அவரது வீட்டை "நிறுவன விருந்தினர் இல்லமாக" பயன்படுத்துதல் மற்றும் நிறுவனத்தின் மூலம் தனிப்பட்ட வீட்டுச் செலவுகளுக்கு நிதியளித்தல்; மிகையான மருத்துவப் பில்கள் மற்றும் பிற செலவினங்களைத் திரும்பப் பெறுதல்; அவரது ஓய்வுக்குப் பிறகும் தனிப்பட்ட கடவுச்சீட்டில் வெளிநாட்டுப் பயணத்திற்கான நீண்ட கால விசாக் கட்டணத்தை நிறுவனம் செலுத்துவது; அதிகாரப்பூர்வ காரை தவறாக பயன்படுத்துதல்.
மேற்கூறிய நிதி முறைகேடு மற்றும் பதவியை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளை அடுத்து, ரயில்வே அமைச்சகம் சனிக்கிழமை அமிதாப் பானர்ஜியின் பொதுத்துறை நிறுவனமான (PSU) இந்தியன் ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனின் (IRFC) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவியை பறித்தது.
இதையும் படியுங்கள்: ராகுல் யாத்திரையை கேலி செய்து அனிமேஷன் வெளியிட்ட பா.ஜ.க; விரக்தியின் வெளிப்பாடு என காங்கிரஸ் சாடல்
ஐ.ஆர்.எஃப்.சி என்பது ரயில்வேக்கு சொந்தமான ஒரு சிறந்த தரமதிப்பீடு, அட்டவணை A பொதுத்துறை நிறுவனம் (PSU) ஆகும். இது ரோலிங் ஸ்டாக் (கையிருப்பு) வாங்குவதற்கும், பின்னர், உள்கட்டமைப்பு சொத்துக்களை உருவாக்குவதற்கும் ரயில்வேக்கு நிதி அளிக்கிறது.
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் எம்.டி சதீஷ் அக்னிஹோத்ரியை அரசாங்கம் பதவி நீக்கம் செய்ததை அடுத்து, அமிதாப் பானர்ஜி மீதான நடவடிக்கை நெருங்கி வருகிறது.
விசில்ப்ளோவர் (ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருபவர்கள்) புகாரைத் தொடர்ந்து, ரயில்வேயின் விஜிலென்ஸ் விசாரணையில், இந்திய ரயில்வே கணக்குச் சேவையின் (ஐ.ஆர்.ஏ.எஸ்) அதிகாரியாக சிவில் பணியில் சேர்ந்த அமிதாப் பானர்ஜி, புது தில்லியின் கிரீன் பார்க் விரிவாக்கத்தில் உள்ள நான்கு படுக்கையறைகள் கொண்ட வீட்டை ஜனவரி 2020 இல், ஐ.ஆர்.எஃப்.சி “கெஸ்ட் ஹவுஸாக” மாதம் ஒன்றுக்கு ரூ.2 லட்சத்துக்கு குத்தகைக்கு எடுத்த பிறகு தனது குடும்பத்துடன் குடிபெயர்ந்தார்.
"விருந்தினர் இல்லத்தில்" மட்டுமே வசிப்பவர்கள் என்பதால், அமிதாப் பானர்ஜி குடும்பம் அவர்களின் அன்றாடச் செலவுகளான, மளிகைப் பொருட்கள், காய்கறிகள், உலர் பழங்கள், கணினி மவுஸ், சுகாதாரப் பொருட்கள், உடைகள், சாதனங்கள், ரீசார்ஜ் ஆகியவற்றை "விருந்தினர் இல்லத்தை" நடத்துவதற்காக நிறுவனம் செலுத்தும் செலவினங்களாகப் பெற்றனர்.
