ஓரேவா குழுமத்தின் இரண்டு மேலாளர்களை போலீசார் கைது செய்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்த பாலத்தின் பராமரிப்புக்காக மோர்பி நகராட்சி நிறுவனத்துடன் கையெழுத்திட்ட ஒப்பந்தம் ஆய்வுக்கு உட்பட்டது. இந்த நிறுவனம் 2008 முதல் பாலத்தை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
ஓரேவா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அஜந்தா மேனுஃபேக்ச்சரிங் பிரைவேட் லிமிடெட் கையொப்பமிட்ட சமீபத்திய ஒப்பந்தத்தின்படி, பாலத்தின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு, பாதுகாப்பு, டிக்கெட் வழங்குதல், சுத்தம் செய்தல் மற்றும் பணியாளர்கள் பணியமர்த்தல் உள்ளிட்டவற்றை நிர்வகிப்பதற்கான முழுப் பொறுப்பையும் 15 ஆண்டுகளுக்கு நிறுவனம் ஏற்றுக்கொண்டது.
2027-28க்குப் பிறகுதான், டிக்கெட் கட்டணத்தை ஆண்டுக்கு ரூ.2 உயர்த்த நிறுவனம் அனுமதிக்கப்படும் என்று ஒப்பந்தம் கூறுகிறது. தற்போது பெரியவருக்கான டிக்கெட் கட்டணம் ரூ. 15 ஆகும்.
ஆறு அடி சங்கிலியால் பிணைக்கப்பட்ட பாதுகாப்பு வேலியுடன் கூடிய 765 அடி நீளமுள்ள பாலம், இந்த ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி ஓரேவா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டதால், பல மாதங்கள் மூடப்பட்டது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் மதிப்பாய்வு செய்த ஒப்பந்தத்தின்படி, டிக்கெட் விலை மட்டுமே மோர்பி மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சியுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் எவ்வளவு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படலாம் என்பது குறித்த எந்த விவரங்களும் ஒப்பந்தத்தில் இல்லை.

மோர்பி முனிசிபாலிட்டியின் தலைமை அதிகாரி சந்தீப்சிங் ஜாலா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், பாலத்திற்கு ஃபிட்னெஸ் சான்றிதழ் இல்லை, ஏனெனில் பாதுகாப்பு ஆய்வு இன்னும் செய்யவில்லை. அக்டோபர் 26 ஆம் தேதி பாலத்தை மீண்டும் திறப்பதாக ஓரேவா குழுமம் நகராட்சிக்கு அறிவிக்கவில்லை.
இதுதொடர்பாக நகராட்சி ஏதேனும் ஷோ-காஸ் நோட்டீஸை வெளியிட்டதா என்று கேட்டதற்கு, எங்களுக்கு நேரம் இல்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு தான் இது நடந்தது. எங்களுக்கு அத்தகைய நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை என்று ஜாலா கூறினார்.
மேலும் நகராட்சி தலைவர் குசும் பர்மர் கூறுகையில்; நாங்கள் பாலத்தை முழுவதுமாக ஓரேவாவிடம் ஒப்படைத்தோம், எனவே, பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவர்களின் பொறுப்பாகும். பாலத்தை பராமரித்து இயக்குவதற்கான ஒப்பந்தத்திற்காக எங்களை அணுகியிருந்தனர்.

பாலம் நிர்வாகத்திற்கான வருமான-செலவு அனைத்தையும் ஒரேவா ஏற்கும். அரசு, அரசு சாரா, நகராட்சி அல்லது, மாநகராட்சி அல்லது வேறு எந்த நிறுவனமும் இதில் தலையிடாது என்று ஒப்பந்தம் திட்டவட்டமாக கூறுகிறது.
மோர்பியை தளமாகக் கொண்டு, நிறுவனர் ஓதவ்ஜி பட்டேலின் நான்கு மகன்களில் ஒருவரான ஜெய்சுக் படேல் என்பவரால் நிறுவப்பட்ட ஓரேவா நிறுவனம், கடிகார தயாரிப்பாளராக அறியப்படுகிறது, மேலும் இ-பைக்குகள் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக கருத்து கேட்க, நிர்வாக இயக்குனர் ஜெய்சுக் படேலுக்கு பலமுறை தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் அனுப்பியும் எந்த பதிலும் வரவில்லை.
2010 தேதியிட்ட மோர்பி நகராட்சி வெளியீட்டின்படி, பாலத்தின் மேல்தளத்தில் ஒரே நேரத்தில் 15 நபர்களை மட்டுமே அனுமதிக்கும் சட்டம் இருந்தது. ஆற்றின் கிழக்குக் கரையில் ரயில்வே பணிமனை இருக்கும் வரை அது நடைமுறையில் இருந்தது.
ஆனால், உயிரிழந்த மற்றும் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை விபத்து நடந்த போது பாலத்தில் 300 க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறுகிறது.
மக்கள் பாலத்தின் மீது நடக்கும்போது, அது ஊசலாடியது. எனவே ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே பாலத்தில் அனுமதிக்கப்பட்டனர். 1 ரூபாய் நகராட்சி கட்டணம் எடுக்கப்பட்டது, என்று வெளியீடு கூறுகிறது.
1960-61 இல் குடிமை அமைப்பு உருவாக்கப்பட்டபோது பாலம், மோர்பி நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. சமீபத்திய புதுப்பித்தலில், ஓரேவா அதன் மேற்கு முனையில் உள்ள பாலத்தின் பழைய நுழைவாயிலை மூடிவிட்டு, டிக்கெட் சாளரத்தின் வழியாக ஒரு புதிய பாதையை திறந்தது.

பாலத்தின் திறப்பு விழா வீடியோவில் ஜெய்சுக் படேல் பேசுகையில்; பழைய நாட்களில், தொழில்நுட்பம் குறைவாக இருந்தது, எனவே சில வகையான பொருட்களைப் பயன்படுத்த வேண்டியிருந்தது, ஏனெனில் இந்த பாலம் மரப் பலகைகளால் ஆனது… பொருளை உருவாக்க எங்கள் தேவைகள் மற்றும் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளை நிறுவனத்திற்கு வழங்கினோம்.
2001 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2007 ஆம் ஆண்டு ஏற்பட்ட சேதத்திற்குப் பிறகு திரங்காத்ராவில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு பழுதுபார்ப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது, அது ரூ 2 கோடி செலவில் 100 சதவீதம் புதுப்பிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
1858 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மும்பையைச் சேர்ந்த பொறியியல் நிறுவனமான ரிச்சர்ட்சன் மற்றும் க்ரூடாஸ் மூலம், இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுடன் பாலம் கட்டப்பட்டது. அப்போது குஜராத் பம்பாய் பிரசிடென்சியின் ஒரு பகுதியாக இருந்தது.
ஓரேவா குழுமத்தின் மேலாளர்களில் ஒருவரான தீபக் பரேக் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில்; மேலும் தகவலுக்காக நாங்கள் காத்திருக்கும் போது, பாலத்தின் நடுப்பகுதியில் உள்ள பலர் ஒரு வழியிலிருந்து மற்றொரு வழிக்கு மாற முயன்றதால் பாலம் இடிந்து விழுந்தது என்றார்.
2008 மற்றும் 2018 க்கு இடையில் பாலத்தை நிர்வகிப்பதற்கான ஒப்பந்தமும் ஓரேவா குழுமத்திடம் இருந்தது. ஆனால், டிக்கெட் கட்டணத்தில் நகராட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தொடர்பாக, 2008 ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கு, இது விண்ணப்பிக்கவில்லை.
பெரியவருக்கான டிக்கெட் விலை 10 இலிருந்து 15 ரூபாய் உயர்த்த வேண்டும் என்று அது விரும்பியது. அதனால் புதுப்பித்தல் பணி இழுபறியாகவே இருந்தது. ஆனால், 2018 முதல் 2022 வரையிலான இடைக்காலத்தில், ஓரேவா குழுமம் பாலத்தை தொடர்ந்து நிர்வகித்து, பராமரித்து வருவதாக நகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த விவகாரத்தில் மாநில அரசு அதிகாரிகள் தலையிட்டதையடுத்து, 2022-23 ஆம் ஆண்டிற்கான பெரியவர்களுக்கு டிக்கெட் விலையை 15 ரூபாயாக உயர்த்த நகராட்சி ஒப்புக்கொண்டதாகவும், ஓரேவா 2020 ஜூன் 3 அன்று நகராட்சியை அணுகி 15 ஆண்டுகளுக்கு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முன்மொழிந்ததாகவும் வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆகஸ்ட் 27, 2020 அன்று நடந்த கூட்டத்தில், நகராட்சியின் பொதுக் குழு, ஒரேவா முன்மொழிவுக்கு அனுமதி வழங்கியதாக பதிவுகள் காட்டுகின்றன. தொற்றுநோய்க்குப் பிறகு – பாலம் மூடப்பட்டபோது – இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் புதுப்பித்தல் மற்றும் பராமரிப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“