நெல், பருத்தி, மற்றும் பருப்பு வகைகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையினை அதிகரிப்பது தொடர்பாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது கூறப்பட்டது.
அதன்படி இன்று பிரதமர் நரேந்திர மோடி நெல், பருத்தி, மற்றும் பருப்பு வகைகளுக்கான குறைந்தபட ஆதரவு விலைகளை அதிகரித்து அறிவித்திருக்கிறார். தேசிய கருவூலத்தில் இருந்து இதற்கென ரூ. 12,000 கோடி செலவு செய்யப்படும்.
இந்த திட்டம், வரும் கரீப் பருவ காலத்தில் இருந்து அமலுக்கு வருகிறது. இவ்வருடம் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட இரண்டு மிக முக்கியமான திட்டங்களில் இதுவும் ஒன்று.
இத்திட்டத்தின் படி ஒரு குவிண்டால் நெல்லின் ஆதரவு விலையை ரூ. 1,550ல் இருந்து ரூ. 1,750க்கு உயர்த்தப்பட்டுள்ளது. பருத்தியின் (குட்டை ரகம்) ஆதரவு விலையினை ரூ. 4,020ல் இருந்து ரூ. 5,510 வரை உயர்த்தியுள்ளது. நெட்டை ரக பருத்தியின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ. 4,320ல் இருந்து ரூ. 5,450 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டுள்ளது.
பருப்பு வகைகளில் துவரைக்கு, குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 5450ல் இருந்து ரூ. 5,675 வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. பாசிப்பருப்பின் ஆதரவு விலை ரூ. 5,575ல் இருந்து ரூ. 6,975 வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. உளுந்தின் ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு 5,400ல் இருந்து ரூ. 5,600 வரை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக தலைவர் அமித் ஷா "இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை என்றும் மோடி எப்போதும் விவசாயிகளுக்கான நல்ல முடிவுகளையே எடுப்பார் என்றும்” கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இது குறித்து கூறும் போது “இந்த நாட்டில் விவசாயிகள் தங்களுக்கு தேவையானதை ஒரு போதும் அடைந்ததே இல்லை. அதனை அறிந்தே மோடி இந்த முடிவினை அவர்களுக்காக எடுத்துள்ளார். இதன் மூலம் அவர்கள் விலைவிக்கும் பொருட்களுக்கு 1.5% கூடுதல் வருமானம் கிடைக்கும்” என்று கூறினார்.
உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இது குறித்து தெரிவித்தும் போது “இந்த திட்டத்தினால் விவசாயிகள் நல்ல வாழ்வினை வாழ முடியும்” என்று குறிப்பிட்டார்.