Modi's new government : நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்திருக்கிறார் நரேந்திர மோடி.
இவரின் தலைமையில் இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள அமைச்சரவையில் தமிழகத்தின் பிரதிநிதிகளாக நிர்மலா சீத்தாராமன் மற்றும் ஜெய்சங்கர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
நிர்மலா சீத்தாராமன் ( வயது 58)
மோடி தலைமையிலான முதல் அமைச்சரவையின் ( 2014-2019) முதல் 3 ஆண்டுகளில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சராக (தனிப்பொறுப்பு) பதவிவகித்தார். பின்னர் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக, பிரதமர் மோடியால் நியமிக்கப்பட்டார்.
2003-2005ம் காலகட்டத்தில் தேசிய பெண்கள் கமிஷனில் உறுப்பினராக பணியாற்றியிருந்தார்.
2008ல் நடந்த பாரதிய ஜனதா கட்சி செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட முதல் பெண் அழைப்பாளர் என்ற பெருமை இவருக்கு உண்டு.இதற்குப்பின், கட்சியில் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான தீர்மானங்கள் உருவாக்கும் நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றினார்.
2010ம் ஆண்டு கட்சியின் தேசிய செய்திதொடர்பாளராக நியமிக்கப்பட்டார்.
2012ம் ஆண்டுமுதல், மோடியின் நேரடி கண்காணிப்பில் செயல்பட்டு வந்த நிர்மலா சீத்தாராமன், கட்சி, தேர்தலின் போது மேற்கொள்ளும் ஊடக வழியான பிரச்சாரங்களில் இவரின் பங்கு அளப்பரியதாக இருந்தது.
ஜெய்சங்கர் உச்சம் தொட்ட கதை : அமெரிக்க நிகழ்வால் மோடி மனதில் இடம் பிடித்தார்
சுப்பிரமணியம் ஜெய்சங்கர் (வயது 64)
பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் தமிழகத்தை சேர்ந்த இரண்டாவது மத்திய அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர். இவர் முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் ஆவார்.
சுப்பிரமணியம் ஜெய்சங்கர், இந்தியாவின் பாதுகாப்புத்துறை விவகாரங்களில் மூத்த ஆலோசகராக செயல்பட்ட கே.சுப்பிரமணியத்தின் மகன் ஆவார். கே,சுப்பிரமணியம் பிறந்தது திருச்சிராப்பள்ளி. ஜெய்சங்கர், டில்லியில் பிறந்திருந்தாலும், பூர்வீகத்தின் அடிப்படையில் அவர் ஒரு தமிழர் ஆவார்.
இவர் 1977ம் ஆண்டு IFS அதிகாரி ஆவார். 2009 -13 வரை சீனாவிற்கான இந்திய தூதராகவும், 2014-15ம் ஆண்டில் அமெரிக்காவிற்கான இந்திய தூதராகவும் பணியாற்றினார். ஐரோப்பிய நாடுகளின் தூதராகவும் இவர் பணியாற்றியுள்ளார். இந்திய - அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.
மிக அதிக காலம், வெளியுறவுத்துறை செயலர் பதவி வகித்தது மற்றும் பிரதமர் மோடியின் வெளியுறவு கொள்கைக்கு புத்துயிர் அளித்தது உள்ளிட்ட காரணங்களால் ஜெய்சங்கர் சுப்பிரமணியத்திற்கு, பிரதமர் மோடி மத்திய அமைச்சரவை பதவி வழங்கி கவுரவித்துள்ளார்.
இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை மையமாக கொண்டு சீனா நிகழ்த்தி வரும் சடுகுடு ஆட்டத்தின் ஒருபகுதியான டோக்லாம் விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவந்ததில் ஜெய்சங்கருக்கு முக்கிய பங்குண்டு. இவரது பதவிக்காலத்தில், இந்தியா - சீனா இடையே வர்த்தகம், எல்லை விவகாரம் மற்றும் கலாச்சார உறவுகள் மேம்பட முக்கிய பங்காற்றினார்.
இவரின் நிர்வாகத்திறன் மற்றும் சேவையை பாராட்டி, மத்திய அரசு 2019ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.