Modi tweeted in Tamil on Mamallapuram summit and reveal thanks:மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாடு சிறப்புற நடத்துவதில் உறுதுணையாக இருந்த தமிழக அரசு, அனைத்து அரசியல் கட்சிகள், சமூக கலாசார அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி தமிழில் டுவிட் செய்துள்ளார். அதில், ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி உலகத்திற்கும் பலன் அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய - சீனா இடையே முறைசாரா உச்சி மாநாடு சென்னை அருகே மாமல்லபுரதில் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த முறைசாரா உச்சி மாநாட்டுக்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் வெள்ளிக்கிழமை சென்னை விமான நிலையத்துக்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு சென்னை விமான நிலையத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மின்னொளியில் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர்கால நினைவுச் சின்னங்களை சுற்றிப் பார்த்தனர். இதையடுத்து, மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சியை பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கண்டுகளித்தனர்.
இதையடுத்து, இரவு அவருக்கு சிறப்பான தென்னிந்திய உணவு வகைகள் விருந்து அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இன்று பிரதமர் மோடிக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே மாமல்லபுரம் தாஜ் ஃபிஷர்மேன் கோவ்வில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை முடிந்தபின் ஜி ஜின்பிங் விமானம் மூலம் நேபாளம் புறப்பாட்டார்.
ஜி ஜின்பிங் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு மற்றும் விருந்தோம்பலால் மிகவும் சந்தோஷமடைந்தேன் என்று கூறியதாக என்று வெளியுறவு செயலர் விஜய் கோகலே தெரிவித்தார்.
இதனால், மாமல்லபுரம் முறைசாரா உச்சி மாநாடு மிகவும் சிறப்பாக வெற்றிகரமாக நிறைவைந்தது. இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, இந்த முறைசாரா உச்சி மாநாடு சிறப்புற நடத்துவதில் உறுதுணையாக இருந்த தமிழக அரசு, அனைத்து அரசியல் கட்சிகள், சமூக கலாசார அமைப்புகளுக்கும், சீன பிரதமர் ஜி ஜின்பிங்கிற்கும் நன்றி தெரிவித்து பிரதமர் மோடி தமிழில் டுவிட் செய்துள்ளார்.
நமது இரண்டாவது முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்தமைக்காக அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். #ChennaiConnect இந்தியா-சீன உறவுகளுக்கு மேலும் உந்து சக்தியை அளிக்கும். இது நமது நாட்டு மக்களுக்கும் உலகத்திற்கும் பலன் அளிக்கும். pic.twitter.com/UmfVyP3iuQ
— Narendra Modi (@narendramodi) October 12, 2019
அதில், “நமது இரண்டாவது முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்தமைக்காக அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை தொடர்பில் இந்தியா-சீன உறவுகளுக்கு மேலும் உந்து சக்தியை அளிக்கும். இது நமது நாட்டு மக்களுக்கும் உலகத்திற்கும் பலன் அளிக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நான் சிறப்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல், அவர்களது இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன. ஆற்றல் மிக்க இந்த மாநிலத்தின் மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும்.
— Narendra Modi (@narendramodi) October 12, 2019
அதற்கு முந்தைய டுவிட்டில் பிரதமர் மோடி, “மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டை சிறப்புற நடத்துவதில் உறுதுணையாக இருந்த தமிழக அரசிற்கும் நன்றி.” தெரிவித்துள்ளார். மேலும், “தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நான் சிறப்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல், அவர்களது இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன. ஆற்றல் மிக்க இந்த மாநிலத்தின் மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி மற்றொரு டுவிட்டில், “அழகிய மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய- சீன முறை சாரா உச்சி மாநாட்டிற்கு உறுதுணை புரிந்து உபசரிப்பு நல்கிய அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக கலாச்சார அமைப்புகளுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.