நாட்டைவிட்டு வெளியேறும் முன் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்தேன்! - விஜய் மல்லையா

சிபிஐ கொடுத்த நிர்பந்தம் காரணமாகவே மல்லையா மீது வங்கிகள் புகார் அளித்தது என மல்லையா சார்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டார்

வங்கி மோசடி விவகாரத்தில் பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரும் வழக்கில் டிசம்பர் 10-ம் தேதி லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, 13 பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்று லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது.

லண்டனில் உள்ள அவரை இந்தியா கொண்டுவர , லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் இந்தியா சார்பில் வழக்கு நடந்து வருகிறது. அவர் விரைவில் இந்தியா கொண்டுவரப்படுவார் எனத் தெரிகிறது. கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது மும்பை ஆர்தர் சாலை சிறையின் வீடியோவை லண்டன் கோர்ட் நீதிபதி கேட்டதன் பேரில், இந்தியா தாக்கல் செய்தது.

இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், விஜய் மல்லையா ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், “நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன். என் மீதான குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன். எனினும், கோர்ட் எல்லாவற்றையும் தீர்மானிக்கும்” எனவும் மல்லையா குறிப்பிட்டார்.

முன்னதாக, வழக்கு விசாரணையின் போது, “சிபிஐ கொடுத்த நிர்பந்தம் காரணமாகவே மல்லையா மீது வங்கிகள் புகார் அளித்தது” என மல்லையா சார்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டார்.

வழக்கு விசாரணை முடிந்த பின்னர், நாடு கடத்தக்கோரும் வழக்கின் மீதான தீர்ப்பு டிசம்பர் 10-ம் தேதி வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.

இந்நிலையில், ‘விஜய் மல்லையா என்னை சந்தித்ததாக வெளியாகும் தகவல் பொய்” என்று அருண் ஜெட்லி மறுத்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close