Modi warns Pakistan : மக்களவை தேர்தலை முன்னிட்டு, மத்தியப் பிரதேசத்தில் இன்று பாஜகவினர் நடத்த இருந்த நிகழ்ச்சிகளுக்கு செல்வதாக திட்டம் இருந்தது பிரதமர் மோடிக்கு. நேற்று நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
இன்று காலை பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார். அதில் கலந்து கொண்ட அவர், அடுத்து செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த ஆலோசனையின் ஈடுபட்டார்.
இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். ராணுவத் தலைமைத் தளபதிகள் இதில் பங்கேற்றனர்.
பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட அதில் அகமது தார் யார் ?
மௌன அஞ்சலி செலுத்திய மோடி
இதனை தொடர்ந்து, டெல்லியில் நடைபெற்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் துவக்க விழாவில் நரேந்திர மோடி பங்கேற்றார். அதில் கலந்து கொண்டவர் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார். பின்னர் பாகிஸ்தானுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுவதாக அமைந்தது அவரின் உரை.
Modi warns Pakistan - பாகிஸ்தானுக்கும் தீவிரவாதிகளுக்கும் கடும் எச்சரிக்கை
புல்வாமா தாக்குதலுக்கு கண்டனங்களை பதிவிட்ட நாடுகளுக்கு நன்றி கூறினார். பின்பு, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மிகப் பெரிய தவறை செய்துவிட்டீர்கள். இதற்கான தக்க விலையை அவர்கள் கொடுத்தே தீர வேண்டும். இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
நமது ராணுவத்தின் மீது முழுமையான நம்பிக்கை நம் மக்களுக்கு உள்ளது. இந்தியா நிச்சயம் தக்க பதிலடியை தரும்" என்று கூறிய அவர் நேரடியாக பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "ஜம்மு காஷ்மீரின் முக்கிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலையில் ராணுவ கான்வாய் செல்லும் போது, அங்கு மக்கள் நடமாட்டத்திற்கு இனி அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தானைச் சேர்ந்த உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மூலம் நிதியுதவி பெற்று சில பிரிவுகள் ஜம்மு காஷ்மீரில் இயங்குகின்றன. அவர்களுக்கு எதிரான தீர்க்கமான போரில் நாங்கள் வெற்றிப் பெறுவோம்" என்றார்.