குஜராத் மாநிலம் மோர்பியில் பாலம் இடிந்து விழுந்ததில் 135 பேர் உயிரிழந்த நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்கிழமை (நவ.1) துயரம் நடந்த இடத்தை பார்வையிட்டார்.
அப்போது மீட்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் விபத்தில் சிக்கி காயமுற்றவர்களை மருத்துவமனை சென்று சந்தித்தார்.
தொடர்ந்து, நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் மோடி உயர்மட்டக் கூட்டத்துக்கும் தலைமை தாங்கினார். அப்போது விரைவான விரிவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காயமுற்றவர்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுடன் அதிகாரிகள் தொடர்பில் இருக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி பார்வையிட்டபோது, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, மாநில பாஜக தலைவர் சிஆர் பாட்டீல் ஆகியோர் உடன் சென்றனர்.
அப்போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடும் நபர்களையும் பிரதமர் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, மருத்துவமனை மற்றும் விபத்து நடந்த இடத்துக்குப் பிறகு, பிரதமர் மோர்பியில் உள்ள காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தை பார்வையிட்டார்.
பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 26 குடும்ப உறுப்பினர்களையும் அவர் சந்திக்க உள்ளார்.
135 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் (JhooltoPul) ஞாயிற்றுக்கிழமை மாலை இடிந்து விழுந்தது, பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகளுக்காக ஏழு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்ட பின்னர், மீண்டும் திறக்கப்பட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
இதையடுத்து, நகராட்சியால் பாலத்தை பராமரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட ஓரேவா குழுமத்தின் (அஜந்தா மேனுஃபேக்ச்சரிங் பிரைவேட் லிமிடெட்) இரண்டு மேலாளர்கள், டிக்கெட் குமாஸ்தாக்கள் இருவர், பாலம் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள இரண்டு ஒப்பந்ததாரர்கள் மற்றும் மூன்று பாதுகாப்புக் காவலர்கள் என 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil