மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி. திரைக்கு பின்னால் அதிகார மையமாக பார்க்கப்படும் இவர் வியாழக்கிழமை (செப்.29) அதிரடியாக தானேவில் உள்ள தேம்பி நாகா நவராத்திரி விழாவில் கலந்துகொண்டார்.
அப்போது அவருடன் உத்தவ் தாக்கரே வரவில்லை. அரசியலில் எப்போதுமே கோட்டை தாண்டாதவர் ராஷ்மி. இவரின் ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் ஒரு செய்தி இருப்பதாக கூறப்படும்.
இந்த நிலையில், தானேவில் உள்ள தேம்பி நாகா நவராத்திரி விழாவில் ராஷ்மி கலந்துகொண்டது அம்மாநிலத்தில் அரசியல் ரீதியாக சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
இந்த நவராத்திரி பங்கெடுப்பு மூலம் தாக்கரே தலைமையிலான சிவசேனா தொண்டர்களை உற்சாகப்படுத்த இவ்வாறு நடந்துகொண்டாரா? அல்லது ஷிண்டே முகாமுக்கு எச்சரிக்கை விடுக்கின்றாரா? என பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக பேசிய தாக்கரே ஆதரவு மூத்த சிவசேனா உறுப்பினர், “ தேம்பி நாகா நவராத்திரி விழாவில் தாக்கரே குடும்பத்தினர் கலந்துகொள்வது புதிதல்ல. இதில் அரசியல் இல்லை” என்றார்.
தேம்பி நாகா நவராத்திரி ஷிண்டேவின் அரசியல்வழிகாட்டியான ஆனந்த திகேவால் தொடங்கப்பட்டது. அவருக்கு பின்னர் ஷிண்டே இதனை நடத்திவருகிறார்.
இங்கு உத்தவ் தாக்கரேவின் மனைவி வருகை குறித்து பேசிய ஷிண்டே, “அனைவரும் சுதந்திரமாக நடந்து சென்று தேவியை வழிபட முழு உரிமை உண்டு” என்றார்.
இதற்கிடையில் தாக்கரே மனைவி ராஷ்மி, தேம்பி நாகா நவராத்திரி விழாவில் கண்களில் நீர் தழும்ப காணப்பட்டார். இது அங்கிருந்தவர்களை உணர்ச்சிப் பொங்க செய்தது.
உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். எல்ஐசியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்தவர். ராஜ் தாக்கரேவின் சகோதரி மூலம் இவருக்கு உத்தவ் தாக்கரே அறிமுகம் கிடைத்தது.
இருவரும் 1989ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் மறைவுக்கு பின்னர் கட்சியில் ராஜ் தாக்கரேவின் கை ஓங்கி காணப்பட்டது.
பால் தாக்கரேவின் அரசியல் வாரிசாக ராஜ் தாக்கரேவை மக்கள் பார்த்தனர். ஆனால் பின்னாள்களில் உத்தவ் தாக்கரே வேகமாக வளர்ந்தார். ராஜ் தாக்கரே பிரிந்து சென்றார்.
இதற்குப் பின்னால் ராஷ்மி இருந்தார் என்றும் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே வர வேண்டும் என்றும் நினைத்தார் என்றும் கூறப்பட்டது.
ராஷ்மி எப்போதும் தனது குடும்பத்திற்கு குறிப்பாக கணவர் மற்றும் இரண்டு மகன்களுக்கு அதிக முன்னுரிமை அளித்து வருவதாகவும், சேனாவின் பெண்கள் பிரிவின் சமூக நிகழ்ச்சிகளில் அவ்வப்போது தன்னை ஈடுபடுத்திக் கொள்வதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
கட்சி, சாம்னா பத்திரிகை உள்ளாட்சி என அனைத்து இடங்களிலும் ராஷ்மியின் உறவினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்ற குற்றஞ்சாட்டும் மறுபுறம் எழுகிறது.
ஆனால் இந்தக் குற்றஞ்சாட்டுகள் அடிப்படை ஆதாரங்கள் இல்லாதவை என்று சிவசேனா மறுத்துவருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietami