025 சட்டமன்றத் தேர்தல்களில் இன்னும் குறைவாக இருக்கும் என்று கூறினார்.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Mcd polls congress leaders fear party running out of time wait for gujarat