பாலியல் புகாருக்குள்ளான நிலையில் இன்று நாடு திரும்பிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எம்.ஜே. அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளியுறவுத் துறை இணை அமைச்சராகப் பணியாற்றி வரும் எம்.ஜே.அக்பர் பல பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். மீ டூ விவகாரம், இந்தியாவில் பூதாகரமாகி வரும் நிலையில், எம்.ஜே.அக்பருடன் பணியாற்றிய 10க்கும் அதிகமான பெண் பத்திரிகையாளர்கள் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அரசு முறைப் பயணமாக நைஜீரியா சென்றிருந்த எம்.ஜே.அக்பர் தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு இன்று காலை டெல்லி திரும்பினார். அப்போது செய்தியாளர்களிடம் அவரிடம் இவ்விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அமைச்சர், "இதுகுறித்து விரிவான அறிக்கை வெளியிடப்படும்" என்றார்.
இந்நிலையில், எம்.ஜே.அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது.