/indian-express-tamil/media/media_files/2025/10/16/randhir-jaiswal-3-2025-10-16-19-41-39.jpg)
வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால். Photograph: (File Photo)
பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி, ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தப்போவதாக தனக்கு உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, இரு தலைவர்களுக்கும் இடையே நேற்று (புதன்கிழமை) எந்த உரையாடலும் நடக்கவில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை தெளிவுபடுத்தியுள்ளது.
“எனக்குக் கிடைத்த தகவலின்படி, நேற்று (புதன்கிழமை) பிரதமர் மோடிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் இடையே எந்தவிதமான தொலைபேசி உரையாடலும் நடக்கவில்லை” என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், வியாழக்கிழமை அன்று தனது வாராந்திர பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஊடகத்தின் கேள்விக்கு பதிலளித்தார்.
முன்னதாக, ஒரு அறிக்கையில், நிலையற்ற எரிசக்திச் சூழலில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவே இந்தியாவின் இறக்குமதி கொள்கைகள் வழிநடத்தப்படுகின்றன என்று இந்தியா கூறியிருந்தது.
“இந்தியா எண்ணெய் மற்றும் எரிவாயுவின் முக்கிய இறக்குமதியாளர். நிலையற்ற எரிசக்திச் சூழலில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதே எங்களின் நிரந்தர முன்னுரிமையாக இருந்து வருகிறது. நம்முடைய இறக்குமதி கொள்கைகள் முழுவதுமாக இந்தக் குறிக்கோளையே வழிநடத்துகின்றன” என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அந்த அறிக்கையில் தெரிவித்தார்.
“நிலையான எரிசக்தி விலைகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட விநியோகங்களை உறுதிசெய்வதே நம்முடைய எரிசக்தி கொள்கையின் இரட்டை இலக்குகளாகும். இது, சந்தை நிலைமைகளைப் பூர்த்தி செய்ய, எங்கள் எரிசக்தி ஆதாரங்களை விரிவுபடுத்துதல் மற்றும் பல்வகைப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது” என்று ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்த 2022-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்தியாவின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
“அமெரிக்காவைப் பொறுத்தவரை, நாங்கள் பல ஆண்டுகளாக நம்முடைய எரிசக்தி கொள்முதலை விரிவுபடுத்த முயன்று வருகிறோம். இது கடந்த பத்தாண்டுகளில் சீராக முன்னேறியுள்ளது. தற்போதைய நிர்வாகம் இந்தியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளது. இது குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது” என்றும் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.
டிரம்ப் முன்வைத்த கருது என்ன?
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வெள்ளை மாளிகையில் புதன்கிழமை நிகழ்வு ஒன்றில் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “இது ஒருபோதும் தொடங்கியிருக்கக் கூடாத போர், ஆனால், ரஷ்யா முதல் வாரத்திலேயே வெற்றி பெற்றிருக்க வேண்டும், இப்போது அவர்கள் நான்காவது ஆண்டிற்குள் செல்கிறார்கள். இது நிறுத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறினார்.
“எனவே, இந்தியா எண்ணெய் வாங்கிக் கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை, அவர்கள் [பிரதமர் மோடி] இன்று ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டார்கள் என்று எனக்கு உறுதியளித்துள்ளார். உடனடியாக இதைச் செய்ய முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். இதற்குச் சற்று கால அவகாசம் தேவை, ஆனால், அந்தக் கால அவகாசம் விரைவில் முடிவடையும்” என்று அவர் கூறினார்.
“அது ஒரு பெரிய படி. இப்போது சீனாவையும் அதையே செய்ய வைக்கப் போகிறோம்” என்று கூறிய அவர், பெய்ஜிங்கிற்கு அழுத்தம் கொடுப்பது, “நாங்கள் கடந்த வாரம் மத்திய கிழக்கில் செய்ததை விட (போரை நிறுத்த) ஒப்பீட்டளவில் எளிதாக இருக்கும்” என்றும் கூறினார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தையும், அவரால் ஏற்படுத்தப்பட்ட அமைதித் திட்டத்தின் கீழ் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டதையும் அமெரிக்க அதிபர் இங்கே குறிப்பிட்டார்.
“இந்தியா எண்ணெய் வாங்கவில்லை என்றால், அது [ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது] எளிதாகிறது. ஒரு குறுகிய காலத்திற்குள் அவர்கள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டார்கள் என்று எனக்கு உறுதியளித்துள்ளனர், போர் முடிந்த பிறகு அவர்கள் மீண்டும் ரஷ்யாவுக்குச் செல்வார்கள்” என்று டிரம்ப் கூறினார்.
ரஷ்ய எண்ணெயின் தொடர்ச்சியான இறக்குமதிகள் அதிபர் விளாடிமிர் புதினின் போருக்கு மறைமுகமாக நிதியளிக்கின்றன என்று அமெரிக்கா கருதுவதால், இது குறித்த கவலைகளை பிரதமர் மோடியிடம் எழுப்பியதாகவும் டிரம்ப் மேலும் கூறினார். “இந்தியா எண்ணெய் வாங்கிக் கொண்டிருந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை” என்று அவர் கூறினார்.
மோடியுடனான உறவு குறித்து டிரம்ப்
பிரதமர் மோடியுடனான தனது உறவைப் பற்றி டிரம்ப் அன்புடன் பேசினார்.
“மோடி ஒரு சிறந்த மனிதர். அவர் டிரம்பை நேசிக்கிறார்” என்று அவர் தன்னைப் பற்றி மூன்றாம் நபரில் குறிப்பிட்டார். “நான் பல ஆண்டுகளாக இந்தியாவைப் பார்த்து வருகிறேன். இது ஒரு நம்ப முடியாத நாடு, மேலும், ஒவ்வொரு வருடமும் உங்களுக்கு ஒரு புதிய தலைவர் இருப்பார். எனது நண்பர் (மோடி) இப்போது நீண்ட காலமாக அங்கு இருக்கிறார்.”
டிரம்ப் இவ்வாறு கூறியது, இந்தியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கான தற்போதைய பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் வந்துள்ளது. மேலும், அந்த எண்ணெய் இறக்குமதிகள் காரணமாக இந்தியா மீது அமெரிக்கா 25 சதவிகித வரியை விதித்த கிட்டத்தட்ட 2 மாதங்களுக்குப் பிறகு இந்தக் கருத்து வந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.