உலகில், இந்திய இஸ்லாமியர்கள் சகல உரிமைகளுடன் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார். இந்தியாவின் அடிப்படை சாராம்சம் தொடர்பான கேள்விகள் எழும்போதெல்லாம் நாட்டின் அனைத்து மதங்களையும் சேர்ந்தவர்களும் ஒன்றாக குரல் கொடுக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
மேலும், தன்னுடைய சொந்த லாபங்களுக்காக வன்முறை மற்றும் பிரிவினைவாதத்தை பரப்புவர்கள் தான், அதன் பாதிப்புக்கு உள்ளாவர்கள் என்றும் தெரிவித்தார்.
முகலாய பேரரசர் அக்பருக்கு எதிரான போரில், மேவார் அரசர் மகாராணா பிரதாப் இராணுவத்தில் பல முஸ்லிம்கள் போராடியதை மேற்கோள் காட்டிய பகவத், இந்தியாவின் கலாச்சாரம் மீது தாக்குதல் தொடுக்கப்பட்ட போதெல்லாம், அனைத்து மதங்களையும் சேர்ந்தவர்கள் ஒன்றாக நின்றனர் என்பது தான் நமது வரலாறு என்றும் தெரிவித்தார்.
"சகல உரிமைகளுடன் மகிழ்ச்சியாக உள்ள பெரும்பாலான இஸ்லாமியர்கள் இந்தியாவில் மட்டுமே உள்ளனர்," என்று பகவத் கூறினார். ஒரு நாட்டின் மக்களை ஆட்சி செய்த ஒரு வெளிநாட்டு மதம் இன்றும் அங்கு உள்ளது என்பதற்கு உலகம் ஏதேனும் உதாரணம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.
“எங்கும் இல்லை. இது இந்தியாவில் மட்டுமே உள்ளது,”என்று அவர் மகாராஷ்டிராவை தளமாகக் கொண்ட‘ விவேக் ’என்ற இந்தி பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
இந்தியாவைப் போலன்றி, பாகிஸ்தான் பல்வேறுபட்ட மதங்களைப் பின்பற்றுபவர்களுக்கு உரிமைகளை வழங்கவில்லை. அது, இஸ்லாமிய மக்களுக்கு தனி நாடாக உருவாக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
"இந்தியாவில், இந்துக்கள் மட்டுமே தங்க முடியும் என்று நமது அரசியலமைப்பு கூறவில்லை. இது இந்து மக்களுக்கான நாடு; நீங்கள் இங்கே தங்க விரும்பினால், இந்துக்களின் மேன்மையை ஏற்க வேண்டும் என்ற எந்த கருத்தையும் நமது அரசியலமைப்பு ஏற்கவில்லை. இதுதான் நம் தேசத்தின் இயல்பு. அந்த உள்ளார்ந்த இயல்பு தான் 'இந்து' என அழைக்கப்படுகிறது,” என்று தெரிவித்தார்.
"நாட்டின் கலாச்சாரத்தைப் பற்றிய விழிப்புணர்வு, நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற பெருமைகளை உணரும் போதெல்லாம், அனைத்து மதங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் மறையும்," என்று பகவத் கூறினார்.
அயோத்தியில் உள்ள ராம் கோயில் பற்றி பேசிய பகவத், இது வெறும் சடங்கு நோக்கத்திற்காக அல்ல, தேசிய விழுமியங்களையும், அடையாளங்களையும் கொண்டாடும் நிகழ்ச்சி என தெரிவித்தார்.
"இந்த நாட்டின் மக்களின் மன உறுதியையும் மதிப்புகளையும் நசுக்குவதற்காக கோயில்கள் அழிக்கப்பட்டன என்பதே உண்மை. அதனால்தான் கோவில்களை புனரமைக்க நீண்ட காலமாக இந்து சமூகம் விரும்பியது. எங்கள் வாழ்க்கை சிதைந்தது, எங்கள் இலட்சிய ஸ்ரீ ராமன் ஆலயத்தை அழித்ததன் மூலம் நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம். நாங்கள் அதை மீண்டும் கட்டியெழுப்ப விரும்புகிறோம். எனவே இந்த பிரமாண்டமான கோயில் கட்டப்பட்டு வருகிறது, ”என்று தெரிவித்தார்.