ஒடிசா சட்டப் பேரவைக்கான தேர்தல் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்ட நிலையில், மொத்தமுள்ள 147 இடங்களில் 78 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க முதல் முறையாக தனித்து ஆட்சியைப் பிடித்தது.
இந்நிலையில், ஒடிசாவின் முதல்வராக பொறுப்பேற்க போவது யார்? துணை முதல்வர் பொறுப்பு யாருக்கு கிடைக்கும்? என்கிற கேள்விகளுடன் ஒடிசா பா.ஜ.க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து, ஒடிசாவின் முக்கியமான பா.ஜ.க சட்டமன்றக் கட்சிக் கூட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் ஆகியோரை கட்சித் தலைமை பார்வையாளர்களாக அனுப்பியது.
இந்த நிலையில், நான்கு முறை கியோஞ்சார் எம்.எல்.ஏ-வாக இருந்த மோகன் மாஜி ஒடிசாவின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கேவி சிங் தியோ மற்றும் பிரவதி பரிதா ஆகிய இருவர் துணை முதல்வர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாளை புதன்கிழமை முதல்வராக பதவியேற்கவுள்ள பழங்குடியினத் தலைவரான மாஜியைத் தேர்ந்தெடுப்பதற்காக அதன் மாநில சட்டமன்றப் பிரிவு நேற்று செவ்வாய்க்கிழமை ஒரு கூட்டத்தை நடத்தியது.
இதனிடையே, புவனேஸ்வரில் உள்ள ஜந்தா மைதானத்தில் நாளை புதன்கிழமை நடைபெறும் கட்சியின் முதல் முதல்வர் மற்றும் அவரது அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க மூத்த தலைவர்கள் மற்றும் கட்சியின் முதல்வர்கள் கலந்து கொள்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“