மத்தியப் பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் மாவட்டத்தில் மூன்று வயது லாப்ரடோர் நாய்க் குட்டி யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அரசியல் செல்வாக்கு காரணமாக காவல்துறையினர் தனக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக நாய்க்குட்டியை உரமை கோரும் ஒருவர் குற்றம் சாட்டினார்.
சர்ச்சைக்கு தீர்வு காண, நாய்க்குட்டியின் டி.என்.ஏ அடிப்படையிலான பரிசோதனை அறிக்கைக்காக காவல்துறையினர் காத்திருக்கின்றனர்.
ஷாதாப் கான் என்ற பத்திரிகையாளரின் நாய்க் குட்டி ஆகஸ்ட் மாதத்தில் காணாமல் போனது. இதனையடுத்து, தனது செல்லப்பிராணியை சிவாரா என்பவர் தடுப்புக் காவலில் வைத்துள்ளதாக ஹோஷங்காபாத்தில் உள்ள டெஹாட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பிறகு, கான்ஸ்டபிள் ஒருவர் நாய்க் குட்டியை பத்திரமாக மீட்டார். மேலும், நாய்க் குட்டியை வாங்கிய சான்றிதழ், தடுப்பூசி போடப்பட்ட சீட்டுகள் உள்ளிட்டவற்றை நன்கு சோதித்து காவல்துறையினர் கானிடம் ஒப்படைத்தனர் .
அடுத்த நாள், இடார்சி நகரில் ஐந்து ஐந்து மாதங்களுக்கு முன்பு தான் வாங்கிய நாய்க் குட்டியை (டைகர்) கான்ஸ்டபிள் தவறுதலாக எடுத்துச் சென்றதாக சிவாரா காவல் துறையிடம் முறையிட்டார்.
இதனையடுத்து, கானின் ஆலோசனையின் பேரில், சர்ச்சைக்கு தீர்வு காண டி.என்.ஏ அடிப்படையிலான பரிசோதனைக்கு காவல்துறை ஒப்புக்கொண்டனர்.
காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஹேமந்த் ஸ்ரீவாஸ்தவ் கூறுகையில், “நாய்க்குட்டியை சொந்தம் கொண்டாட சிவாராவிடம் போதிய ஆவணங்கள் இல்லை என்ற காரணத்தினால், உரிமையாளர் இல்லை என்று உறுதியாக சொல்ல முடியாது. டி.என்.ஏ சோதனை அறிக்கை வரும் வரை நாங்கள் அந்த நாயை அவரிடம் திருப்பி அனுப்பியுள்ளோம்.
கான் இது குறித்து கூறுகையில் ” 'கோகோ' பிறந்த 22 நாளில் இருந்து, எங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. எனது மாமா பச்மாரி மலைப்பகுதியில் இருந்து வாங்கி எனக்கு வழங்கினார். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசிய அவர்,“ டி. என். ஏ சோதனைக்கு 30,000 ரூபாய் செலவு நான் தான் ஒப்புக் கொண்டேன். சொந்தமில்லாத ஒரு பொருளுக்காக யாராவது ஒருவர் இப்படி செலவு செய்வார்களா? கோகோ எனது குடும்பத்தின் ஒரு அங்கம். டி.என்.ஏ அறிக்கை வந்ததும், அனைவரையும் நீதிமன்றத்திற்கு இழுப்பேன்” என்று கான் தெரிவித்தார். அகில பாரத வித்தியார்த்தி பரிசத் (எபிவிபி) அமைப்பின் தலைவராக சிவாரா இருப்பதால் காவல்துறையினர் அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

சிவாரா இதுகுறித்து கூறுகையில், " கடந்த ஆகஸ்ட் மாதம் அனூப் ஷர்மா என்பவரிடத்தில் ரூ .5,000 செலுத்தி நாய்க் குட்டியை வாங்கிநேர்ன். கானின் நாய் தொலைந்து போயிருக்கலாம், அதற்காக, என்னுடைய டைகர் அவரது கோகோ என்று அர்த்தமல்ல" என்று தெறிவித்தார்.