காஷ்மீரில் வாக்குரிமையை மறுத்தால்...! மெகபூபா விடுக்கும் எச்சரிக்கை

காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி மத்திய அரசிற்கு கடும் எச்சரிக்கை

உலகெங்கிலும் இருக்கும் காஷ்மீர் மக்கள், தியாகிகள் தினத்தினை ஜூலை 13ம் தேதி கடைபிடிப்பது வழக்கம்.

1931ம் ஆண்டு, தோக்ரா படை, 22 அப்பாவி காஷ்மீர் மக்களை கொன்றதன் நினைவாக ஒவ்வொரு வருடமும் துக்கம் அனுசரிப்பது வழக்கம்.

இவர்கள் அடக்கம் செய்யப்பட்ட பகுதியில், அஞ்சலிக்காக வந்திருக்கிறார், காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி.

அஞ்சலில் செலுத்திவிட்டு வெளியில் வந்த முஃப்தி, செய்தியாளர்களை சந்தித்தார்.

மத்திய அரசு மக்கள் ஜனநாயக கட்சியினை கலைக்கவோ, மக்களுக்கு வாக்குரிமையை மறுக்கவோ முயற்சி செய்யுமானால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

1987ல் காஷ்மீர் மக்களுக்கு ஓட்டுரிமையை மறுத்தது போல், வருங்காலத்தில் நடக்குமானால், மத்திய அரசு யாசின் மாலிக் மற்றும் சலாஹூதீன் போன்றவர்களின் தோற்றத்தினையும் வளர்ச்சியினையும் நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.

மேலும், காஷ்மீரில் ஆட்சி அமைக்க மத்திய அரசின் ஒப்புதலோ அல்லது டெல்லியின் நட்புறவோ எங்களுக்கு தேவையில்லை. காஷ்மீருக்குள் நடக்கும் சிறு சிறு பிரச்சனைகளை நாங்கள் சரி செய்துகொள்வோம் என்றும் பேசியிருக்கிறார்.

இவரின் பேச்சுக்கு பதில் கூறிய முன்னாள் காஷ்மீர் முதல்வர் மற்றும் நேசனல் கான்பிரன்ஸ் கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா குறிப்பிடுகையில் “முஃப்திக்கு மனநிலை சரியில்லை என்று நினைக்கின்றேன். போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் புத்துயிர் பெற்று பிறந்ததெல்லாம் முஃப்தியின் ஆட்சியில் தான் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்” என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம், பாஜக மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணியில் அமைந்த காஷ்மீர் அரசு கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. காஷ்மீரின் பாஜக தலைவர் ராம் மாதவ், டெல்லியில் அமித் ஷாவுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட பின்பு, கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக பாஜக அறிவித்தது.

கூட்டணி முறிவு ஏற்பட்டவுடன், முஃப்தி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close