scorecardresearch

கொரோனா அதிகரிப்பு எதிரொலி: தேவைக்கேற்ப கட்டுபாடுகளை விதிக்க மாநிலங்களுக்கு உள்துறை அறிவுறுத்தல்

ஆக்ஸிஜன் விநியோக கருவிகள் முழுமையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் இருப்பை பராமரிக்க வேண்டும் என்று உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் எழுதியுள்ளார்.

கொரோனா அதிகரிப்பு எதிரொலி: தேவைக்கேற்ப கட்டுபாடுகளை விதிக்க மாநிலங்களுக்கு உள்துறை அறிவுறுத்தல்

‘Consider imposing need-based curbs’: MHA to states amid Covid-19 surge: நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதையும், கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஓமிக்ரானின் தோற்றத்தையும் கருத்தில் கொண்டு, உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு “தேவை அடிப்படையிலான” கட்டுப்பாடுகளை விதிக்குமாறும் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சுகாதார அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதல்களை செயல்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

சுகாதார அமைச்சகம் வழங்கிய அறிவுறுத்தல்களை அமல்படுத்துவதற்காக பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வ உத்தரவுகளையும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாடு சிகிச்சையில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கையில் ஒட்டுமொத்த சரிவைக் கண்டுள்ளது. இருப்பினும், புதிய மாறுபாடு, ஓமிக்ரான்… டெல்டாவை (கவலையின் மாறுபாடு) விட குறைந்தபட்சம் 3 மடங்கு அதிகமாக பரவக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இது கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஒரு புதிய சவாலாக உள்ளது. ஒமிக்ரான் அதிகம் பரவி வரும் நாடுகளில், பாதிப்புகளின் வளர்ச்சிப் பாதை மிகவும் செங்குத்தானதாக உள்ளது. நம் நாட்டில், 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 578 ஓமிக்ரான் பாதிப்புகள் ஏற்கனவே பதிவாகியுள்ளன” என்று உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் எழுதியுள்ளார்.

டிசம்பர் 21 அன்று சுகாதார அமைச்சகம் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான விதிமுறை கட்டமைப்பை விவரிக்கும் ஒரு ஆலோசனையை வெளியிட்டது என்றும், ஓமிக்ரான் தொற்றைக் கருத்தில் கொண்டு “அதிக தொலைநோக்கு பார்வை, தரவு பகுப்பாய்வு, தகுந்த முடிவுகள் மற்றும் தீவிர மற்றும் கடுமையான உள்ளூர் மற்றும் மாவட்ட அளவில் உடனடி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தேவை என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

புதிய மாறுபாட்டால் ஏற்படும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள மாநிலங்களில் உள்ள சுகாதார அமைப்புகள் பலப்படுத்தப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். மேலும், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் ஆக்ஸிஜன் விநியோக கருவிகள் நிறுவப்பட்டு முழுமையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் இருப்பு பராமரிக்கப்பட வேண்டும்” என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

116 நாடுகளில் ஓமிக்ரான் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா (பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின்), ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, வியட்நாம், ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் ஒமிக்ரான் பாதிப்பில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்க வேண்டும், மேலும் தடுப்பு நடவடிக்கைகளைக் கைவிடக்கூடாது என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். உள்ளூர் அல்லது மாவட்ட நிர்வாகம், ஒழுங்குமுறை கட்டமைப்பு மற்றும் நிலைமையை மதிப்பிடுவதன் அடிப்படையில், உடனடியாக தகுந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பண்டிகைக் காலங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த, தேவை அடிப்படையிலான, உள்ளூர் கட்டுப்பாடுகள் அல்லது தடைகளை விதிக்க மாநிலங்கள் பரிசீலிக்கலாம்” என்று அஜய் பல்லா கடிதத்தில் எழுதியுள்ளார்.

மேலும், பரிசோதனை-தொடர்பறிதல்-சிகிச்சை-தடுப்பூசி மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு இணங்குதல் ஆகிய ஐந்து முக்கிய வியூகங்களில் தொடர்ந்து கவனம் செலுத்துவது குறித்து கடிதம் வலியுறுத்தியுள்ளது.

“அரசு நிர்வாகம் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும், அதாவது, முகக்கவசம் அணிதல் மற்றும் அனைத்து பொது இடங்கள் அல்லது கூட்டங்களில் பாதுகாப்பான சமூக இடைவெளியை பராமரித்தல்” போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என்று கடிதம் கூறுகிறது.

பொதுமக்களிடையே பதற்றத்தைத் தவிர்ப்பதற்காக, ஓமிக்ரான் தொடர்பான தவறான தகவல்களை தடுக்குமாறு மாநிலங்களை அந்தக் கடிதம் கேட்டுக் கொண்டுள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் தங்களுக்கு சரியான தகவலைப் பரப்புவதற்கு உயர்மட்ட அளவில் ஊடக சந்திப்புகளை முன்னோட்டமாகவும், முறையாகவும் நடத்த வேண்டும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தாங்கள் மேற்கொண்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும், மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Mha coronavirus omicron