அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் இந்தியா வந்துள்ள அவருடைய மனைவி மெலனியா டிரம்ப் இந்திய வருகைக்காக ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்து வந்திருந்தார். அதில் இருந்த ஒரு இந்தியத் தன்மை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் அவரது குடும்பத்தினரும் இன்று காலை இந்தியா வந்தடைந்தனர். அகமதாபாத் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்திலிருந்து அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா அணிந்திருந்த ஆடையை முதலில் யாரும் அவ்வளவு நுட்பமாக கவனிக்கவில்லை என்றாலும் அதில் இருந்த இந்திய டச் கவனத்தை ஈர்த்து வருகிறது.
மெலனியாவின் ஆடை வடிவமைப்பாளர் ஹெர்வ் பியர்ரே வடிவமைத்திருந்த ஒரு வெள்ளை நிற முழு ஜம்ப் சூட்டை மெலனியா அணிந்திருந்தார். இதனை அவர் ஒரு ஜோடி வெள்ளை பேண்ட் உடன் வடிவமைத்துள்ளார்.
நவ நாகரிகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வெள்ளை சூட் ஆடையில் இடுப்பைச் சுற்றி அணிந்திருந்த பச்சைப் பட்டு ஜரிகை வைத்த பட்டை கவனத்தை ஈர்த்தது. இந்த பச்சைப்பட்டு ஜரிகைப் பட்டை ஒரு இந்தியத் தன்மையுடன் இருந்ததால் கவனம் ஈர்த்த மெலனியாவின் ஆடை குறித்து பலரும் பேசும்படியானது.
மெலனியா டிரம்ப்பின் ஆடை குறித்து இன்ஸ்டாகிராமி பதிவிட்ட வடிவமைப்பாளர், “20-ம் நூற்றாண்டின் ஆரம்பகால இந்திய ஜவுளி ஆவணங்களில் பாரிஸில் நான் நல்ல நண்பர்கள் மூலம் சேகரித்து இதுபோல வடிவமைத்தேன்.” என்று தெரிவித்துள்ளார். மேலும், சிக்கலான ஜரிகை வேலைப்பாடுகளால் ஆன பச்சை பட்டுடன் சாஷ் தயாரிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். நாங்கள் ஒரு பார்டர் கரையைப் பயன்படுத்தினோம். இது மிகவும் சுவாரஸ்யமானது. இது ஒரு விண்டேஜ் துண்டு என்பதால் நாங்கள் பயன்படுத்தினோம் என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.