போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கான மருத்துவ மாணவர்கள் இந்தியா திரும்புவதால், அவர்களின் படிப்பை முடிப்பதில் ஒரு நிச்சயமற்ற நிலை உள்ளது.
தற்போது மாணவர்கள், தங்கள் எம்பிபிஎஸ் பட்டப்படிப்பை’ படிப்பின் காலத்தை நீடிக்காமல் முடிக்க, சிறப்பு தளர்வுகளை வழங்கும் திட்டம் எதுவும் மையத்திடம் இல்லை என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் கண்டறிந்தது.
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறும் மருத்துவ மாணவர்களின் சட்டப்பூர்வ விதிமுறைகளின்படி, படிப்பை முடிக்க சுமார் இரண்டு ஆண்டுகள் இருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. "எனவே, உக்ரைனில் இருந்து திரும்பும் மாணவர்கள் இப்போதைக்கு கவலைப்பட வேண்டியதில்லை" என்று மேலே குறிப்பிடப்பட்ட ஆதாரங்கள் தெரிவித்தன.
இந்தியா தற்போது உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தனது குடிமக்களை, முக்கியமாக மருத்துவ மாணவர்களை மீட்க ஆபரேஷன் கங்காவை மேற்கொண்டு வருகிறது.
வியாழன் அன்று வெளிவிவகார அமைச்சக தகவலின்படி, உக்ரைனில் இருந்து வெளியேறுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டதிலிருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 18,000 என்று கூறியது.
தேசிய மருத்துவ ஆணையம் (NMC) ஆன்லைன் முறையில் முடித்த மருத்துவப் படிப்புகளை அங்கீகரிக்கவில்லை. அதன் சட்ட விதிகளின்படி, ஒரு வெளிநாட்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவப் படிப்பை பதிவு செய்த நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும்.
மேலும், இத்தகைய மாணவர்கள் இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு இன்டர்ன்ஷிப் அல்லது தேர்வுக்காக இடம்பெயர்வதை விதிமுறைகள் அனுமதிக்காது. "எம்பிபிஎஸ் படிப்பு, பயிற்சி மற்றும் இன்டர்ன்ஷிப் ஒரே வெளிநாட்டு மருத்துவ நிறுவனத்திலிருந்தே செய்யப்பட வேண்டும்" என்று விதிமுறைகள் தெளிவாகக் கூறுகின்றன.
மருத்துவ பட்டதாரிகளுக்கு, இந்தியாவில் 12 மாத இன்டர்ன்ஷிப்பை முடிக்க விதிமுறைகள் கட்டாயமாக்குகின்றன.
இத்தருணத்தில், உக்ரைனில் இருந்து திரும்பும் மருத்துவ மாணவர்களுக்கான விதிகளில் மாற்றங்களைச் செய்வதற்கான முன்மொழிவு எதுவும் இல்லை, ஏனெனில் அவர்களுக்கு படிப்பை முடிக்க போதுமான நேரம் உள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
“உக்ரைனில் எம்பிபிஎஸ் படிப்புக்கு ஐந்தரை ஆண்டுகள் ஆகும். ஒரு மாணவர் உக்ரைனில் 12 மாத இன்டர்ன்ஷிப்பை முடிக்க வேண்டும், அதேபோன்ற ஒரு பயிற்சியை இந்தியாவிலும் முடிக்க வேண்டும். எனவே, ஒரு மாணவர் பொதுவாக 7.5 ஆண்டுகளில் பட்டப்படிப்பை முடிக்கிறார். எனவே, இறுதி ஆண்டு மாணவர்களுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இடையீடு உள்ளது, ”என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
குறிப்பிடத்தக்க வகையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, இந்தியா உட்பட ஏராளமான சர்வதேச மாணவர்கள், தங்கள் எம்பிபிஎஸ் பட்டப்படிப்பைத் தொடர சீனாவுக்குத் திரும்ப முடியவில்லை. இந்த படிப்பு ஆன்லைனில் முடிக்கப்படும் என்று சீன அதிகாரிகள் முன்பே தெரிவித்திருந்தனர்.
இருப்பினும், பிப்ரவரி 8 அன்று, தேசிய மருத்துவ ஆணையம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது, மருத்துவக் கல்விக்கான ஆன்லைன் முறையை’ ஒழுங்குமுறை ஆணையம் அங்கீகரிக்கவில்லை என்று மீண்டும் வலியுறுத்தியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.