திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 38 பேர் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர் என அக்கட்சியின் மூத்தத் தலைவர் மிதுன் சக்ரபோர்த்தி புதன்கிழமை (ஜூலை 27) தெரிவித்துள்ளர்.
கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலர் தொடர்பில் உள்ளனர் என்றார். மேலும் மிதுன் சக்ரபோர்த்தி, “ஒரு பிரேக்கிங் செய்தி சொல்லவா? திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 38 பேர் தொர்பில் உள்ளனர். அவர்களில் 20 பேர் என்னிடம் நேரடியாக பேசுகின்றனர்” என்றார்.
தொடர்ந்து 18 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. விரைவில் மேற்கு வங்கத்திலும் பாஜக கொடி பறக்கும் என்றார். இந்த விவகாரம் குறித்து பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சந்தானு சென், “அவர் ஒரு நல்ல நடிகர். பலருக்கும் அவரை தெரியும். அதனால் இந்த விவகாரத்தில் மக்களை முட்டாள் ஆக்க நினைக்கிறார்.
அவர் சொல்வது போல் எந்த எம்எல்ஏவும் அவருடன் தொடர்பில் இல்லை. அப்பட்டமான பொய் சொல்கிறார் அவர்.” என்றார். தொடர்ந்து, ‘அவர் (மிதுன் சக்ரபோர்த்தி) பல முறை உடல் நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதனால் அவருக்கு ஏதேனும் உளவியல் பிரச்சினை ஏற்பட்டதா எனத் தெரியவில்லை. இருப்பினும், அவர் நல்ல மருத்துவரை அணுகுவது நல்லது’ என்றார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது.
294 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட இந்த மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 216 எம்எல்ஏக்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான பாஜக வசம் 75 எம்எல்ஏக்கள் உள்ளனர். முன்னாள் ஆளுங்கட்சியான இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸிடம் சொல்லிக்கொள்ளும்படி எம்எல்ஏக்கள் இல்லை.
மேற்கு வங்க மக்களவை தேர்தலில் பாஜக 38.13 சதவீதம் வாக்குகளை பெற்றது. அதன் பின்னர் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பெரும் வாக்கு வங்கியாக உருவெடுத்தது.
பாஜகவின் சுவேந்து அதிகாரி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை தேர்தலில் தோற்கடித்தார். அண்மையில் சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே அணியாகவும், ஷிண்டே அணியாகவும் இரண்டாக பிரிந்தது.
தொடர்ந்து முதல் அமைச்சர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். பின்னர் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்களுக்கு பாஜக ஆதரவு அளித்து மகாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றியது நினைவு கூரத்தக்கது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil