விராட் கோலியின் சவாலை ஏற்றது தான் மோடி செய்த தவறா? மோடியை விடாமல் துரத்தும் ராகுல்!

பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சவாலை ஏற்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது தற்போதைய சூழ்நிலையில் எதிர் பார்க்காத பல எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடங்கி, பெட்ரோல் விலை அதிகரிப்பு என பல்வேறு பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில் நாட்டின் பிரதமர் மோடி எந்தவித கருத்தும் கூறவில்லை. உன்னாவ் மற்றும் கத்துவா சம்பவத்தில் மவுனம் காத்தது போலவே இந்த விஷயத்திலும் மோடி மவுனம் கலைக்காமல் உள்ளார்.

ஆனால், அதே சமயத்தில் விராட் கோலி கொடுத்த #FitnessChallenge என்ற சவாலிற்கும் மட்டும் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதில் தெரிவித்துள்ளார். இதுதான் மோடி செய்த மிகப்பெரிய தவறாக பார்க்கப்படுகிறது. மக்களின் பிரச்சனைகளுக்கு பதில் சொல்லாத மோடி பிரபலத்தின் சவாலிற்கு பதில் சொல்லி இருப்பது பெரும்பாலோனருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடிக்கு மற்றொரு சவாலுக்கு அழைத்துள்ளார். ”அன்புள்ள பிரதமரே, விராட் கோலியின் உடற்தகுதி சவாலை நீங்கள் ஏற்றுக்கொண்டதைப் பார்த்தேன். என்னிடமும் ஒரு சவால் இருக்கிறது. இதையும் ஏற்றுக்கொள்ளுங்கள். பெட்ரோல், டீசல் விலையைக் குறையுங்கள். இல்லாவிட்டால், காங்கிரஸ் கட்சி நாடுமுழுவதும் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தும். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும். உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.”என்று தெரிவித்துள்ளார்.

அதோடு நிற்காமல், லாலுவின் மகனும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் ட்விட்டரில் மோடியை கடுமையாக வசைப்பாடியுள்ளார். “ விராட் கோலியிடம் இருந்து வந்த சவாலை நீங்கள் ஏற்றுக்கொண்டதை நாங்கள் எதிர்க்கவில்லை. நாங்கள் விடுக்கும் சவாலையும் ஏற்றுக்கொள்ளுங்கள் எனக் கேட்கிறோம். வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்குக வேலை கொடுங்கள், விவசாயிகள் கடன் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும், தலித்களுக்கும், சிறுபான்மையினருக்கும் எதிராக வன்முறையை ஒடுக்க வேண்டும், இந்தச் சவால்களை எல்லாம் ஏற்றுக்கொள்கிறீர்களா? மோடி சார் என்று தெரிவித்துள்ளார்.

இவர்களை தவிர, பொதுமக்கள், நெட்டிசன்கள் பலரும் மோடியின் உடற்பயிற்சி சவாலை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

×Close
×Close