கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்துவதற்காக பிரதமர் உள்பட அனைத்து எம்.பி.க்களின் சம்பளம், இதர படிகள் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றை ஒரு ஆண்டுக்கு 30% குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் நெருக்கடியை சமாளிப்பதற்காக, சமூகப் பொறுப்புடன் குடியர்சுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் மற்றும் அனைத்து மாநில ஆளுநர்கள் தானாக முன்வந்து ஊதியக் குறைப்பு முடிவெடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திங்கள் கிழமை தெரிவித்தார். மேலும், அவர் இந்த பணம் இந்திய ஒருங்கிணைந்த நிதிக்குச் செல்லும் என்று கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியச் சட்டம் 1954 திருத்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, 2020 ஏப்ரல் 1 முதல் ஒரு ஆண்டுக்கு அனைத்து எம்.பி.க்களின் கொடுப்பனவு மற்றும் ஓய்வூதியத்தை 30 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
இந்தியாவில் கோவிட்-19 பரவல் பாதிப்பை கருத்தில் கொண்டு 2020-21 மற்றும் 2021-22 ஆகிய ஆண்டுகளில் எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதிகளையும் (எம்.பி.எல்.ஏ.டி) தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. “2 ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி - ரூ.7,900 கோடி - இந்திய ஒருங்கிணைந்த நிதிக்குச் செல்லும்” என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் வீடியோ காணொலி மூலம் நடைபெற்றது. பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பிரதமரின் அலுவலக இல்லத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சரவையின் மற்ற உறுப்பினர்கள் தங்கள் அலுவலகங்களில் இருந்தும் வீடுகளில் இருந்தும் வீடியோ இணைப்பு மூலம் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி, அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்கு முன்பு, திங்கள்கிழமை காலை வீடியோ காஃபரன்ஸ் மூலம் அமைச்சர்கள் குழுவின் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.