பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு ரஷ்யாவின் கஸான் நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் ரஷ்யாவிற்கு சென்றுள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Modi-Xi bilateral today, first in 5 years, after China confirms LAC agreement
இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி இடையே தனிப்பட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2019-ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம், மகாபலிபுரத்தில் நடபெற்ற நிகழ்வு ஒன்றில், இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். அதன் பின்னர், கடந்த 2020-ஆம் ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவியது. அதன்பின்னர், இந்தோனேஷியாவின் பாலி மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பெர்க் ஆகிய இடங்களில் அரசு முறை கூட்டங்களில் இருநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஆனால், தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவருக்கும் இடையே சந்திப்பு நடைபெறவில்லை.
பிரிக்ஸ் மாநாடு நடைபெறும் இந்த நேரத்தில் சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். மேலும், நேற்றைய தினம் இரு நாடுகளின் எல்லை பகுதியில் ரோந்து பணி தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தம், கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்த பிரச்சனைகளை சீரமைப்பதற்கு உதவும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், எல்லை ரோந்து பணி ஒப்பந்தம் குறித்து குறிப்பிடாமல், இரு நாடுகளுக்கும் இடையே இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருவதாக சீனா தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில், எல்லை பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தை இந்தியா மற்றும் சீனா இடையே தொடர்ந்து நடைபெற்றதாகவும், அது குறித்த சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“