ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியை இழந்த நிலையில் முதல் முறையாக செவ்வாய்க்கிழமை (ஏப்.11) வயநாடு சென்றார். அப்போது அங்கு அவர் பேசுகையில், “எம்.பி. என்பது ஒரு பதவி. அவர்கள் என் பதவியை பறிக்கலாம்.
என் வீட்டை எடுத்துக் கொள்ளலாம். என்னை சிறைப் படுத்தலாம். ஆனால் நான் வயநாட்டு மக்களை பிரதிநிதித்துவம் படுத்துவதை தடுக்க முடியாது” என்றார்.
மோடி சாதி பெயர் பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்தி கடந்த மாதம் மக்களவை உறுப்பினர் பதவியை இழந்தார்.
இந்த நிலையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச பா.ஜ.க. அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டையும் ராகுல் காந்தி முன்வைத்தார்.
தொடர்ந்து ராகுல் காந்தி, “நான் தொடர்ச்சியாக ஒரு விஷயத்தை பேசுகிறேன். என்னை தொடர்ச்சியாக தாக்குகிறார்கள். ஆனால் என் பேச்சை நிறுத்த முடியாது” என்றார்.
வயநாடு கல்பெட்டா பகுதியில் ராகுல் காந்தி சத்யமேவ ஜெயதே என்ற சாலை பேரணியை நடத்தினார். இந்தப் பேரணியில் பிரியங்கா காந்தியும் கலந்துகொண்டார்.
காங்கிரஸ் கட்சி கொடிக்கு பதிலாக தேசியக் கொடிகள் பயன்படுத்தப்பட்டன. இந்தப் பேரணியில் பேசிய பிரியங்கா காந்தி, “எனது சகோதரர் ஒட்டுமொத்த அரசாங்கத்தால் கருணையற்ற தாக்குதலுக்கு ஆளாகிறார்” என வேதனை தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “ஒட்டுமொத்த அரசும் கௌதம் அதானியை பாதுகாக்கிறது. அவர்களால் பதில் சொல்ல முடியாத கேள்வியை கேட்டதால் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
பாரதிய ஜனதா கட்சி ஜனநாயகத்தை தலைகீழாய் மாற்றிவருகிறது. பிரதமர் ஒவ்வொரு நாளும் ஆடையை மாற்றுகிறார். ஆனால் நாட்டில் ஏழைகளின் வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை.
சாமானியர்கள் வேலைக்காக போராட்டம் நடத்திவருகின்றனர்” என்றார். ராகுல் காந்தி தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஏப்.14ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“