குஜராத் மாநிலம் மோர்பி நகராட்சியில் உள்ள மச்சு ஆற்றின் மேல் உள்ள தொங்கு பாலம் நேற்று (அக்டோபர் 30) இடிந்து விபத்துக்குள்ளானது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த அக்டோபர் 26-ம் தேதி பாலம் புனரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது என்றும், ஆனால் நகராட்சியிடம் இருந்து பிட்னல் சான்றிதழ் (FC) பெறவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
குஜராத்தின் மோர்பி நகராட்சியில் மச்சு ஆற்றின் மேல் பழமையான தொங்கு பாலம் உள்ளது. 7 மாதங்களுக்கு முன் பழுது நீக்க மற்றும் புனரமைப்புக்காக மூடப்பட்ட பாலம் கடந்த அக்டோபர் 26-ம் தேதி குஜராத்தி புத்தாண்டு தினத்தன்று மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
இந்த ஆண்டு மார்ச் மாதம், பாலத்தை பராமரிக்க மற்றும் புனரமைக்க அரசு மூலம் ஒப்பந்தம் விடப்பட்டது. மோர்பியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இ-பைக்குகளை தயாரிக்கும் ஓரேவா குழுமம் (Oreva Group) அஜந்தா மேனுஃபேக்ச்சரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் அக்டோபர் 26-ம் தேதி பாலம் தனியார் ஒப்பந்ததாரரால் மீண்டும் திறக்கப்பட்டது. நேற்று 400-க்கும் மேற்பட்டோர் பாலத்தில் குவிந்துள்ளனர். விடுமுறை தினம் என்பதால் கூட்டம் அதிகமாக உள்ளது. இரவு 7 மணியளவில் பாலம் திடீரென இடிந்து விபத்துக்குள்ளானது. பாலத்தின் மீது இருந்த மக்கள் பலர் ஆற்று நீரில் மூழ்கினர். சிலர் பாலத்தில் தொங்கியபடி இருந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், மீட்பு குழுவினர் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து இரவு முழுவதும் மீட்பு பணிகள் நடைபெற்றது, 132 உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 177 பேர் உயிருடன் மீட்கப்படுள்ளனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதல்வர் பூபேந்திர பட்டேல் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்படும் என அறிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார். பல்வேறு மாநில அரசுகள் மீட்பு பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், நகராட்சியிடமிருந்து பாலத்திற்கு பிட்னல் சான்றிதழ் பெறாமல் பாலம் திறக்கப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
மோர்பி நகராட்சியின் மூத்த அதிகாரி சந்தீப்சிங் ஜாலா கூறுகையில், இந்த பாலம் மோர்பி நகராட்சிக்கு சொந்தமானது. ஆனால் ஒப்பந்தத்தின் படி 15 ஆண்டுகள் பராமரிப்புக்காக சில மாதங்களுக்கு முன்பு ஓரேவா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தநிலையில் நிறுவனம் எங்களுக்குத் தெரிவிக்காமல் பாலத்தை மீண்டும் திறந்துள்ளனர். எனவே, பாலத்தின் பாதுகாப்பு தணிக்கையை எங்களால் நடத்த முடியவில்லை என்று கூறினர். மேலும், மீண்டும் புனரமைக்கப்பட்ட பிறகு நிறுவனம் பிட்னல் சான்றிதழ் பெறவில்லை எனக் கூறினார்.
19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலம் பாரம் தாங்காமல் நேற்று இடிந்து விழுந்தது. விபத்து குறித்து ஓரேவா குழுமத்தின் செய்தித் தொடர்பாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது, பாலத்தின் நடுப்பகுதியில் ஒரே நேரத்தில் பலர் குவிந்துள்ளனர். இருபுறமும் மாறிச் செல்ல குவிந்தபோது பாலம் இடிந்து விழுந்தது என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil