மக்களவையில் நேற்று (புதன்கிழமை) குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மோடி அதிர்ச்சியடைந்துள்ளார். அதானி குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு ஒரு பதிலும் அளிக்கவில்லை. பிரதமர் அதானியை “பாதுகாக்க” முயற்சிக்கிறார் என்று ராகுல் குற்றஞ்சாட்டினார்.
அதானி குழுமத்திற்கு எதிராக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் பங்குச்சந்தை மோசடி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை தெரிவித்து ஆய்வு அறிக்கை வெளியிட்டது. இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் கூட்டுக் குழு அமைத்து விவாதிக்க வேண்டும் எனவும் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு என நேரடியாக கேள்வி எழுப்பினார். பா.ஜ.க ஆட்சிக்கு வந்த 8 வருடங்களில் அதானி உலகின் 2-வது பெரிய பணக்காரர் என்ற இடத்திற்கு சென்றார் எனப் பல்வேறு கேள்விகளை முன்வைத்தும் அதானியுடன், மோடி இருக்கும் புகைப்படத்தையும் காண்பித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார். அதானி குறித்தான குற்றச்சாட்டுக்கு பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரதமர் உரையில் ஓர் இடத்தில் கூட அதானி என்ற வார்த்தை இடம் பெறவில்லை. எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.
பிரதமர் உரைக்குப் பின் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், “பிரதமரின் பதில் திருப்தி அளிக்கவில்லை. பிரதமர் அதிர்ச்சியில் உள்ளார். அதானி குறித்த கேள்விக்கு ஒரு பதிலும் அளிக்கவில்லை. நான் எந்த சிக்கலான கேள்விகளையும் கேட்கவில்லை. கௌதம் அதானியுடன் எத்தனை முறை பயணம் செய்துள்ளீர்கள்? அவரை எத்தனை முறை சந்தித்துள்ளீர்கள்? என்று மட்டுமே நான் கேட்டேன். இவை எளிமையான கேள்விகள் ஆனால் பதில் இல்லை.
பிரதமர் அதானியின் நண்பர் இல்லை என்றால் விசாரணை நடத்த கூறியிருக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும். இது பாதுகாப்புத் துறை தொடர்பான பிரச்சினை. இதில் ஷெல் கம்பெனிகள் உள்ளன. பினாமி பணம் உள்ளது. ஆனால் பிரதமர் எதுவும் சொல்லவில்லை. பிரதமர் அதானியை பாதுகாக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
இது மிகப் பெரிய மோசடி. பிரதமர் நிச்சயமாக அதானியை பாதுகாக்க முயற்சிக்கிறார், இதை நான் புரிந்துகொள்கிறேன். இதற்கு காரணங்கள் உள்ளன” என்றார்.
நாட்டு மக்கள் தன் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்று பிரதமர் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த ராகுல், “அது நல்லது. நான் தேசிய பாதுகாப்பு பற்றி பேசுகிறேன். இந்தியாவின் உள்கட்டமைப்பு தொடர்பான பிரச்சினை. விசாரணை நடத்துவோம், அதைக் கண்டுபிடிப்போம், என்ன நடந்தது என்று பார்ப்போம் என்று பிரதமர் கூறியிருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி சொல்லவில்லை. இது ஒரு பெரிய மோசடி. அவர் அதானியை பாதுகாக்க முயன்றார். ஏன் என்று எனக்கு புரிகிறது, காரணம் எனக்குத் தெரியும்” என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/