அகண்ட பாரதத்தில் இருந்த 6 நதிகளில் 3 நதிகளில் இருந்து இந்தியாவின் பங்கு நதிநீர் பாகிஸ்தானுக்குள் பாய்கிறது அதை தடுத்து நிறுத்த மத்திய அரசு முயற்சித்து வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். மேலும், அந்த நீரை ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி, உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பெறும் என்று கூறினார்.
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் இருந்து குஜராத் பாஜகவின் ஜன் சம்வத் கூட்டத்தில் ஆன்லைனில் உரையாற்றிய நிதின் கட்கரி, இந்தியா அமைதி மற்றும் அகிம்சையை நம்புவதாகவும், இந்தியா விரிவாக்கவாதியாக மாறுவதன் மூலம் வலுவாக இருக்க விரும்பவில்லை என்றும் கூறினார்.
இந்த கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “அகண்ட பாரதத்தில் 6 ஆறுகள் இருந்தன. அவை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளையும் கடந்து செல்கின்றன. பிரிவினையின்படி 3 நதிகளின் நீர் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற 3 நதிகளின் நீரும் இந்தியா பயன்படுத்தப்பட வேண்டும். நம்முடைய பங்கு நீரும் பாகிஸ்தானுக்குள் பாய்கிறது.” என்று கூறினார்.
மேலும், அவர் இந்த விவகாரத்தில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இதற்கு முன்னர் ஒன்றிணையவில்லை என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “1970-க்குப் பிறகு முதல்முறையாக, நம்முடைய முன்னாள் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் மற்றும் பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் அமரிந்தர் சிங் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு கேட்டுக்கொண்டேன். பாகிஸ்தானுக்குள் தண்ணீர் பாய்வதை தடுக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். இப்போது காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி, உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்திற்கும் இந்த நீர் கிடைக்கும். இந்த முடிவை எடுக்க நம்முடைய அரசாங்கம் தைரியம் காட்டுகிறது. மற்றபடி, இதில் 1970 முதல் எதுவும் நடக்கவில்லை” என்று கூறினார்.
நதி நீரைப் பிரிப்பது தொடர்பான 9 திட்டங்களில் 7 திட்டங்களில் இதற்கு முன்னர், மாநிலங்கள் தங்கள் ஒருமித்த கருத்துக்களைத் தவிர்த்துவிட்டன. பின்னர், இந்த மாநிலங்களின் முதல்வர்கள் ஒன்றிணைந்த பிறகு இந்த விவகாரம் தீர்க்கப்பட்டது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.