லோக்சபா தேர்தலில், பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியின் மூலம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக, கட்சியின் தொண்டர்கள் முதல் தலைமை வரை திட்டமிட்டு கடினமாக உழைத்ததன் பலனை, பாரதிய ஜனதா கட்சி தற்போது இந்த மாபெரும் வெற்றியை அறுவடை செய்துள்ளது.
சட்டசபை தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விகளை தலையில் ஏற்றிக்கொள்ளாமல், தனது கண்ணோட்டத்தையும் மாற்றிக்கொள்ளாது திட்டமிட்டு பணியாற்றியதன் விளைவாகவே, மாபெரும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாது பாரதிய ஜனதாவின் பங்களிப்பு இல்லாத மாநிலங்களிலும் தற்போது கணக்கு துவங்கப்பட்டுள்ளது.
இமாலய வெற்றிக்கு அடிகோலிய காரணிகள்
புலவாமா மற்றும் பாலாகோட் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகும், இந்தியாவை பாதுகாப்பான நாடாக திகழ வைக்க, பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என்று முதலில் இருந்தே மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி, தனது தேர்தல் வாக்குறுதிகளிலேயே, நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமை என்பதையே பிரதானமாக கொண்டிருந்தது.
கடந்தாண்டு நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில் பா.ஜ. கட்சிக்கு தோல்வி ஏற்பட்ட நிலையிலும், அதனால் துவண்டுவிடாது, அதையே ஒரு படிப்பினையாக கொண்டு கட்சியின் வெற்றிக்காக அயராது பாடுபட்டது. பாரதிய ஜனதா கட்சியின் ஆதிக்கம் இல்லாத மாநிலங்களில் 120 இடங்களை தேர்ந்தெடுத்து அதன் வெற்றிக்கு தலைமை முதல் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் வரை கடுமையாக உழைத்தனர். வடகிழக்கு மாநிலங்களில் கட்சி பெற்ற வெற்றியை தொடர்ந்து, மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட நாட்டின் கிழக்குப்பகுதி மாநிலங்களிலும் இந்த தேர்தலில் வெற்றிக்கணக்கை துவக்கியுள்ளது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் கட்சி வலுவாக இருந்தநிலையிலும், நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் வடுவை மறக்காமல், அங்கும் கடுமையாக தேர்தல் பணியாற்றி வெற்றியை ருசித்துள்ளது. 2014 லோக்சபா தேர்தலில், உத்தரபிரதேச மாநிலத்தில் 71 இடங்களில் பா.ஜ. கட்சி வெற்றி பெற்றிருந்தது. இந்த தேர்தலில், அங்கு சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இதன்மூலம், பா.ஜ. கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், தீவிரமாக அதேசமயத்தில் துரிதமாக பணியாற்றியதன் பலனாக அங்கும் வெற்றிக்கனியை பறித்தது பாரதிய ஜனதா.
பாரதிய ஜனதா கட்சி, இந்த தேர்தலில் ஒரு மாபெரும் வெற்றியை தன்வசமாக்கியதற்கு முக்கிய காரணம் யாதெனில், அது ஒரு திட்டமிட்டு கட்டுகோப்பாக செயல்பட்டதே ஆகும். கட்சியின் தலைமை, அதன் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு எவ்வித சமரசத்திற்கும் உட்படாமல் இருந்ததும் முக்கிய காரணம் ஆகும். கட்சித்தலைமை வகுத்த திட்டத்தின்படி, மத்திய அமைச்சர்களும், கட்சியின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகளில் திறம்பட ஈடுபட்டனர். மோடி அரசின் நலத்திட்டங்கள் குறித்து கட்சி தலைவர் அமித் ஷா வகுத்து தந்த திட்டங்களின் படி, கட்சியின் எம்,எல்.ஏ. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சரியாக செயல்பட்டு மக்களிடம் கொண்டு சேர்த்தனர். மோடி அரசின் நலத்திட்டங்கள், அனைத்துதரப்பு மக்களையும் சென்றடையும் பொருட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள் கட்சியின் சார்பில் நடத்தப்பட்டன.
இத்தகைய காரணங்களினாலேயே, இந்த லோக்சபா தேர்தலில், இமாலய வெற்றியை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியால் அறுவடை செய்யமுடிந்தது என்றால் அது மறுப்பதற்கில்லை.