மலையாள இலக்கியம் மற்றும் மலையாள சினிமா உலகின் ஜாம்பவான் எம்.டி. வாசுதேவன் நாயர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 91. எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவுக்கு, உலக நாயகன் கமல்ஹாசன் இருதயபூர்வமான அஞ்சலி தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க: M T Vasudevan Nair, a giant of Malayalam literature and film, dies at 91
புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் மாரடைப்பு காரணமாக கோழிக்கோடுவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 91. எம்.டி., என்று பிரபலமாக அறியப்பட்ட எம்.டி.வி வாசுதேவன் நாயர் 70 ஆண்டுகளுக்கும் மேலான் நீண்ட வாழ்க்கையில் ஒரு அழியாத அடையாளத்தை விட்டுச் செல்கிறார்.
கேரள அரசு 2 நாட்கள் அரசு துக்கமாக அறிவித்துள்ளது. டிசம்பர் 26-ம் தேதி நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டங்கள் மற்றும் பிற அரசுப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கேரளாவின் மிகவும் பிரபலமான எழுத்தாளர்களில் ஒருவரான, மடத் தெக்கேபட் வாசுதேவன் நாயர் என்கிற எம்.டி. வாசுதேவன் நாயர் எம்.டி என்று பிரபலமாக அறியப்படுகிறார் - 70 தசாப்தங்களுக்கும் மேலான கலைத்துறை வாழ்க்கையில் இலக்கியம் மற்றும் திரைப்படத் துறைகளில் ஒரு அழியாத முத்திரையை விட்டுச் செல்கிறார்.
அவரது படைப்புகள் நிலா ஆற்றின் கரையோர விவசாய வாழ்க்கையிலிருந்து உத்வேகம் பெற்றன (பரத்புழா என்றும் அழைக்கப்படுகிறது), அங்கு அவர் தனது குழந்தைப் பருவத்தை உயர் சாதி நாயர் குடும்பத்தில் கழித்தார்.
அவரது எழுத்துக்கள் அக்காலத்தின் வாழ்க்கை, மொழி, சொற்பொழிவு மற்றும் கொந்தளிப்பு ஆகியவற்றை எதிரொலித்தது, இது வள்ளுவநாடு பிராந்தியத்தில் இந்து தாய்வழி குடும்பங்களின் மாற்றத்தைக் கண்டது, முன்பு வட கேரளாவின் சமஸ்தானமாக இருந்தது. அவரது நாவல்களான நாலுகெட்டு, அசுரவித் மற்றும் காலம் ஆகியவை அந்த பகுதியில் உள்ள தாய்வழி குடும்பங்களின் துயரங்களையும் இன்னல்களையும் கையாண்டன.
அவரது படைப்புகளில் உள்ள கதாபாத்திரங்கள் பெரும்பாலானவை இந்த கலாச்சார சூழலில் இருந்து எடுக்கப்பட்டவை, நுணுக்கமான விளக்கங்களுக்கு பெயர் பெற்றவை.
“கதாப்பாத்திரங்கள், அவர்களின் இக்கட்டான நிலைகள் - அதுதான் என்னை ஊக்குவிக்கிறது. அவர்கள் சந்திக்கும் குறுக்கு வழியில் அவர்கள் நம்மை தொந்தரவு செய்கிறார்கள்” என்று அவர் 2023-ல் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.
1959 ஆம் ஆண்டு தனது 23வது வயதில் தனது முதல் நாவலான நாலுகெட்டு நாவலுக்காக கேரள சாகித்ய அகாடமி விருது தொடங்கி பல்வேறு மாநில, தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளார். இவரது காலம் நாவல் அவருக்கு தேசிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது, 1969-ம் ஆண்டு கேந்திர சாகித்ய அகாடமி பரிசை வென்றது. அடுத்த மூன்று பத்தாண்டுகளில், அவர் 1962-ல் அசுரவித்து, மஞ்சு போன்ற முக்கியமான படைப்புகளை எழுதினார். 1964, 1969-ல் காலம், மற்றும் 1984-ல் ரண்டாமூசம். அவரது கடைசி நாவலான வாரணாசி 2002-ல் வெளியிடப்பட்டது.
எம்.டி. வாசுதேவன் நாயர் ஏழு படங்களை இயக்கியுள்ளார், 45 திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட அவரது திரைப்படங்கள் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றன - கலை மற்றும் வணிகத் திரைப்படங்கள் வெவ்வேறு தளங்களில் செலும் மலையாளத் திரைப்படத் துறையில் இது ஒரு அரிய சாதனை.
1965-ம் ஆண்டில், அவர் தனது முதல் திரைப்பட திரைக்கதையான முறப்பெண்ணுவை எழுதினார். 1973-ம் ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்ற நிர்மால்யம் திரைப்படத்தின் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமானார். மேலும், அவர் மூன்று பயணக் குறிப்புகள், ஒரு நாடகம் மற்றும் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
இருப்பினும், அவரை "வரையறுப்பது" அவரது புத்தகங்கள்தான் என்று அவர் தெளிவுபடுத்தியிருந்தார். அவரைப் பற்றி அவரது வார்த்தைகளில், “நான் முதலில் ஒரு எழுத்தாளர், உரை எனது முன்னுரிமை. நான் பத்திரிகையாளராக இருந்திருக்கிறேன்; அதேபோல், படங்களில் பணியாற்றி இருக்கிறேன். இலக்கியத்தை விட சினிமா எந்த வகையிலும் தாழ்ந்தது அல்ல, புத்தகங்கள்தான் என்னை வரையறுப்பது.” என்று கூறினார்.