"உணவுப் பொருட்கள்" என விவரிக்கப்படும் செலவுகளைக் காட்ட ஆவணங்கள் உள்ளன, அவை பெரும்பாலும் பில் எண் இல்லாமல் உள்ளன. மேலும், அவை திருப்பி பெறுவதற்காக பட்டியலிடப்பட்டுள்ளன. நுகர்பொருட்களின் செலவுகள் மாதத்திற்கு சுமார் 30,000 ரூபாய்.
விருந்தினர் மாளிகை ஒவ்வொரு மாதமும், ஒரு நாளில், பலமுறை வாங்கிய "உணவுப் பொருட்களின்" செலவினங்களை காட்டியுள்ளது, பெரும்பாலும் ரூ. 1000க்கு கீழ் மற்றும் சில சமயங்களில் அதற்கும் அதிகமாக உள்ளது.
ஷாப்பர்ஸ் ஸ்டாப் பில் ரூ 9,000 உட்பட "இதர பொருட்கள்" என விவரிக்கப்படும் பல பில்கள் உள்ளன. ஆவணங்களின்படி பல "சிக்ஸ் டூ டென்", "சூப்பர் மார்ச்சே", "ரிலையன்ஸ் ஃப்ரெஷ்" போன்றவற்றின் பில்கள் உள்ளன.
"கெஸ்ட் ஹவுஸ்" ஒரு ஃப்ரிட்ஜ், டிவி, வாஷிங் மெஷின் போன்றவற்றை மாதத்திற்கு 70,000 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்துள்ளது, விஜிலென்ஸ் புகாரின்படி, இதற்கான வாடகைக் கட்டணங்கள் அந்தச் சொத்துக்களின் மதிப்பை விட அதிகமாக இருப்பதாகக் கூறியது.
விருந்தினர் இல்லம் என்று அழைக்கப்படுவதால், நிறுவனத்தின் செலவில் குடும்பத்திற்காக சமையலர், உதவியாளர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உட்பட 24 மணி நேர உதவியாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அமிதாப் பானர்ஜி சமீபத்தில் அந்த இடத்தை காலி செய்து கைலாஷ் காலனியில் உள்ள ஒரு வீட்டிற்கு தனது சொந்த குத்தகைக்கு மாறினார்.
ரயில்வேயால் விசாரிக்கப்படும் மற்றொரு குற்றச்சாட்டுகளில், அமிதாப் பானர்ஜி தனது அதிகாரப்பூர்வ பயணத்திற்காக 2019 இல் 10 ஆண்டு இங்கிலாந்து விசாவைப் பெற்றார், அதற்காக அவர் விசா கட்டணமாக ரூ 98,000 கோரினார். அமிதாப் பானர்ஜி 2023ல் ஓய்வு பெறவுள்ள நிலையில், அவரது தனிப்பட்ட (அதிகாரப்பூர்வமற்ற) பாஸ்போர்ட்டில் விலையுயர்ந்த 10 ஆண்டு விசாவுக்கான கட்டணத்தை நிறுவனம் ஏன் செலுத்தியது என்று விஜிலென்ஸ் விசாரணையில் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், மலிவான, குறுகிய கால விசா ஏன் எடுக்கப்படவில்லை என்றும் விஜிலென்ஸ் கேட்டது.
இந்த கட்டணத்தை அங்கீகரிக்கும் முன் நிறுவனத்திற்குள் கேள்வி எழுப்பப்பட்டதாக ஆவணங்கள் காட்டுகின்றன, ஆனால் நிர்வாக இயக்குனராக (CMD) இருந்த அமிதாப் பானர்ஜியே வெற்றி பெற்றார்.
"கூறப்படும் பல்வேறு முறைகேடுகளின் நிதி தாக்கம் அதிகமாக இருக்காது, ஆனால் அவை அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகின்றன மற்றும் தவறான நடத்தை, மற்றும் ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருக்கு நிச்சயமாக பொருந்தாது" என்று ரயில்வே அமைச்சகத்தின் உயர்மட்ட வட்டாரம் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளது. "அதனால்தான் அவர் தனது அதிகாரங்களிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையின் நியமனக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் அவரை நேரடியாக நீக்க முடியாது, அதற்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஆகலாம்” என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.
ரயில்வே அமைச்சகத்தின் சனிக்கிழமை உத்தரவில், நிறுவனத்தின் நிதி இயக்குனர் ஷெல்லி வர்மாவை, நிர்வாக இயக்குனரின் அதிகாரங்களை மூன்று மாதங்களுக்கு பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
மற்றொரு குற்றச்சாட்டுகளில், அமிதாப் பானர்ஜி கடந்த ஆண்டு ஏப்ரலில் கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது நோய்வாய்ப்பட்ட தனது தாயாருக்கு ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து ஆம்புலன்ஸை வாடகைக்கு எடுத்தார் மற்றும் நோயாளியை கிரீன் பூங்காவில் இருந்து ஜசோலாவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கட்டணமாக ரூ.1.54 லட்சத்தை செலுத்தியதாக ரயில்வேயிடம் இருந்து கட்டணத்தைத் திருப்பிப் பெற்றுள்ளார். இந்தச் செலவிற்கான பில் இல்லை என்று ஆவணங்கள் காட்டுகின்றன. அப்பல்லோவில் இருந்து வடக்கு ரயில்வே மருத்துவமனைக்கு நோயாளியை மாற்ற மற்றொரு ஆம்புலன்ஸ் 19,000 ரூபாய்க்கு அமர்த்தப்பட்டது. பதிவுகளின்படி, ஆக்ஸிஜனை நிரப்புவதற்கு ரூ. 10500 போன்ற கூடுதல் செலவுகள் அமிதாப் பானர்ஜிக்கு திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளன.
அமிதாப் பானர்ஜி அக்டோபர் 12, 2019 அன்று நியமிக்கப்பட்டார். அக்டோபர் 14 முதல் நவம்பர் 2, 2019 வரை தனிப்பட்ட வீட்டு உபயோகப் பொருட்களைக் கூட வாங்க அவரது அலுவலகம் ரூ.77,000 செலவிட்டதாக ஆவணங்கள் காட்டுகின்றன.
வாங்கிய பொருட்களில் சில: பால் பேனா: ரூ.2,290; போட்டோ ஷூட்டிங்: ரூ.8,000; ஷாப்பர்ஸ் ஸ்டாப் பொருட்கள் (துண்டுகள், சுவர் கடிகாரம், கண்ணாடி, காலி பாட்டில், சர்வீஸ் தட்டு மற்றும் கோஸ்டர்): ரூ. 33,462; துண்டுகள்: ரூ. 3,000; ஸ்மார்ட் பல்ப்: ரூ.14,612; தொழிலாளர் கட்டணம்: ரூ 6,000.
“அனைத்து குற்றச்சாட்டுகளும் அற்பமானவை. இது எனக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கை” என்று அமிதாப் பானர்ஜி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
குற்றச்சாட்டுகள் குறித்து, விஜிலென்ஸ் குற்றப்பத்திரிகையில் விருந்தினர் இல்லம் மற்றும் இங்கிலாந்து விசா ஆகிய இரண்டு விஷயங்களில் மட்டுமே உள்ளது என்று அமிதாப் பானர்ஜி கூறினார்.
“இயக்குனர்கள் விருந்தினர் மாளிகையாக வீட்டை குத்தகைக்கு விட இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதில் நான்கு படுக்கையறைகள் இருந்தன. நானும் என் மனைவியும் ஒரு அறையில் தங்கியிருந்தோம், மற்ற மூன்று அறைகளும் ஆளில்லாமல் இருந்தது. பெரும்பாலும் லாக்டவுன் காலம் என்பதால் வேறு யாரும் இல்லை, ”என்று அமிதாப் பானர்ஜி கூறினார்.
விருந்தினர் மாளிகையில் தங்குவதற்கு, மாதம் ரூ.27,000 கட்டணம் செலுத்தியதாக அமிதாப் பானர்ஜி கூறினார்.
“நாங்கள் தங்கியிருந்ததால் விருந்தினர் மாளிகை செலவுகளை காட்டியுள்ளது. நான் ஏன் விருந்தினர் மாளிகைக்கு ஒரு நாளைக்கு 900 ரூபாய் கொடுக்கிறேன்? என்று அமிதாப் பானர்ஜி கூறினார்.
மும்பையில் உள்ள கொங்கன் இரயில்வேயில் இருந்து டெல்லிக்கு வந்த பிறகு (முன்னர் அவர் நிதி இயக்குனராக இருந்தவர்) ரயில்வே அமைச்சகம் அவருக்கு வகை 5 அரசாங்க தங்குமிடத்தை அனுமதித்ததாக அமிதாப் பானர்ஜி கூறினார். ஆனால் வீடு எதுவும் காலியாக இல்லை.
“எனவே, ஐ.ஆர்.எஃப்.சி இயக்குநர்கள் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு, நிரந்தர நிறுவன விருந்தினர் மாளிகையாக ஒரு வீட்டை வாங்க முயற்சித்தோம். எதுவும் செயல்படாததால், நிறுவனம் குத்தகைக்கு சொத்தை எடுத்தது. இந்த நேரத்தில், எனக்கு கிடைக்க வேண்டிய வீட்டு மனைப்படி மாதம் ரூ.1.4 லட்சத்தை நான் எடுத்துக் கொள்ளவில்லை,'' என்று அமிதாப் பானர்ஜி கூறினார்.
விசா கட்டணம் குறித்து அமிதாப் பானர்ஜி, 10 ஆண்டு விசா என்பது விசா வழங்கும் அதிகார ஆணையத்தின் விருப்பப்படி உள்ளது என்றார். “விண்ணப்பதாரர் என்ன கேட்டாலும், விசா வழங்கும் அதிகார ஆணையம்தான், விசாவின் கால அளவை முடிவு செய்யும். எவ்வாறாயினும், குறுகிய விசாவிற்கும் 10 வருட விசாவிற்கும் உள்ள வித்தியாசம் மிகக் குறைவு. என்னிடம் சிவப்பு (அதிகாரப்பூர்வ) பாஸ்போர்ட் இல்லை, அந்த நேரத்தில் அதைப் பெற எங்களுக்கு நேரம் இல்லை, ”என்று அமிதாப் பானர்ஜி கூறினார்.
ஐ.ஆர்.எஃப்.சி நிர்வாக இயக்குனராக இருந்த அவர், நிதி திரட்டுவதற்காக "ரோட்ஷோ"களுக்காக மற்ற அதிகாரிகளுடன் சேர்ந்து இங்கிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பலமுறை பயணம் செய்ததாக ஆவணங்கள் காட்டுகின்றன. இந்த பயணங்களின் போது செய்யப்பட்ட செலவுகளை ரயில்வே விஜிலென்ஸ் கவனித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
மருத்துவக் கட்டணங்களில், “கொரோனா தொற்று நோயின் இரண்டாவது அலை”யின் போது நோய்வாய்ப்பட்ட தனது தாய் வென்டிலேட்டரில் இருந்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல “அவரது மக்கள்” தேவைப்படும் நேரத்தில் ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்ததாகவும் அமிதாப் பானர்ஜி கூறினார்.
தற்செயலாக, அவர் நிதி இயக்குநராக இருந்த ஹிந்துஸ்தான் பேப்பர் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் மூங்கில் கொள்முதல் தொடர்பாக சி.பி.ஐ.,யின் கடந்தகால விசாரணையில் குறிப்பிடப்பட்டவர்களில் அமிதாப் பானர்ஜியும் ஒருவர். இதையடுத்து சி.பி.ஐ குற்றப்பத்திரிகையின்றி இந்த விவகாரத்தில் மூடல் அறிக்கையை தாக்கல் செய்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.