newest mammal White Cheeked Macaque: ஜியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா ஆராய்ச்சியாளர்கள் நம்முடைய நாட்டில் வெண்முக மந்தி என்ற புதிய பாலூட்டி வகை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
2015ம் ஆண்டு சீனாவில் இத்தகைய குரங்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட போதும் இந்தியாவில் இந்த குரங்குகளின் இருப்பை யாரும் உறுதி செய்யவில்லை. வெகு சமீபத்தில் தான் இந்திய ஆராய்ச்சியாளர்கள் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள அஞ்சாவ் என்ற பகுதியில் இந்த குரங்குகள் இருப்பதை உறுதி செய்துள்ளனர். சீனாவில் இந்த குரங்குகள் தென்கிழக்கு திபெத்திய பகுதியான மொடோக் என்ற பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து வெறும் 200 கி.மீ தொலைவில் இந்த குரங்குகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பு அனிமல் ஜீன் என்ற சர்வதேச இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு ஒரு விபத்து தான். நாங்கள் வெண்முக மந்தியை தேடி ஆராய்ச்சியை நடத்தவில்லை. இமய மலையில் வாழும் உயிரினங்கள் குறித்து ஆராய்ச்சி செய்யவே எங்களுக்கு ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் இமாலய பகுதியின் பல்லுயிர் தன்மை மற்றும் இந்த பகுதியில் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள விலங்கினங்கள் குறித்து நாங்கள் ஆய்வு செய்து வந்தோம் என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட டாக்டர் முகேஷ் தாக்கூர் கூறினார். ZSI இயக்குநராக இருந்து ஓய்வு பெற்ற டாக்டர் கைலாஷ் சந்திரா தலைமையில் நடைபெற்ற இந்த ஆராய்ச்சியின் அறிக்கையை எழுதிய மூத்த ஆராய்ச்சியாளர்களில் முகேஷூம் ஒருவர்
கிழக்கு இமாலயாவில் சிவப்பு நிற பாண்டா மற்றும் அருணாச்சல மந்திகளை நாங்கள் ட்ராக் செய்து கொண்டிருந்தோம். அப்போது என்னுடைய மாணவர்களில் ஒருவரான அவிஜித் கோஷ் அருணாச்சல மந்திகளை ட்ராக் செய்து கொண்டிருந்தார். ரோமம் மற்றும் கழிவு மாதிரிகளை சேகரித்து எங்களுடைய ஆய்வகங்களில் ஆய்வு மேற்கொண்டோம். டி.என்.ஏ. மரபணு வரிசைப்படுத்தல் ஆய்வின் போது அது அருணாச்சல மந்தி இல்லை ஆனால் வெண்முக மந்தி என்பது கண்டறியப்பட்டது என்று முகேஷ் கூறினார்.
இந்த ஆய்வு முடிவுகள் அதிர்ச்சி அளித்த நிலையில் மீண்டும் நாங்கள் ஆய்வை மேற்கொண்டோம். ஆனால் அப்போதும் அது வெண்முக மந்தியின் டி.என்.ஏ. தான் என்பது உறுதி செய்யப்பட்டது. அப்போது தான் இந்தியாவில் இத்தகைய குரங்குகள் இருப்பதை எண்ணி ஆச்சரியம் அடைந்தோம் என்றும் அவர் கூறினார்.
இது வெண்முக மந்திதானா என்பதை உறுதி செய்ய மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது இந்த ஆராய்ச்சி குழு. கேமரா ட்ராப்களை பொறுத்தியுள்ளனர். இறுதியில் அஞ்சாவ் பகுதியில் உள்ள வேட்டைப் பழங்குடிகளில் ஒருவர் காட்டில் இருந்து பிடித்து வந்த வெண்முக மந்தியின் குட்டியையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த நாட்களில் பெரிய வகை உயிரினங்களை கண்டுபிடிப்பது மிகவும் அரிதாகவே அரங்கேறி வருகிறது. டாக்ஸானோமி ஆராய்ச்சியாளர்களாக நாங்கள் சிறிய வகை உயிரினங்கள், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் பூச்சி இனங்களை மட்டுமே கண்டறிந்து ஆவணப்படுத்துகிறோம். ஆனால் இது மிகவும் அரிதானது என்றும் அவர் கூறினார்.
இந்த பாலூட்டியின் கண்டுபிடிப்பிற்கு பிறகு இந்தியாவில் உள்ள பாலூட்டிகளின் எண்ணிக்கையானது 437-ல் இருந்து 438 ஆக உயர்ந்துள்ளது.
தனித்துவமான வெண்மை நிற கன்னங்களை கொண்டுள்ள இந்த மந்தியின் முதுகில் நீண்ட அடர்த்தியான ரோமங்கள் உள்ளன. மற்ற மந்திகளைக் காட்டிலும் நீளமான வாலையும் கொண்டுள்ளது இந்த குரங்கு. தென்கிழக்கு ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கடைசி பாலூட்டி இதுவாகும்.
அருணாச்சல மந்திகள் மற்றும் வெண்முக மந்திகள் கிழக்கு இமாலயாவில் ஒரே பல்லுயிர் மண்டலத்தின் கீழ் வசித்து வருகின்றன.
கிழக்கு அருணாச்சலப்பிரதேசத்தில் மேலும் ஆய்வுகள் நடத்தினால் இந்த மந்திகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும் கண்டுபிடித்துவிட இயலும். சீனாவுக்கு மிக அருகில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தில் வெண்முக மந்தி இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக பூட்டானிலும் இவ்வகை குரங்குகள் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இந்த உயிரினம் வனவிலங்கு பட்டியலோடு சேர்க்கப்படுவதோடு, இந்திய வனபாதுகாப்பு சட்டத்தின் கீழும் இணைக்கப்படும். இந்த உயிரினத்தின் இருப்பே தெரியவில்லை என்பதால் இது பட்டியலில் இணைக்கப்படவில்லை என்று கூறிய தாக்கூர் மேலும், இந்த மந்திகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன மற்றும் உடனடி கவனமும் பாதுகாப்பும் தேவை என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். உயிரினங்களைக் கண்காணிப்பது அவசியம் என்று ZSI க்கு ஏற்கனவே முன்மொழியப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.