எம்.டி. வாசுதேவ்ன் நாயரின் நாவல்கள் மற்றும் திரைப்பட திரைக்கதைகள் பாரம்பரிய கதைகள் மற்றும் கருப்பொருள்களை நோக்கி ஒரு புதிய அணுகுமுறையை எடுப்பதற்காக அறியப்படுகின்றன. மலையாள இலக்கியத்தின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் அவரது நாவலான ரண்டாமூசம் மகாபாரதத்தை பீமனின் பார்வையில் முன்வைத்தது.
பெரும்தச்சன் மற்றும் ஒரு வடக்கன் வீரகதா ஆகிய திரைப்படங்களின் திரைக்கதைகளிலும் இது தெளிவாகத் தெரிகிறது, இவை இரண்டும் நாட்டுப்புறக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட கதைகள், ஆனால், ஒரு புதிய கண்ணோட்டத்தில் சொல்லப்பட்டது.
1934 ஆம் ஆண்டு கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கூடலூர் கிராமத்தில் பிறந்த எம்.டி, பாலக்காட்டின் விக்டோரியா கல்லூரியில் வேதியியலில் பட்டப்படிப்பை முடிப்பதற்கு முன்பு தனது சொந்த கிராமத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார். இளங்கலைப் படிப்பின் போது, நியூயார்க் ஹெரால்டு ட்ரிப்யூன் நடத்திய உலக சிறுகதை போட்டியில் மலையாளத்தில் சிறந்த சிறுகதைக்கான விருதை வென்ற சிறுகதையை எழுதினார்.
அவரது குழந்தைப் பருவத்தில், அவர் தனது மூத்த சகோதரர் வீட்டிற்கு கொண்டு வந்த பத்திரிகைகளைப் படித்து வாசிப்பில் நுழைந்தார். உடல் உழைப்பு தேவைப்படும் விளையாட்டுகளை விளையாடுவதற்காக வெளியில் செல்லவில்லை என்றும், அதற்கு பதிலாக, எழுத்து உலகில் தன்னை மூழ்கடித்ததாகவும் அவர் முன்பு நினைவு கூர்ந்தார். 12 வயதில் கூட, பத்திரிகைகள் மற்றும் பருவ இதழ்களை ஆவலுடன் எதிர்ப்பார்த்ததாக அவர் கூறியிருந்தார்.
பட்டம் பெற்ற பிறகு, எம்.டி. வாசுதேவன் நாயர் பள்ளி ஆசிரியராக சிறிது காலம் பணியாற்றினார். 1956-ம் ஆண்டில், கோழிக்கோடுக்கு குடிபெயர்ந்த அவர், அங்கு மாத்ருபூமி இலக்கிய இதழில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, எம்.டி. வாசுதேவன் நாயர் அதன் ஆசிரியரானார், 1981 வரை அவர் அந்த பதவியை வகித்தார். அவர் கேரள சாகித்ய அகாடமியின் தலைவராகவும், துஞ்சன் நினைவு அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.
1995-ம் ஆண்டில், எம்.டி. வாசுதேவன் நாயருக்கு ஞானபீட விருதும், 2005-ம் ஆண்டில் பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டது. அவருக்கு 2022-ல், மாநில அரசால் வழங்கப்படும் மிக உயரிய குடிமகனுக்கான விருதான கேரள ஜோதி விருது வழங்கப்பட்டது.
எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவுக்கு, உலக நாயகன் கமல்ஹாசன் இருதயபூர்வமான அஞ்சலி தெரிவித்துள்ளார்.
ஒரு மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம்.
— Kamal Haasan (@ikamalhaasan) December 25, 2024
மலையாள இலக்கிய உலகின் மிகப்பெரும் ஆளுமை எம்.டி.வாசுதேவன் நாயர் நம்மைவிட்டுப் பிரிந்திருக்கிறார்.
மலையாளத் திரை உலகுக்கு நான் அறிமுகமான ‘கன்யாகுமரி’ படத்தின் படைப்பாளராக அவருடன் நான் கொண்ட சிநேகத்துக்கு இப்போது ஐம்பது வயது.…
நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவுக்கு அஞ்சலி தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “ஒரு மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம்.
மலையாள இலக்கிய உலகின் மிகப்பெரும் ஆளுமை எம்.டி.வாசுதேவன் நாயர் நம்மைவிட்டுப் பிரிந்திருக்கிறார்.
மலையாளத் திரை உலகுக்கு நான் அறிமுகமான ‘கன்யாகுமரி’ படத்தின் படைப்பாளராக அவருடன் நான் கொண்ட சிநேகத்துக்கு இப்போது ஐம்பது வயது. கடைசியாக, சமீபத்தில் வெளியான ‘மனோரதங்கள்’ வரை அந்த நட்பு தொடர்ந்தது.
மகத்தான நாவல்களை மலையாள இலக்கிய உலகுக்குக் கொடையாகக் கொடுத்ததோடு, வெற்றிகரமான திரைக்கதாசிரியராகவும் திகழ்ந்தவர். பத்திரிகைத் துறையிலும் தன் தடத்தை ஆழமாகப் பதித்த அவரது மறைவு திகைப்பையும் வேதனையையும் ஒருங்கே ஏற்படுத்துகிறது.
எழுத்தின் எல்லா வடிவங்களிலும் தனக்கான தனித்துவத்தோடு பங்களித்த, ஆளுமை மிக்க ஒரு மனம் ஓய்வு பெற்றிருக்கிறது. இது பேரிழப்பு. தென்னிந்திய இலக்கிய வாசகர்களையும் கலா ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தக்கூடியது.
மாபெரும் எழுத்துக் கலைஞனுக்கு என் இருதயப்பூர்வமான அஞ்சலி.” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.