Robert Vadra : லண்டனில் சொத்து வாங்கிய கருப்புப்பணப் பரிமாற்ற வழக்கில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவை 16-ம் தேதிவரை கைது செய்ய டெல்லி சிறப்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும் பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா சட்ட விரோத பணப்பரிமாற்றம் வழக்கில் சிக்கினார். லண்டனில் சுமார் 2 மில்லியன் பவுண்ட் மதிப்புடைய சொத்துகள் வாங்கிய விவகாரத்தால் கோடிக்கணக்கான பணம் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை, ராபர்ட் வதேரா மற்றும் அவரது நண்பரான மனோஜ் அரோரா மீது வழக்குப் பதிவு செய்தது.
மத்திய பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் ராபர்ட் வதேரா மற்றும் மனோஜ் அரோரா மீது வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், மனோஜ் அரோரா டெல்லி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மனோஜ் அரோராக்கு முன் ஜாமீன் அளித்து, பிப்ரவரி 6 ஆம் தேதி வரை அவரை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில், ராபர்ட் வதேராவும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்றே விசாரணைக்கு வந்த நிலையில், வதேராவின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
ராபர்ட் வதேரா வரும் 6ஆம் தேதி நடைபெறும் விசாரணைக்கு நேரில் வருவார் என்று அவரது வழக்கறிஞர் உறுதியளித்திருந்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வரும் 16-ம் தேதி ராபட் வதேராவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து, முன் ஜாமீன் வழ்ங்கியது.