காஷ்மீரில் சமீபகாலமாக அப்பாவி மக்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே சனிக்கிழமை 2 தொழிலாளர்களைப் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதால், அங்கிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் ஒருவித அச்சம் இருந்து வந்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு தொழிலாளர்கள் இறந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக அப்பகுதிக்குக் காவல் துறையினரும், பாதுகாப்புப் படையினரும் விரைந்தனர். அங்கிருந்து தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த தாக்குதல் காரணமாக, திங்கட்கிழமையில் 100க்கு கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் காஷ்மீரை விட்டுப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இதற்கிடையில் , டெல்லியில் உள் துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நாடு முழுவதும் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் துணை ராணுவ அதிகாரிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், நாட்டில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்தும், காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
செய்தியாளர்களிடம் பேசிய பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், காஷ்மீர் வேலைக்கு செல்பவர்கள் தான் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படுகிறது. இவ்விவகாரம் குறித்து காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவிடம் உரையாடினேன். காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பிகாரை சேர்ந்த தொழிலாளர்கள் நிவாரண நிதியாக ரூபாய்.2 லட்சம் வழங்கப்படும். அங்கிருப்பவர்களைப் பாதுகாப்பு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் வேலைக்காக எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் செல்லலாம்” என்றார்

காஷ்மீரை விட்டு தனது 8 சகோதரர்களுடன் புறப்பட்ட தொழிலாளி சோனு சஹினியிடம் பேசுகையில், ” உயிரை விட முக்கியமானது எதுவுமில்லை. ஒரு தொழிலாளி எப்பவும் பூமிக்கு ஒரு சுமை தான். தற்போது அவனும் தோட்டாக்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாக்கியுள்ளது” என்றார்.
சாலையில் சகோதரர்களுடன் இணைந்து பழங்கள், கடலை விற்று வரும் சோனு, காஷ்மீரின் சிறந்த அந்தஸ்து ரத்துசெய்த போது சொந்த ஊர் திரும்பியுள்ளார். கையில் இருக்கும் பணம் காலியானதும், மீண்டும் மார்ச் மாதத்தில் காஷ்மீர் வந்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் மூன்று முதல் நான்கு லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் காஷ்மீருக்கு வருகிறார்கள். அதில், பெரும்பாலானோர் பிகார், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் தான். கடினமாக வேலை செய்து, பணத்தை சேமித்துக்கொண்டு குளிர்காலத்தில் சொந்த ஊர் சென்றுவிடுவார்களாம்.
பிகாரில் தினசரி ஊதியமாக 250 ரூபாய் கிடைக்கும் நிலையில், காஷ்மீரில் அவர்களுக்கு 500 ரூபாய் கிடைக்கிறது. குறிப்பாக, மூடி திருத்துவோர் மற்றும் தச்சர்களுக்கு நல்ல ஊதியம் கிடைப்பதால், ஆண்டு முழுவதும் காஷ்மீரில் இருப்பார்கள் என கூறப்படுகிறது.
மற்றொரு தொழிலாளி மொஹமட் கஃபீல் கூறுகையில், ” இங்கு பல தொழிலாளர்கள் வருடக்கணக்கில் தங்கியிருந்தனர். நான் காஷ்மீரில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால், இந்த கொலைகள் தொடர்ந்து அரங்கேறிவருகிறது. தைரியத்துடன் தான் இருக்கிறேன். ஆனால், எனது குடும்பத்தினர் பயப்படுகின்றனர். ஊருக்கு வரும்படி அழைத்து வருகிறார்கள். ஏன், தொழிலாளர்களைக் குறிவைக்கின்றனர் என்பது தெரியவில்லை. அரசியலும் புரிந்துகொள்ளமுடியவில்லை. நாங்கள் வாழ்வாதாரத்திற்காக மட்டுமே இங்கு வந்துள்ளோம் ” என்றார்.
இச்சம்பவம் காரணமாக ஊரை விட்டு கிளம்புகிறது சரியான யோசனை இல்லை என பல தொழிலாளர்கள் கருதுகின்றனர். அவர்கள் இங்கிருந்து நிலைமையைக் கண்காணிக்கப் போவதாக கூறுகின்றனர்.
10 ஆண்டிற்கு மேல் காஷ்மீரில் வேலை செய்யும் பீகாரைச் சேர்ந்த பங்கஜ் குமார், 2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பிரச்சினை போலவே, பயங்கரவாதிகள் தாக்குதல் பிரச்சினையும் விரைவில் சரியாகும் என நம்பிக்கை தெரிவித்தார். சொல்லப்போனால், ஸ்ரீநகரை விட்டு வெளியேறும் ஒரு தொழிலாளி கூட நம்பிக்கை இழந்துவிட்டதாகக் கூறவில்லை. அவர்களின் கூற்றுப்படி, குளிர்காலம் தொடங்கியதால், ஊருக்கு செல்கிறோம். கொலை நடப்பதால் பயந்து செல்லவில்லை என்கின்றனர்.
இதுகுறித்து ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் சிஆர்பிஎஃப் அதிகாரி கூறுகையில், ” வழக்கத்திற்கு மாறாக தொழிலாளர்கள் எண்ணிக்கை ரயில் நிலையங்களில் அதிகளவில் உள்ளது. எவ்வாராயினும், நவம்பர் மாதத்தில் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்புவார்கள். தற்போது கொலைகள் ஏற்படுவதால், அவர்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டுள்ளனர் என தெரிவித்தார்.
கடந்த 2 வாரங்களில் மட்டும் பொதுமக்கள் 11 பேரை, பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil