புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு, மனித வள மேம்பாட்டு மையம் மூலம் புத்தாக்க பயிற்சி அளிக்க மத்திய அரசு நிதி அளிக்கிறது. அதன்படி, கடந்த 2008 முதல் 2016ஆம் ஆண்டு வரை புத்தாக்க பயிற்சி அளிக்க ரூபாய் 5 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி நடத்திய கணக்குகளில் ரூபாய் 2.25 கோடிக்கு போலி பில் தயாரித்து வைத்திருப்பது, பல்கலைக்கழகத்தில் நடக்கும் ஆண்டு தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக துணை வேந்தர், நிதி நிர்வாக அதிகாரி மற்றும் மனிதவள மேம்பாட்டு இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சி.பி.ஐ-புகார் அளித்தனர். ஆனால், சி.பி.ஐ வழக்கு பதிவு செய்யவில்லை.
அதனைத் தொடர்ந்து, புகார் குறித்து வழக்கு பதிந்து விசாரிக்க சி.பி.ஐ-க்கு உத்தரவிட வேண்டி, ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், பல்கலைக்கழகத்தில் புத்தாக்க பயிற்சி நடத்திய கணக்குகளில் போலி பில் தயாரித்து வைத்ததற்கான முகாந்திரம் இருப்பதாக சி.பி.ஐ அறிக்கை அளித்துள்ளதால் இந்த புகார் மீது சி.பி.ஐ வழக்கு பதிந்து விசாரிக்க உத்தரவிட்டார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“