நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று (18.7.18) தொடங்குகிறது.
இன்று முதல் ஆரம்பமாகும் இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் 10-ந்தேதி முடிகிறது. புதிதாக 18 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மழைக்கால கூட்டத்தொடரை திட்டமிட்டப்படி அமைதியாக நடத்தி முடிக்க டெல்லியில் நேற்று மத்திய அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைப்பெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பாஜக அமைச்சர்கள், நாடாளுமன்ற மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இந்த கூட்டத்தின் முடிவில் நாடாளுமன்றம் கடந்த முறை முடங்கியதுபோல இல்லாமல், இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு தருமாறு எதிர்க்கட்சியினரிடம் அமைச்சர் விஜய் கோயல் வேண்டுக்கோள் விடுத்தார்.
இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, தெலுங்கு தேசக்கட்சி பலரின் ஆதரவை திரட்டி வருகிறது. தெலுங்கு தேசம் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 16 எம்.பி.க்கள் உள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்ய குறைந்தபட்சம் 50 எம்பி.க்களின் ஆதரவு தேவை என்பதால், அக்கட்சித் தலைவர்கள், தெலங்கானா ராஷ்டிரிய சமீதி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை திரட்டி வருகின்றனர்.
மக்களவையில், பாஜவிற்கு 273 எம்பிக்களும், காங்கிரசிற்கு 48 எம்பிக்கள், அதிமுகவிற்கு 37 எம்.பிக்கள், திரிணாமுல் காங்கிரசிற்கு 34 எம்.பிக்கள், பிஜூ ஜனதா தளத்திற்கு 20 எம்பிக்கள் உள்ளனர். இக்கட்சிகளின் ஆதரவை பெறுவதன் மூலம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் வெற்றிபெற வைக்க முடியும் என்று தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அதே போல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு தேவையான பணிகளில் தற்போது காங்கிரஸ் கட்சியும் ஈடுபட்டுள்ளது.