இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 5 நாள் அரசு பயணத்தின் அடுத்தகட்டமாக ஸ்வீடனில் இருந்து லண்டன் புறப்பட்டார். ஸ்வீடனில் நிகழ்ச்சிகளை முடித்த பின்னர் லண்டன் புறப்பட முற்பட்டார்.
இந்தியா சார்பாக அரசு முறைப் பயணமாக கடந்த 16ம் தேதி ஸ்வீடனுக்கு புறப்பட்டார் மோடி. 5 நாள் பயணமாக அமைந்துள்ள இந்தப் பயணத்தில், முதலில் ஸ்வீடனுக்கு சென்று அந்நாட்டுப் பிரதமரிடம் பல்வேறு துறைகள் குறித்துப் பேச திட்டமிட்டார். பின்னர் ஸ்வீடன் வாழ் இந்தியர்களைச் சந்தித்து பேசத் திட்டமிட்டார். இந்நிகழ்வுகள் முடிந்ததும், லண்டனுக்கு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பயணத் திட்டத்தில் முதற்கட்டமாக ஸ்வீடன் பயணத்தை வெற்றிகரமாக முடித்தார். ஸ்வீடன் சென்ற மோடியை அந்நாட்டுப் பிரதமர் ஸ்டீபன் லோப்வென், விமான நிலையத்துக்குச் சென்று சிறப்பாக வரவேற்றார். பின்னர் நேற்று முழுவதும் ஸ்வீடனில், இரு நாட்டு பிரதமர்களும் பல துறைகள் குறித்துப் பேசினர். அதன் பிறகு ஸ்வீடன் வாழ் இந்திய மக்களைச் சந்தித்து அவர் பேசினார். குறிப்பாக ஸ்வீடனில் நடந்த உச்ச மாநாட்டில் இந்தியா சார்பில் அவர் பங்கேற்றார்.
ஸ்வீடனில் இரு நாட்டின் பிரதமர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது மோடி, “சுவீடன் பிரதமருடன் இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினேன். இந்தப் பேச்சு வார்த்தையின்போது, இந்தியாவின் வளர்ச்சிப்பயணத்தில் சுவீடன் எப்படியெல்லாம் உதவ முடியும் என்பது குறித்து விவாதித்தோம். இரு தரப்பு புதிய கண்டுபிடிப்புகளில் கூட்டாளிதுவத்துக்கும், கூட்டுச் செயல்திட்டம் வகுக்கவும் ஒப்புக்கொண்டு உள்ளோம். ராணுவம், இணையதள பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பைப் பலப்படுத்துவது என்று முடிவு செய்து உள்ளோம். பசுமை தொழில் நுட்பம், ஸ்மார்ட் நகரங்கள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பைத் தீவிரப்படுத்த நாங்கள் முடிவு செய்து உள்ளோம்” என்று கூறினார்.
பின்னர் சுவீடன் பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து பிரிட்டன் புறப்பட்டார். பிரிட்டனின் ஹீத்ரோ விமானநிலையம் வந்து சேர்ந்த பிரதமர் மோடியை பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலாளர் போரிஸ் ஜான்சன் நேரில் வரவேற்றார். இன்று காலை இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயை, பிரதமர் மோடி சந்திக்கிறார். பிரிவினைவாதம், எல்லைத் தாண்டிய பயங்கரவாதம், விசா மற்றும் குடியேற்றம் தொடர்பாக அவர்கள் விவாதிக்கின்றனர். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே 10-க்கும் மேற்பட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பேச்சுவார்த்தைக்கு பின், லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்துக்குச் சென்று அங்கு நடைபெறும் அறிவியல் கண்காட்சியை மோடி பார்வையிடுகிறார். லண்டனில் வசிக்கும் இந்திய சமூகத்தினரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார்.