எம்.ஜி.ஆர். பிறந்த நாளை இன்று உலகம் முழுவதும் அவர் மீது அபிமானம் கொண்ட தமிழர்கள் கொண்டாடுகிறார்கள். மேற்கு வங்க முதல்வர் மம்தாவும் வாழ்த்து கூறியிருக்கிறார்.
எம்.ஜி.ஆர்., தமிழ்த் திரையுலகிலும் தமிழ்நாடு அரசியலிலும் தன்னிகரற்ற இடத்தைப் பிடித்தவர். அரசியலில் நுழைந்து, மரணிக்கும் வரை வெற்றிகளை குவித்தவர்! இன்று (ஜனவரி 17, 2018) அவரது 101-வது பிறந்த நாள்!
எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழாவையொட்டி அவரது இயக்கமான அதிமுக.வை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், பல்வேறு இயக்கத்தினரும் கொண்டாடி வருகிறார்கள். சமூக வலைதளங்களில் ரஜினிகாந்த், அஜித் ரசிகர்கள் வாழ்த்துகளை உலவ விட்டபடி இருக்கிறார்கள். குறிப்பாக அரசியலில் காலடி எடுத்து வைக்கவிருக்கும் ரஜினிகாந்துக்கும் பலம் சேர்க்கும் வகையில் அவர் எம்.ஜி.ஆருடன் பங்கேற்ற வீடியோக்கள், போட்டோக்கள் ஆகியவற்றை பதிவிட்டு வருகிறார்கள்.
எம்.ஜி.ஆர். மரணமடைந்து 30 ஆண்டுகளைக் கடந்தும் அவரது நினைவு சர்வதேச அளவில் நிலைத்து நிற்பதை இன்று அவரது பிறந்த நாளையொட்டி குவியும் வாழ்த்துகள் மூலமாக உணர முடிகிறது. தேசிய அளவிலும் பல தலைவர்கள் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை பெருமிதமாக நினைவு கூர்ந்திருக்கிறார்கள்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ‘சிறந்த தலைவராகவும், திரையுலக ஜாம்பவானாகவும் திகழ்ந்த எம்.ஜி.ராமச்சந்திரனை அவரது பிறந்த நாளில் நினைவு கூர்கிறேன்’ என குறிப்பிட்டிருக்கிறார். மம்தாவின் வாழ்த்துக்கு நன்றி கூறும் வகையில் அவரது ட்விட்டர் பக்கத்தில் எம்.ஜி.ஆர். அபிமானிகள் பலரும் பின்னூட்டம் இட்டு வருகிறார்கள்.