புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், இன்று (பிப் 17) செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். குறிப்பாக, "கடந்த 14-ஆம் தேதி தனியார் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தி வந்ததும், குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். யாருடைய தலையீடும் இன்றி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் சுயலாபத்திற்காக அரசு மீது கலங்கம் விளைவிக்க வேண்டும் என சிலர் அரசியல் செய்கின்றனர். எந்த இடத்திலும் போலீசார் மெத்தனமாக செயல்படவில்லை. இந்த ஆட்சியில் தொடர்ந்து கொலை, கொள்ளை நடப்பதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசி வருகிறார். இந்த விவகாரத்தில் என்னையும், முதல்வரையும், சபாநாயகரையும் தொடர்புபடுத்தி நாராயணசாமி பேசுகிறார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அவருக்கு நான் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு பொறுப்பேற்றது முதல் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது.
கடந்த 2016 முதல் 2021-ஆம் ஆண்டு வரை நாராயணசாமி ஆட்சியில், பெண்களுக்கு எதிரான 413 குற்றங்கள் நடந்துள்ளன. 366 சிறார் பாலியல் வன்கொடுமை வழக்குகளும், 47 பாலியல் வன்கொடுமை வழக்குகளும், 174 கொலை வழக்குகளும், 31 கொலை முயற்சி வழக்குகளும், 222 செயின் பறிப்பு வழக்குகளும், 94 வழிப்பறி வழக்குகளும், 24 கொள்ளை முயற்சி வழக்குகளும் பதிவாகியுள்ளன. அவரது ஆட்சியில் எந்த தவறும் நடக்காதது போல் நாராயணசாமி பேசுகிறார்.
என் குடும்பத்தினர் தலையீடு போலீசாரிடம் இருப்பதாக அவர் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசியல் மற்றும் நிர்வாகத்தில் என் குடும்ப பெண்கள் தலையிட்டது கிடையாது. முதல்வராக, மத்திய அமைச்சராக இருந்தவர் தரம் தாழ்ந்து பேசுவதை கண்டிக்கிறேன். நாங்கள் எல்லாம் பேச ஆரம்பித்தால், நாராயணசாமி தாங்க மாட்டார். அடிப்படை ஆதாரமின்றி குற்றம் சுமத்துவதை நாராயணசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்படும்.
சிறுமி பாலியல் தொல்லை வழக்கை நீதிமன்றம் முடிவு செய்யும். மருத்துவ பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அப்பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள வேறு பள்ளியில் செய்முறை தேர்வில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.