நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான நேற்று, 16-வது மக்களவையில் தனது இறுதி உரையை ஆற்றினார் பிரதமர் மோடி. அடுத்த பொதுத் தேர்தலில் பெரும்பான்மையான ஆட்சி அமையும் எனக் குறிப்பிட்ட அவர், ’இந்தியாவின் மீது பட்டிருக்கும் உலகளாவிய பார்வை என்னாலோ, அல்லது வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜாலோ அல்ல. இதற்கு முழுக் காரணமும் ’பெரும்பான்மை அரசாங்கம்’ தான் என்றார்.
2014 ஜூன் மாதம் தொடங்கி தற்போது வரை மொத்தம் 17 நகர்வுகளில் என்னவெல்லாம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை விளக்கிய அவர், ராகுல் காந்தியை பெயர் குறிப்பிடாமல் விமர்சிக்கவும் மறக்கவில்லை.
’முதன் முறையாக ஆரத் தழுவுவதற்கும், மேல் வந்து விழுவதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை இங்கு தான் உணர்ந்தேன்’ என்று கூறிய அவர், ராகுல் காந்தி கடந்த ஜூலை மாதம் அவரை கட்டியணைத்ததை மறைமுகமாக நினைவுக் கூர்ந்தார். அதோடு ராகுலின் ‘கண் சிமிட்டலையும்’ விட்டு வைக்கவில்லை.
’மக்களவையில் தம்மை பேச அனுமதித்தால் நில நடுக்கம் உண்டாகும் என சிலர் எச்சரித்தனர். மத்திய அரசின் 5 ஆண்டு கால ஆட்சி முடிவடையும் தருவாயில் உள்ளது. இருப்பினும் அந்த நில நடுக்கத்தை நாங்கள் இன்னும் காணவே இல்லை’ என்றார். என்னைப் பேச அனுமதித்தால் இங்கு நில நடுக்கமே வரும் என 2016-ல் ராகுல் காந்தி கூறியதைத் தான் அவ்வாறு விமர்சித்தார்.
16-வது மக்களவையில் தங்கள் அரசாங்கத்தின் சாதனைகளை பட்டியலிட்ட மோடி, உலக பொருளாதாரத்தில் இந்தியாவுக்கு ஆறாவது இடம் கிடைத்திருப்பதை மகிழ்ச்சியுடன் சுட்டிக் காட்டினார். அதோடு 5 ட்ரில்லியன் டாலர் மதிப்புடைய பொருளாதார சக்தி என்பதை நோக்கி இந்தியா முன்னேறிக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய மோடி, ‘16-வது மக்கலவையில் நிறைய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. கருப்புப் பண பிரச்னை, ஊழல் ஆகிய பெரும் பிரச்னைகளுக்கு முடிவுக் கட்ட கொண்டு வந்த மசோதாக்களும் இதில் அடங்கும். இதற்காக வரவிருக்கும் தலைமுறைகள் நன்றியோடு இருப்பார்கள்’ எனத் தெரிவித்த அவர், 17 நகர்வில் 219 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு, அதில் 203 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, 100 சதவீத பணிகள் நடைப்பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டார்.