தேசிய மருத்துவக் கவுன்சில் அறிவுறுத்தலின்படி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை இதுநாள் வரையிலும் பெறாத புதுச்சேரி மாநில அரசைக் கண்டித்தும்; இந்த ஆண்டில் இருந்து 50 சதவீத மருத்துவ இடங்களைப் பெற வலியுறுத்தியும், தமிழகம் போன்று, அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ள மாணவர்கள், மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளியின் இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும், பாஜக- என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி அரசை கண்டித்தும் புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக மாநில கழக செயலாளர் அன்பழகன் அவர்கள் தலைமை தாங்கினார். மாநில கழக அவைத்தலைவர் அன்பானந்தம், மாநில அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில கழக செயலாளர் அன்பழகன் அவர்கள் பேசியதாவது, "புதுச்சேரியை ஆளும் எந்த அரசாக இருந்தாலும் மருத்துவ கல்வியில் அரசின் இடஒதுக்கீட்டை பெறுவதில் வியாபார நோக்கத்தோடு செயல்பட்டு வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்ற அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களிலும் 50 சதவீத இடங்களை பொறுவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு வெற்றி பெற்றவுடன் 50 சதவீத இடங்களுக்கு பதிலாக குறைந்த அளவில் அரசு இடங்களை ஆட்சியாளர்கள் பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் இயங்கும் நான்கு நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகத்தின் மூலம் எந்தவிதமான நன்மையும் நம் மாநிலத்திற்கு இல்லை. நம் மாநிலத்தின் தண்ணீர், மின்சாரம், நிலம் ஆகியவற்றை பயன்படுத்திக்கொண்டு தேர்தல் நேரத்தில் அவ்வப்போது இருக்கும் ஆட்சியாளர்களுக்கு தேர்தல் நிதி வழங்குவார்கள். இந்த நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கும் போது 50 சதவீத இடங்களை அரசுக்கு அளிப்போம் என உறுதிமொழி அளிக்கப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டில் மத்திய மருத்துவ கவுன்சில் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 50 சதவீத இடங்களுக்கு அரசு நிர்ணயம் செய்யும் கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும் என ஆணையிட்டது. ஆனால் இதையும் அரசு செய்ய முன்வரவில்லை.
நம் மாநிலத்தில் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் தவிர்த்து மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த மூன்று மருத்துவ கல்லூரிகளிலும் மொத்தம் 650 இடங்கள் உள்ளன. தேசிய மருத்துவ கவுன்சில் ஆணைப்படி 50 சதவீத 325 இடங்களை அரசு பெற வேண்டும். ஆண்டுதோறும் மனம் போன போக்கில் தனியார் மருத்துவ கல்லூரிகள் 30 சதவீதம், 32 சதவீதம், 35 சதவீதம் என நமக்கு பிச்சை போடுவது போல் வழங்குகிறார்கள். கடந்த ஆண்டு 239 இடங்கள் சுமார் 36 சதவீதம் மட்டும் அரசின் இடஒதுக்கீடாக அரசு தனியார் மருத்துவ கல்லூரிகளிடம் இருந்து மன்றாடி பெற்றது. 50 சதவீதம் பெற உரிய சட்டம் இயற்றாமல் ஆண்டுதோறும் கட்டப்பஞ்சாயத்து பேசுவது போல் தனியார் மருத்துவ உரிமையாளர்களிடம் அரசு பேரம் பேச வேண்டிய அவசியம் என்ன?
தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் இருந்து கழக பொதுச்செயலாளர், தமிழக முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் ஆட்சியலும், மைனாரிட்டி பிரிவினர் நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களும், மைனாரிட்டி சமூகம் இல்லாத பிறர் நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் 65 சதவீத இடங்களும் அரசின் இடஒதுக்கீடாக தொடர்ந்து பெறப்பட்டு வருகிறது.
இது சம்பந்தமாக கழகப் பொதுச்செயலாளர் கவனத்திற்கு இப்பிரச்சனையை கொண்டு சென்றவுடன் புதுச்சேரி அரசை கண்டித்தும், 50 சதவீத இடங்களை தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு இடங்களாக பெற வலியுறுத்தியும் இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு உரிய அனுமதியை வழங்கியுள்ளார். புதுச்சேரி மாணவர்களின் நலனுக்கான இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கிய கழக பொதுச்செயலாளருக்கு புதுச்சேரி மாநில கழகம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
தற்போது நம் மாநிலத்திற்கு புதியதாக ஒரு துணைநிலை ஆளுநர் வந்துள்ளார். அவர் தலைமை செயலாளராக பணிபுரிந்துள்ளார். யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் தனது நிர்வாகத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துபவராக இருப்பார் என நம்புகிறோம். இவ்வாண்டு தனியார் மருத்துவ கல்லூரியில் 50 சதவீத இடங்களை அரசின் இடங்களாக பெற அதிமுக சார்பில் தலைமை கழகத்தின் அனுமதி பெற்று துணைநிலை ஆளுநரை சந்தித்து மனு அளிக்கப்படும்.
தமிழகத்தில் கழக பொதுச்செயலாளர் தமிழக முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடியார் தலைமையிலான அதிமுக ஆட்சியில் இந்தியாவில் முதன் முதலாக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி அரசின் இடஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க சட்டத்தை கொண்டு வந்தார். அதில் தொலைநோக்கு சிந்தனையோடு ஏழை எளிய மாணவர்கள் நலன் பெறும் விதத்தில் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் இந்த உள் ஒதுக்கீட்டில் பயன்பெற தகுதியானர்கள் என்று நிர்ணயம் செய்தார். தமிழக அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த இந்த சட்டத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் கடந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் அரசின் இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் ஒன்றிலிருந்து 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டுமே இந்த உள் ஒதுக்கீட்டில் பயன்பெற முடியும் என ஆளும் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தொடர்ந்த 12 ஆண்டுகாலம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே இந்த சட்டத்தின் மூலம் பயன்பெற முடியும் என்பதால் போதிய மாணவர்களுக்கு இந்த சட்டத்தின் மூலம் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. எனவே தமிழக அதிமுக ஆட்சியில் கொண்டுவந்தது போன்று 6-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் அரசின் உள்ஒதுக்கீடு பெற தகுதி உடையவர் என திருத்த அரசாணையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.