பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல கோடி ரூபாய் கடன் மோசடி செய்து விட்டு வெளிநாட்டிற்கு தப்பித்து சென்ற நீரவ் மோடியை பிடிக்க இந்தியா 3 நாடுகளின் உதவியை கேட்டுள்ளது.
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 13,000 கோடி கடன் உத்தரவாத மோசடி வழக்கில் சிக்கியுள்ள நீரவ் மோடி வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ளார். இவரை கண்டுப்பிடிப்பதில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளது. நீரவ் மோடியை இந்தியாவிற்கு திரும்பக் கொண்டுவரும் நடவடிக்கையை துவக்க புலனாய்வுத்துறைக்கு மும்பை சிறப்பு கோர்ட் அனுமதியும் அளித்துள்ளது.
அரசியல் ஆதரவுடன் லண்டனில் நீரவ் மோடி பதுங்கியிருப்பதாக விசாரணை குழுவிற்கு ரகசிய தகவலும் கிடைத்துள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் பதுங்கி இருக்கும் நீரவ் மோடியை பிடிக்க உதவும்படி இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு இந்தியா கடிதம் எழுதி உள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இந்த நாடுகளுக்கும், அங்குள்ள இந்திய அமைப்புக்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த 3 நாடுகளுக்கு இந்தியா சார்பில் பலமுறை கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி மாதம், இந்திய அரசு நீரவ் மோடியின் பாஸ்போர்ட்டை முடக்கியது. எனினும், போலி பாஸ்போர்ட்டுகள் பயன்படுத்தி நீரவ் மோடி பல நாடுகளுக்கு பயணித்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. நீரப் மோடியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்ட தகவலை பிப்ரவரி 15 ஆம் தேதி இண்டர்போலில் தெரியப்படுத்தியதாக சிபிஐ அதிகாரிகள் கூறி உள்ளனர். அதே நேரத்தில் அமெரிக்கா மற்றும் பெல்ஜியம் நாட்டின் இன்டர்போல் கிளைகள் விசாரணை நடவடிக்கைக்கு ஒத்துழைக்கவில்லை எனவும் சி.பி.ஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
நீரவ் மோடி லண்டன், ஹாங்காங், பாரீஸ் போன்ற நாடுகளுக்கு போலி பாஸ்போர்ட்கள் மூலம் தப்பித்து செல்வதாக வந்த தகவலையடுத்து, ஐரோப்பிய நாடுகளின் உதவியை இந்தியா நாடியுள்ளது.