தலைநகர் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்ற இரண்டாவது நபர் ஆவார்.
இந்த நிகழ்வில், ஜனாதிபதி திரௌபதி முர்மு 72 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய அமைச்சர்கள் குழுவில் 30 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 5 மாநில அமைச்சர்களுக்கு (சுயேச்சைப் பொறுப்பு) பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இன்று திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அமைச்சர்கள் வகிக்க உள்ள துறைகள் குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Modi’s NDA govt starts Term 3; 30 Cabinet posts in 72-member Union Council of Ministers
மக்களவையில் பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், தெலுங்கு தேசம் (டி.டி.ஏ.) மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஜே.டி.(யு.) உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சார்ந்துள்ளது. இதனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) அமைச்சர்கள் குழு, தொடர்ச்சி மற்றும் மாற்றம் ஆகிய இரண்டையும் கொண்டுள்ளது. பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், எஸ் ஜெய்சங்கர் மற்றும் பியூஷ் கோயல் உள்ளிட்ட 19 பேர் கேபினட் அமைச்சர்களாகத் தக்கவைக்கப்பட்டு உள்ளனர்.
இதேபோல், தர்மேந்திர பிரதான், பிரகலாத் ஜோஷி, சர்பானந்தா சோனோவால், வீரேந்திர குமார், கிரிராஜ் சிங், ஜோதிராதித்ய சிந்தியா, அஷ்வினி வைஷ்னா, கஜேந்திர சிங் ஷெகாவத், கிரண் ரிஜிஜு, ஹர்தீப் சிங் பூரி, மன்சுக் மாண்டவியா, பூபேந்தர் யாதவ் மற்றும் ஜி கிஷன் ரெட்டி ஆகியோர் அமைச்சரவையில் மீண்டும் இடம் பெற்றுள்ளனர்.
புதிய அமைச்சரவையில் பா.ஜ.க தேசிய தலைவர் பொறுப்பு இம்மாதம் முடிவடையும் ஜே.பி நட்டா, மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், குஜராத் பாஜக தலைவர் சிஆர் பாட்டீல் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
மோடியின் முந்தைய ஆட்சியில் அமைச்சராக இருந்த அன்னபூர்ணா தேவிக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. மோடியின் முதல் ஆட்சியில் அமைச்சராக இருந்த ஜுவல் ஓரம் கேபினட் அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.
பா.ஜ.க-வின் ராவ் இந்தர்ஜித் சிங், ஜிதேந்திர சிங், அர்ஜுன் ராம் மேக்வால் (மோடி 2.0 இல் மூவரும் ஒரே பதவியில் இருந்தனர்), சிவசேனாவின் புல்தானா எம்பி பிரதாப்ராவ் ஜாதவ் மற்றும் ஆர்எல்டியின் ஜெயந்த் சவுத்ரி ஆகியோர் ஐந்து மாநில அமைச்சர்களாக (சுயேச்சைப் பொறுப்பு) பொறுப்பேற்றுள்ளனர்.
அமைச்சரவையில் உள்ள கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களில் கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், ஜே.டி(எஸ்) தலைவருமான எச் டி குமாரசாமி, ஸ்ரீகாகுளத்தில் இருந்து மூன்று முறை எம்.பி.யாக இருந்த தெலுங்கு தேசம் கட்சியின் கே ராம் மோகன் நாயுடு, ஜே.டி(யு)-ன் ராஜீவ் ரஞ்சன் என்கிற லாலன் சிங், எல்.ஜே.பி-யின் சிராக் பாஸ்வான் மற்றும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் ஜிதன் ராம் மஞ்சி ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
மொத்தம் 38 புதிய முகங்கள் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். அமைச்சரவையில் 11 பேர், 2 இணை அமைச்சர்கள் (சுயேச்சை பொறுப்பு) மற்றும் 25 இணை அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த அமைச்சரவையின் பலம் 26 ஆக இருந்தது. மேலும், சுயேச்சைப் பொறுப்பில் மூன்று அமைச்சர்களும், 42 ராஜாங்க அமைச்சர்களும் இருந்தனர்.
புதிய அமைச்சர்கள் குழுவில் 7 பெண்கள் உள்ளனர், அவர்களில் இருவர் - நிர்மலா சீதாராமன் மற்றும் அன்னபூர்ணா தேவி - அமைச்சரவையில் உள்ளனர். மேலும், ஐந்து அமைச்சர்கள், அனுப்ரியா படேல், ஷோபா கரந்த்லாஜே, ரக்ஷா கட்சே, சாவித்ரி தாக்கூர் மற்றும் நிமுபென் ஜெயந்திபாய் பாம்பானியா ஆகியோர் ஆவர்.
நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் சுமார் 10,000 உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். இது ராஷ்டிரபதி பவனின் முன்புறத்தில் நடந்த மிகப்பெரிய நிகழ்வாகும். அண்டை நாடுகளைச் சேர்ந்த ஏழு நாடுகளின் தலைவர்கள் உட்பட (இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாலத் தீவு ஜனாதிபதி மொஹமட் முய்சு, சீஷெல்ஸ் துணைத் தலைவர் அஹ்மத் அஃபிஃப், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் ‘பிரசந்தா’, மற்றும், பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே) பலரும் கலந்து கொண்டனர்.
மேலும், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆளுநர்கள், முதல்வர்கள், இந்தியத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஷாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்கள், இந்திய தொழில்துறை தலைவர்கள், ஆன்மீக குருக்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
எதிர்க்கட்சி சார்பில் காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என் சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வரும், ஜேடி.யு தலைவருமான நிதிஷ் குமார், மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, என்.சி.பி-யின் தலைவர் அஜித் பவார், ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியில் இடம் கிடைக்காத முன்னாள் கேபினட் அமைச்சர்களில் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த அனுராக் தாக்கூர், மகாராஷ்டிராவைச் சேர்ந்த நாராயண் ரானே மற்றும் குஜராத்தைச் சேர்ந்த புருஷோத்தம் ரூபாலா ஆகியோர் அடங்குவர். அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட மற்றவர்களில் ஆர்.கே சிங், மகேந்திர நாத் பாண்டே, ஸ்மிருதி இரானி மற்றும் அர்ஜுன் முண்டா ஆகியோர் அடங்குவர் - இவர்கள் அனைவரும் தேர்தலில் தோல்வியடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.