புதிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது, மோதல்களில் நான்கு பேர் இறந்த நிலையில், டிசம்பர் 20 ம் தேதி போராட்டம் நடத்தியவர்களை ஒரு போலீஸ் உயர் அதிகாரி அவர்களை பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள் என்று கூறியது கேமிராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ வைரல் ஆகியுள்ளது.
புதிய குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம், லிசாரி கேட்டில் புதிய குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராடியவர்களிடம் மீரட் நகர் போலீஸ் எஸ்.பி. அகிலேஷ் என். சிங் போராட்டக்காரர்களிடம் இங்கே வாழ முடியாவிட்டால், பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று கூறியுள்ளார். அவர் பேசிய வீடியோவில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. ஒரு போலீஸ் உயர் அதிகாரி இப்படி கூறியிருப்பது அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.
லிசாரி கேட்டில் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவில் அந்த போலீஸ் உயர் அதிகாரி, நீங்கள் எங்கே போகிறீர்கள்? நான் இந்த வரிசையை ஒழுங்குபடுத்துவேன் என்று கூறுகிறார்.
அதன் பின்னர், அந்த அதிகாரி அங்கிருந்த மூன்று பேர்களிடம் திரும்பி, “கருப்பு, மஞ்சள் பட்டைகளை கட்டியவர்கள், அவர்களை பாகிஸ்தானுக்கு செல்லச் சொல்லுங்கள். நீங்கள் இங்கே சாப்பிடுகிறீர்கள், ஆனால் வேறொரு இடத்தைப் புகழ்ந்து பாடுகிறீர்கள்... இந்த வழி இப்போது எனக்கு நல்லா தெரியும். மறுபடியும் நான் உனக்களுக்கு நினைவூட்டுகிறேன். என்னால் உங்கள் பாட்டியை கூட அடைய முடியும்” என்று கூறியுள்ளார்.
மேலும், அந்த வீடியோவில், மற்ற பணியாளர்களால் சூழப்பட்ட அந்த போலீஸ் உயர் அதிகாரி, இருமுனைச் சந்திப்பில் நின்றிருந்த மூன்று பேரிடம், ஏதாவது நடந்தால், நீங்கள் அதற்கான விலை கொடுப்பீர்கள். எல்லா வீடுகளில் இருந்தும், ஒவ்வொருவரும் கைது செய்யப்படுவார்கள்” என்று கூறுகிறார். போலீஸ் உயர் அதிகாரி போராட்டக்காரர்களை பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று கூறிய வீடியோ வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது.
இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் போலீஸ் உயர் அதிகாதிரி அகிலேஷ் என். சிங்-ஐ தொடர்பு கொண்டபோது, அவர் கூறியதாவது, “சமூக விரோத சக்திகள் பாகிஸ்தான் சார்பு அறிக்கைகளை வெளியிட்டதே அதற்கு காரணம். யார் எல்லாம் பாகிஸ்தான் சார்பு அறிக்கைகளை வெளியிடுகிறார்கள் என்பதைப் பார்க்க நாங்கள் அப்பகுதிக்கு வந்திருந்தோம். நாங்கள் போலீசாருடன் வந்தபோது, அவர்கள் ஓடிவிட்டார்கள். இது போன்ற ஒரு சிக்கலை உருவாக்க விரும்பும் 3-4 பேர் இருந்ததை நாங்கள் கண்டறிந்தோம். நாங்கள் உள்ளூர் மக்களுடன் கலந்துரையாடினோம்”என்று எஸ்.பி. அகிலேஷ் என் சிங் கூறினார்.