ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்க (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத், “வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களிடையே வேறுபாடுகள் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
அதாவது, “ஒரு நபரின் பெயர், திறன் மற்றும் மரியாதை எதுவாக இருந்தாலும், அனைவரும் ஒன்றுதான், வேறுபாடுகள் இல்லை” என்று ஞாயிற்றுக்கிழமை சாந்த் ஷிரோமணி ரோஹிதாஸின் 647 வது பிறந்தநாளைக் குறிக்கும் நிகழ்வில் ஆர்எஸ்எஸ் தலைவர் கூறியதாக ANI செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், “சாஸ்திரங்களின் அடிப்படையில் சில பண்டிதர்கள் சொல்வது பொய். சாதி மேலாதிக்கத்தால் நாம் தவறாக வழிநடத்தப்படுகிறோம், இந்த மாயையை ஒதுக்கித் தள்ள வேண்டும்” என்று பகவத் கூறினார்.
பகவத் இதற்கு முன்னரும் சாதி பற்றிய உரையாடலில் ஈடுபட்டு எதிர்கட்சிகளின் எதிர்ப்பைப் பெற்றுள்ளார்.
அப்போது சாதி குறித்த ஆர்எஸ்எஸ் நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின.
அக்டோபர் 2022 இல், நாக்பூரில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய பகவத், “வர்ணா” மற்றும் “ஜாதி” (சாதி) முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும் என்று கூறினார்,
மேலும் “சாதி அமைப்புக்கு இப்போது எந்த சம்பந்தமும் இல்லை. பாகுபாட்டை ஏற்படுத்தும் அனைத்தும் வெளியேற வேண்டும் என்றார்.
அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, “ஆர்எஸ்எஸ் உயர் சாதியினரின் சங்கம் என்பதால் ஆரம்பத்திலிருந்தே அதை எதிர்ப்பதாக” கூறினார்.
முந்தைய மாதம், கர்நாடகாவில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மதத் தலைவர்கள் கூட்டத்தில் உரையாற்றிய பகவத், “மத மாற்றங்களைத் தடுக்க முயற்சிகள் செய்யப்பட வேண்டும், ஏனெனில் அவை மக்களை அவர்களின் வேரில் இருந்து விலக்கி வைக்கின்றன” என்றார்.
மேலும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் “தீண்டாமை, வேறுபாடுகள் மற்றும் சமத்துவமின்மை போன்ற இந்து சமூகத்தின் முக்கிய பிரச்சனைகள் முக்கியமாக மனதில் உள்ளன. இந்த பிரச்சனைகள் வேதங்களில் இல்லை.
பல தலைமுறைகளாக இந்த பிரச்சனைகள் நம் மனதில் இருந்து வருகின்றன, அவற்றின் தீர்வுகளும் நேரம் எடுக்கும். அவற்றை நம் மனதில் இருந்து அகற்ற நாம் மெதுவாக செயல்பட வேண்டும்” என்றார்.
பகவத்தின் கருத்துகளுக்கு பதிலளித்த RJD தலைவர் லாலு பிரசாத், PTI க்கு அளித்த பேட்டியில், பகவத்தின் கருத்துகளுக்குப் பின்னால் அவர்களின் (RSS) அசல் சிந்தனை உள்ளது. அவர்களின் ஆன்மா SC/ST மற்றும் OBC க்கு எதிரானது. அவர்களின் உள் கரு என்ன என்பது வெளியே வந்தது” எனத் தெரிவித்தார்.
இது மீண்டும் பீகாரில் இருந்து நிறைய எதிர்வினைகளைத் தூண்டியது. மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களான RJD, காங்கிரஸ், இந்துஸ்தான் அவாமி மோர்சா (HAM), RLSP மற்றும் இடதுசாரிக் கட்சிகள் BJP மற்றும் RSS-ஐ தாக்கினர் என்பாது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/