இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான டி.சி.ஜி.ஐ மும்பையைச் சேர்ந்த மருந்து நிறுவனமான சிப்லாவுக்கு நாட்டில் அவசரகால பயன்பாட்டிற்காக மாடர்னா கோவிட்-19 தடுப்பூசியை இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு சர்வதேச அளவில் உருவாக்கப்பட்ட முதல் தடுப்பூசியான மாடர்னாவுக்கு இந்தியாவில் புதிய மருந்துக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய மருந்து அனுமதி கட்டுப்பாடுகளுடன் அவசரகால பயன்பாட்டிற்கானது என்று நாட்டின் கோவிட் பணிக்குழுவின் தலைவரான டாக்டர் வி.கே.பால் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவில் ஏற்கெனவே, கோவிஷீல்ட், கோவாக்சின் மற்றும் ஸ்பூட்னிக் V ஆகிய கொரோனா வைரஸ் தடுப்புசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த 3 தடுப்பூசிகளுக்குப் பிறகு, மாடர்னா கோவிட்-19 தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் கிடைக்கும் நான்காவது கோவிட் -19 தடுப்பூசியாக மாடர்னாவின் தடுப்பூசி சேர்ந்துள்ளது.
இந்த நான்கு தடுப்பூசிகளும் (கோவாக்சின், கோவிஷீல்ட், ஸ்பூட்னிக் வி மற்றும் மாடர்னா) பாலூட்டும் தாய்மார்களுக்கு பாதுகாப்பானவை என்றும் தடுப்பூசிக்கும் கருத்தரிக்காமை பிரச்னைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"